சினிமாவாகிறது காதல் கட்டப் பஞ்சாயத்து!“பரத்துக்கு ஒரு ‘காதல்’ போல பிருத்விக்கு ஒரு ‘தொட்ரா’ பெரிய திருப்புமுனையாக இருக்கும்’’ என்று தன் ஹீரோவை புகழ்ந்து தள்ளுகிறார் இயக்குநர் மதுராஜ். இவர் பாக்யராஜின் சிஷ்யர்.

தவிர, பாபிசிம்ஹா நடித்த ‘சென்னை உங்களை அன்புடன் அழைக்கிறது’, ராம்கோபால் வர்மாவின் ‘சாக்கோ பார்’ உள்பட ஏராளமான படங்களை வெளியிட்டவர். இப்போது முதன்முறையாக ஸ்டார்ட், கேமரா, ஆக்‌ஷன் சொல்ல ஆரம்பித்துள்ளார். போஸ்ட் புரொடக்‌ஷன் பணியில் பிஸியாக இருந்தவரிடம் படத்தைப் பற்றி கேட்டோம்.

“கதை?”

“இன்று ரியல் எஸ்டேட் பிஸினஸ் போல சத்தமில்லாமல், வெளியே தெரியாமல் வளர்ந்து வருவதுதான் லவ் பிசினஸ். இவர்களின் டார்கெட்டே காதலர்கள் தான். காதலர்களைப் பிரித்து வைக்க வேண்டுமா, இல்லை சேர்த்து வைக்க வேண்டுமா? இரண்டுக்குமே பணம் வாங்கிக்கொண்டு ஆபீஸ் போட்டு பஞ்சாயத்து நடத்தும் கும்பல் நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது.

நானே இதை பல இடங்களில் கண்கூடாக பார்த்தபின் தான் இந்தக் கதையை உருவாக்கியுள்ளேன். இதற்கான ஆதாரங்கள் என்னிடம் நிறைய இருக்கின்றன. கிருஷ்ணகிரியை கதைக்களமாக எடுத்துக்கொண்டாலும், வட மாவட்டங்களில் நடைபெற்ற, தமிழ்நாட்டை உலுக்கிய இரண்டு பயங்கரமான உண்மை நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு இந்தப்படத்தை உருவாக்கியுள்ளேன்.”

“அப்படின்னா வடமாவட்டங்களில் தலைவிரித்தாடும் ஜாதி பிரச்சனைகளைப் பற்றித்தான் படம் பேசுகிறதா?”

“காதலில் ஜாதி பிரச்சனை மட்டுமே இல்லையே. உயர்ந்தவன் தாழ்ந்தவன், ஏழை பணக்காரன் என பணத்தை அடிப்படையாகக் கொண்டு காதல் உருவாகும்போது, அப்படிப்பட்ட காதல் இதுபோன்ற வியாபாரிகளிடம் சிக்கினால் என்ன ஆகும் என்பதை சொல்லியிருக்கிறேன். அப்படிப்பட்ட காதல் பஞ்சாயத்துகள் எதுவும் வராவிட்டால், தாங்களே இளைஞர்களுக்கு செல்போன், பணம், விலையுயர்ந்த ஆடைகளைக் கொடுத்து காதலிக்கத் தூண்டும் கும்பலும் இருக்கின்றனர். அவர்களில் சிலரையும் இந்தப்படத்தில் நடிக்க வைத்துள்ளோம்.”

“பிருத்வியை இந்தப் படத்திற்குள் கொண்டு வந்தது எப்படி?”

“இந்தக் கதையை நான் உருவாக்கியதுமே இதற்கு பிருத்வி பொருத்தமாக இருப்பார் என்பதையும் தீர்மானித்து விட்டேன். தயாரிப்பாளரிடம் இந்தக்கதையை சொல்வதற்கு முன்பே பிருத்வியிடம் பேசிவிட்டேன். அவரும் கதை கேட்டதி லிருந்து வேறு படங்களை கமிட் பண்ணாமல் என்னுடன் பல மாதங்கள் டிராவல் பண்ணினார்.

இந்தப் படத்தில் சண்டைக்காட்சிகள் தத்ரூபமாக இருக்கும். அந்தக் காட்சிகளில் சுமார் இருபது தடவைக்கும் மேலாக பிருத்விக்கு ரத்தக் காயம் ஏற்பட்டு இருக்கும். பரத்துக்கு ஒரு ‘காதல்’ போல பிருத்விக்கு இந்தப்படம் ஒரு திருப்புமுனையாக அமையும்.”
“பாரதிராஜா பாணியில் கதாநாயகியை நீங்கள் அறைந்து விட்டதாக ஒரு தகவல் கசிகிறதே?”

