இவங்க கிட்டேயிருந்து ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது!யூட்யூபிலேயே முச்சூடும் குடித்தனம் நடத்துபவர்கள் எருமைசாமி, மெட்ராஸ் சென்ட்ரல் போன்ற சேனல்களை அறியாமல் இருக்க முடியாது. யூத் ஏரியாவில் மிகவும் பரிச்சயமான பெயர்கள். ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இவர்களை ஃபாலோ செய்து வருகிறார்கள்.

எருமைசாமி டீமில் ஏராளமான குறும்படங்களை இயக்கிய ரமேஷ் வெங்கட் ‘ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். அவரிடம் பேசினோம்.‘‘இது காமெடி த்ரில்லர். யூ ட்யூபுலே எங்க அடையாளமே காமெடிதான்.

அதே ஃப்ளேவரோடு சினிமாவுக்காக த்ரில்லைரை சேர்த்து இந்த ஸ்கிப்ரிட்டை ரெடி பண்ணியிருக்கிறேன். ரசிகர்களை சிரிக்க வைக்க வேண்டும் என்பதுதான் எங்கள் இலக்கு. மெட்ராஸ் சென்ட்ரல், எருமைசாமி, டெம்பிள் மங்கி போன்ற சேனல்களில் கலக்கியவர்களே இந்தப் படத்தில் நடித்திருக்கிறார்கள்.

‘எருமைசாமி’ விஜய், ‘மெட்ராஸ் சென்ட்ரல்’ கோபி சுதாகர், ‘ஸ்மைல் சேட்டை’ ஆர்.ஜே.விக்னேஷ் லீட் ரோல் பண்ணுகிறார்கள். முக்கியமான சில கேரக்டரை சுற்றி நடக்கும் கதை இது. ‘சென்னை 28’ படத்துல யாரையும் ஹீரோ என்று சொல்ல முடியாது. எல்லாருக்கும் முக்கியத்துவம் இருக்கும். அந்த மாதிரி இதிலும் எல்லாருக்கும் முக்கியத்துவம் இருக்கும்.

இசை கெளசிக் க்ரிஷ். ஹிப்ஹாப் தமிழாவிடம் சவுண்ட் என்ஜினியராக வேலை பார்த்தவர். ‘மீசைய முறுக்கு’ படத்துல ‘என்ன நடந்தாலும்’ பாடலையும் ‘தனி ஒருவன்’ படத்தில் ‘கண்ணாலே கண்ணாலே’ பாடலையும் பாடியவர். ஒளிப்பதிவு ஜோஷ்வா பெரேஸ். ‘அறம்’
ஓம் பிரகாஷின் உதவியாளர்.

‘தப்பு தண்டா’ படத்தை தயாரித்த ‘கிளாப் போர்ட் புரொடக்‌ஷன்’ சத்தியமூர்த்தி தயாரிக்கிறார். தவிர, படத்துல முக்கியமான ரோல் பண்ணியிருக்கிறார். என்னுடைய குறும்படத்தைப் பார்த்துவிட்டு சத்யா சார் இந்தப் படத்தை இயக்கும் வாய்ப்பை கொடுத்தார். ஒரு கப் காப்பி குடிக்கிற டைமில் இந்தப் பட வாய்ப்பு எனக்கு கிடைத்ததுசொந்த ஊர் கோயமுத்தூர்.

சினிமா பண்ணப் போகிறேன் என்று சென்னைக்கு கிளம்பும்போது வீட்ல சப்போர்ட் பண்ணி அனுப்பி வைத்தார்கள். சென்னை வந்த சில மாதங்களிலேயே பட வாய்ப்பு கிடைச்சிடிச்சி. தயாரிப்பாளர் சைட்ல இருந்து எங்களுக்கு நல்ல சப்போர்ட் கிடைத்து வருகிறது. நல்ல அவுட் கொடுப்போம் என்ற நம்பிக்கை இருக்கு” என்று நம்பிக்கையோடு பேசுகிறார் ரமேஷ் வெங்கட்.

- சுரேஷ்ராஜா