தெனாலி மதன்பாப்டைட்டில்ஸ் டாக் 43

புத்தமதத்தில் மிக முக்கியமான சொற்றொடர் ஒன்று உண்டு. புத்தரை நீ வெளியில் எங்கேயாவது பார்த்தால் அவரைக் கொன்றுவிடு. If you happen to see Buddha kill him. அதன் விளக்கம் என்னன்னா, யாரைவது பார்க்கும் போது அவர் புத்தர் மாதிரியே இருக்கார் என்று சொல்லக் கேட்டு இருக்கிறோம். புத்தரின் மறுபிறவியாக இருப்பதற்கு புத்தர் போதிக்கவில்லை. உனக்குள் இருக்கும் புத்தரை வெளியே கொண்டு வருவதுதான் புத்தரின் போதனை. 

அதேபோல், சிலரை பார்க்கும் போது அவர் அப்படியே காந்தி மாதிரியே இருக்கார் என்போம். அப்படின்னா, மற்றவர்கள் காந்தி மாதிரி இருக்க முடியாதா என்பதுதான் கேள்வி. இன்னொருவருக்கு பட்டத்தைக் கொடுப்பதற்காக எந்த வேதங்களும், தலைவர்களும் போதிக்கவில்லை.அதுமாதிரிதான் தெனாலி. யார் இந்த தெனாலிராமன்?

மிகப் பெரிய அறிவாளி. ஆனால் தன் அறிவை பறைசாற்றும்விதமாக எப்போதும் தான் மிகச்சிறந்த அறிவாளி என்று வெளிப்படுத்தியதில்லை. அறிவோடு நகைச்சுவையையும் சேர்த்து மக்களின் வாழ்க்கையில் இரண்டறக் கலந்தவர்தான் தெனாலி. அவருடைய பேச்சை நகைச்சுவையாக மட்டும் பார்க்காமல் அந்த நகைச்சுவையோடு கலந்திருக்கும் ஆலோசனைகளை கடைப்பிடிக்கும் போது அவரைச் சார்ந்தவர்களுக்கு நன்மையை உண்டாக்கும்.

அதுபோல் எல்லோரிடமும் ஒரு தெனாலி உண்டு. அறிவும் நகைச்சுவையும் கலந்ததுதான் தெனாலிசம். Sense of humour இருந்தால் யாருடைய குறைகளையும் எதிரில் இருப்பவரின் மனம் நோகாமல் சுட்டிக்காட்ட முடியும். தன் மீது தவறு வைத்திருப்பவரும் அதை தப்பாக எடுத்துக் கொள்ளமாட்டார்.

உங்களுக்கு யாரிடமாவது காரியம் சாதிக்க வேண்டுமானாலும் அதை நகைச்சுவையோடு சொல்லும் போது போன வேலை அஞ்சு நிமிஷத்துல முடிந்துவிடும். அறிவோடு நகைச்சுவையையும் கலந்து பேசினால் அவர்களும் ஏற்றுக் கொள்வார்கள். அதே அறிவோடும் நகைச்சுவையுடன் உங்கள் சோகத்தை சொல்லும்போது நீங்கள் சிரித்துக்கொண்டே இருப்பீர்கள். எதிரில் இருப்பவர்களின் கண்களில் கண்ணீரை வரவழைக்க முடியும்.

ஏன்னா, நகைச்சுவை என்பது ஸ்பூன் மாதிரி. நீங்கள் சொல்லும் விஷயம் தேன் மாதிரி. இரண்டும் வாய்க்குள் போகும்போது ஸ்பூன் வெளியே வந்துவிடும். தேன் உள்ளே போய்விடும். அதுமாதிரி தான் நீங்கள் என்ன ஜோக் சொன்னாலும் சொல்ல வந்த விஷயம் அவருடைய மண்டைக்குள் போய்ச் சேர்ந்துவிடும். அது மாதிரிதான் நம் பேச்சு இருக்க வேண்டும். அதுதான் தெனாலித்தனமாக பேசும் முறை. 

உங்களுக்குள் இருக்கும் தெனாலியை அடையாளம் கண்டு கொண்டால் வாழ்க்கையில் எளிதாக நீங்கள் எதிர்நீச்சல் போடலாம். மிக முக்கியமான விஷயம், எதிர்நீச்சல் போடும் போது மனச்சோர்வு வந்துவிடக் கூடாது. ஏன்னா, பிரச்சனை இல்லாத மனிதன் உலகத்தில் கிடையாது.

