சன்பிக்சர்ஸ் கலாநிதிமாறன் வழங்க, க்ளவுட் நைன் தயாரித்து, அஜித் நடித்திருக்கும் 50ஆவது படமான ‘மங்காத்தா’ அமர்க்களம் என்று அனைத்து தரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிகின்றன.
கெட்டவனாக நடித்து நல்ல பெயர் வாங்க முடியுமா? ‘உம்’ என்று வியக்க வைத்திருக்கிறது ‘தல’. 500 கோடி ரூபாய் பணத்தை கொள்ளையடிக்க அஜித் வகுக்கும் திட்டங்களும், அதை கைப்பற்றி, பறி கொடுத்த பின் அதைத் தேடி அலைவதும் பரபர விறுவிறு திரைக்கதை.
தம் அடிப்பதும் தண்ணி அடிப்பதும் தப்பு என்பார்கள். இந்தப் படத்தில் ‘தல’ செய்வதைப் பார்த்தால் அதையும் ஒரு ஸ்டைல் என்பார்கள். ‘ஏய், ஆ, ஊ, வாடா...’ என்றெல்லாம் காட்டுக் கத்தல் இல்லாமல் அமைதியாக வில்லத்தனம் காட்டி அசர வைக்கிறார் அஜித்.
த்ரிஷா ஒருவர்தான் நல்லவராக வருகிறார். காதல் காட்சிகளில் கெமிஸ்ட்ரி, பிசிக்ஸ் எல்லாம் செம ஒர்க்&அவுட். கவர்ச்சி காட்ட லட்சுமி ராயும், கலங்க வைக்க அஞ்சலியும் திருப்புமுனைக் காட்சிக்கு ஆண்ட்ரியாவும் வருகிறார்கள்.
அதிரடி போலீஸ் அதிகாரியாக அசத்துகிறார் அர்ஜுன். அப்ரூவரை போட்டுத்தள்ளும் காட்சியில் அவரும் அஜித்தும் ஆடும் நாடகம் தியேட்டரில் க்ளாப்ஸை அள்ளுகிறது.கேம்ப்ளிங் மன்னனாக பிச்சு உதறுகிறார் ஜெயப்பிரகாஷ்.கோமாளித்தனமான அறிவுஜீவியாக வருகிறார் பிரேம்ஜி.
மகத், அஸ்வின், வைபவ், அரவிந்த், பஞ்சு சுப்பு, விஜய் ஆனந்த் என அனைத்து கேரக்டர்களும் கவனத்தை ஈர்ப்பதாக உள்ளன.சக்தி சரவணனின் ஒளிப்பதி வில் சக்தி அதிகம்.
விதேஷ் அமைத்துள்ள ஆர்ட், ஹார்ட்டைத் தொடுகிறது.சில்வாவின் சண்டைக் காட்சிகள் உறைய வைக் கின்றன.
வாசுகி பாஸ்கரின் ஆடை யலங்காரம் அழகோ அழகு.வாலி, கங்கை அமரன், நிரஞ்சன் பாரதி எழுதியுள்ள பாடல்களில் ‘விளையாடு மங்காத்தா...’ உள்பட அத்தனை யும் இனிப்பு ரகம்.
அனுஷா தயாநிதி உள்பட அத்தனை பாடகர்களின் குரலால் தேன்வந்து பாயுது காதினிலே.
யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் பாடல்களும் பின்னணியும் முன்னணியில் நிற்கின்றன.விறுவிறு திரைக்கதையுடன் ஒரு பரபர படத்தை வழங்கி ‘தல’ ரசிகர்களிடம் பாராட்டுப் பெற்றுவிட்டார் இயக்குனர் வெங்கட்பிரபு.