இந்திரஜித்காதுலே பூ!

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் சூரியனிலிருந்து ஒரு துகள் பிரிந்து பூமியை வந்தடைகிறது. அந்த விண்கல்லில் அபூர்வ  மருத்துவ சக்தி இருப்பதாகவும், அதைப்  பயன்படுத்தினால் இந்தியாவை  400 ஆண்டுகளுக்கு  நோயற்ற நாடாக ஆக்கலாம் என்றும் அறியப்படுகிறது.

அதைத் தேடிக் கண்டுபிடிக்க, தொல்லியல் துறையைச் சேர்ந்தவர்கள் காடு, மலை, பள்ளத்தாக்கு, குகை என பல இடங்களிலும் உயிரைப்பணயம் வைத்து பயணம் செய்கிறார்கள். கல் கிடைத்ததா? அது நாட்டு நலனுக்குப் பயன்பட்டதா என்பது கதை.

நாயகன் இந்திரஜித்தாக வரும் கௌதம் கார்த்திக்  விளையாட்டுப்பிள்ளையாக அனைவரையும் ஈர்க்கிறார். பெரிய பெரிய சாகசங்களைக்கூட  சர்வசாதாரணமாகச் செய்து கைதட்டல் வாங்குகிறார்.

தன்னை சைட் அடிக்கும் கௌதமை பழிவாங்கும் காட்சியில் சபாஷ் வாங்குகிறார் சொனாரிகா. மற்றபடி அவருக்கு காட்சிகள் குறைவு.  விண்கல்லைத்தேடி அலையும் குழுவுக்கு உதவி செய்யும் நாயகி, அஷ்ரிதா ஷெட்டி படம் முழுக்க வந்து அழகு காட்டுகிறார்.

ஜங்கிள் சலீமாக வரும் எம்.எஸ். பாஸ்கர் வசனத்தாலும் மேனரிசத்தாலும் கலகப்பூட்டுகிறார். ‘ஹேப்பி’ என்கிற நாய் கதாபாத்திரமும் மனதில் நிற்கிறது. காட்டுக்குள் நடக்கும் ஜீப் சேசிங், அருவிகள், குகைக்காட்சிகள், விமானப்பயணம் என தொட்டது அனைத்தையும் துல்லியமாகப் படம்பிடித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் இராசாமதி.

கே.பி. இசையில் பாடல்கள்  கவனம் ஈர்க்கின்றன. பின்னணி இசை பிரமாதமாக மிரட்டுகிறது.   வி.டி .விஜயன் - எஸ்.ஆர். கணேஷ்பாபு இணைந்து செய்திருக்கும் படத்தொகுப்பு விறுவிறுப்பு. பெப்சி விஜயன் - ஸ்டண்ட் சிவா இணைந்து அமைத்திருக்கும் ஆக்‌ஷன் காட்சிகள் நிறைவானவை.

மலை தாண்டி, கடல் தாண்டிப் போய் புதையல் எடுக்கும் ஒரு காமிக்ஸ் கதைக்குள் ஆராய்ச்சி, மனிதநேயம், நாட்டுப்பற்று அனைத்தையும் இணைத்து கிராஃபிக்ஸ் உத்தியை நேர்த்தியாகக் கையாண்டு, பெரியவர்களும் சிறியவர்களும் விரும்பும் வகையில் படம் இயக்கியிருக்கிறார் கலா பிரபு.