“இந்தப் படத்துக்காக நிறைய பேரிடம் ஆடிஷன் பண்ணினோம். அதில் செலக்டானவர்தான் வீணா. கேரள தேசத்து பொண்ணு. தமிழும் சரளமாக பேசக்கூடியவர். ஒருநாள் எமோஷனலான காட்சி ஒன்றை படமாக்கிக் கொண்டு இருந்தோம். ஆனால் அதன் சீரியஸ்னஸ் உணராமல் அவர் சிரித்தபடி ஜாலியாக இருந்ததால் கிட்டத்தட்ட 30 டேக்கிற்கு மேல் வாங்கினார். அதனால் ஒரு கட்டத்தில் கோபம் வந்து அவரை அடித்தும் விட்டேன். மற்றபடி என் ஹீரோயின் நடிப்புல சொக்கத் தங்கம்.”

“இங்கிருக்கும் இசையமைப் பாளர்களை விட்டுவிட்டு கன்னடத்தில் இருந்து இறக்குமதி செய்திருக்கிறீர்களாமே?”

“இசைக்கு ஏது சார் தமிழ், கன்னடம் என்றெல்லாம் மொழிபாகுபாடு? கன்னடத்தில் ‘ஆப்தமித்ரா-2’வுக்கு இசையமைத்த உத்தமராஜாவை இந்தப்படத்தின் மூலம் தமிழுக்கு அழைத்து வந்துள்ளேன். மொத்தம் நான்கு பாடல்கள். ஒரு தீம் சாங். ‘பக்கு பக்குங்குது’ என்ற பாடலை சிம்பு பாடியுள்ளார். இந்தப் பாடலை நானே எழுதியுள்ளேன். உண்மையிலேயே சிம்பு சாரை பாட வைக்கும் வரை எனக்கு ‘பக்கு பக்கு’ன்னு இருந்தது. ஆனால் ஒரு புது இசையமைப்பாளர் என ஒதுக்காமல், பாடல் பிடித்திருந்ததால் பெருந்தன்மையுடன் பாட ஒப்புக்கொண்டார்.”

“மற்ற டெக்னீஷியன்ஸ்?”

‘போக்கிரிராஜா’ படத்துக்கு ஒளிப்பதிவு செய்த ஆஞ்சி தான் நம்ம படத்துக்கும் ஒளிப்பதிவு பண்ணினார். எங்கள் படம் ஆரம்பித்த வேளையில் அவர் மற்றொரு தெலுங்குப் படத்தில் பிஸியாகிவிட மீதிப் படத்தை ஒளிப்பதிவாளர் செந்தில் படமாக்கினார். ‘ஆறாது சினம்’ உள்பட ஏராளமான படங்களுக்கு எடிட்டிங் பண்ணிய ராஜேஷ் கண்ணன் எடிட் பண்ணியிருக்கிறார். ‘உறியடி’ விக்கி நந்தகோபால் ஆக்‌ஷன் காட்சிகளை கம்போஸ் பண்ணியிருக்கிறார். J.S அபூர்வா புெராக்‌ஷன்ஸ் ஜெய் சந்திரா சரவணக்குமார் தயாரித்துள்ளார்.

புரொடக்‌ஷன் துறையில் பெண்களின் பங்களிப்பு அரிது. ஆனால் ஒரு ஆண் தயாரிப்பாளர் கிடைத்திருந்தால் கூட என்னால் இவ்வளவு சுதந்திரமாக படம் எடுத்திருக்க முடியுமா என்பது சந்தேகம். ஆனால் ஜெய் சந்திரா மேடம் கதைக்கு தேவையான விஷயங்களுக்கு நல்லா செலவு பண்ணுங்க. விஷுவல்ஸ் ரிச்சாக இருக்கணும்னு தினமும் சொல்லிக்கிட்டே இருப்பார்.

ஆனால் நான் கதைக்கு எது தேவையோஅது பண்ணினால் போதும் என்று காம்ப்ரமைஸ் பண்ணிக் கொள்வேன். சமீபத்தில் ரஷ் பார்த்த தயாரிப்பாளர், ‘நல்லா வந்திருக்கு, கங்கிராட்ஸ்’ என்று திருப்தியோடு வாழ்த்தினார். ஒரு அறிமுக இயக்குநருக்கு இதைவிட வேறு என்ன மகிழ்ச்சி கிடைத்துவிடும்?”

- சுரேஷ்ராஜா