எதிராளியைப் பார்த்து அவனுக்கு என்ன, நல்லாதானே இருக்கான் என்றால் அவன் தன்னிடம் உள்ள ஒரு பகுதியை மட்டும்தான் நமக்கு காட்டுவான். தேனைச் சுவைத்துவிட்டு தேன் இனிப்பு என்ற முடிவுக்கு வந்துவிட முடியாது. தேனடையிலிருந்து தேன் எடுப்பது எவ்வளவு சவாலான விஷயம், தேனீக்கள் எப்படி கொட்டும் என்பதைத் தெரிந்துவைத்திருந்தால்தான் தேனின் அருமை தெரியும்.  

அந்த வகையில் எதிர்நீச்சல் போடும்போது தெனாலி நமக்குள் இருந்தால் பயனளிக்கும். ஏன்னா, என் வாழ்க்கையில் என்னிடம் ஒரு தெனாலி இருந்ததால்தான் என்னால் எதிர்நீச்சல் போட முடிந்தது,எங்கள் வீட்டில் நான் எட்டாவது பிள்ளை. ரொம்பவும் கஷ்ட ஜீவனம் பண்ணுகிற குடும்பம். நான் சினிமாவுக்கு வருவதற்கு எந்தவித பேக்ரவுண்டும் கிடையாது.

எங்கள் பரம்பரையிலேயே யாரும் சினிமாவில் இருந்ததில்லை. சின்ன வயதில் நான் கிடார் கற்றுக்கொண்டேன். நான் எம்.எஸ்.விஸ்வநாதன் சாரிடம் வேலை பார்த்தேன். அதன் பிறகு இசையமைப்பாளனாக மாறினேன். நான் இசைத்துறைக்கு வந்த சமயத்தில் இப்போது உயரத்தில் இருக்கும் இசையமைப்பாளர்கள் எனக்குக் கீழே இருந்தார்கள்.

கிடாரிஸ்ட்டாக இருந்தபோது ஏராளமான டி.வி.சீரியலுக்கு இசையமைத்தேன். அந்த சமயத்தில் டி.வி.சீரியல்களில் என்னை நடிக்க கூப்பிட்டார்கள். ஆரம்பத்தில் நடிப்பதில் ஆர்வம் இல்லாததால் அந்த வாய்ப்ப்புகளை மறுத்தேன். ஒரு கட்டத்தில் நண்பர்களின் அன்புக் கட்டளைக்கு இணங்கி நடிக்க ஆரம்பித்தேன்.

என்னுடைய நடிப்பை கவனித்த இயக்குநர் கே.பாலசந்தர் ஒரு நாள் என்னை சினிமாவில் நடிக்க அழைத்தார். அவர் முதலில் என்னை அழைத்தபோது சாரி சார், எனக்கு சினிமாவில் நடிக்க ஆர்வம் இல்லை என்று சொல்லிவிட்டேன். அவர்தான் ஒரு படத்தில் மட்டும் நடி என்று சினிமாவில் நடிக்க வைத்தார்.

குட்டு வாங்கினாலும் மோதிரக் கையால் வாங்கணும் என்ற முதுமொழிக்கு ஏற்ப கே.பி. கையால் வாங்கிய குட்டு என்னை சுமார் 650 படங்களில் நடிக்க வைத்தது. இப்போது, ‘பட்டினப்பாக்கம்’, ‘ 50-50’, ‘நாகேஷ் திரையரங்கம்’, எஸ்.ஏ.சந்திரசேகர் சார் படம், ஷக்தி சிதம்பரம் சார் படம் என்று கைவசம் கணிசமாக பட வாய்ப்புகளை வைத்திருக்கிறேன். அதுக்கு காரணம் இயக்குநர் கே.பி.சாரின் அழைப்பு. இன்னொரு பக்கம் எனக்குள் இருக்கும் நகைச்சுவை உணர்வு.

என்னுடைய சிரிப்புக்கு காரணம் என் வாழ்க்கையில் நான் சந்தித்த மேடு பள்ளங்கள். எதிர்நீச்சல் போடும் போது சிரிப்பு ரொம்பவும் அவசியம். நடுவுல சில டி.வி.சீரியல்களை சொந்தமாக தயாரித்தேன். அதில் பெரும் நஷ்டத்தை சந்தித்தேன். நஷ்டம் வந்த பிறகும் என்னுடைய புத்திசாலித்தனமும் என்னுடைய நகைச்சுவை உணர்வும் தான் என்னை பிரச்சனைகளிலிருந்து வெளியே கொண்டு வந்தது.

வாழ்க்கையில் எதிர்நீச்சல் முக்கியம். அப்படி எதிர்நீச்சல் போடும் போது மகளிர் மட்டும்தான் மரக்கட்டை மாதிரி உங்களைக் காப்பற்ற முடியும். உதாரணத்திற்கு என் குடும்பத்தையே சொல்லலாம். எனக்குள் இருக்கும் தெனாலி அனுபவத்தை அடுத்த வரமும் சொல்கிறேன்.

தொகுப்பு: சுரேஷ்ராஜா
(தொடரும்)