தல யோடு உறவாடி..!



பல முயற்சிகளில் தோல்விகண்ட ரமேஷ் கண்ணாவுக்கு ‘தொடரும்’ படத்தை இயக்கும் வாய்ப்பு வந்தது. ராசியில்லாதவர் என்று சிலர் போட்டுக்கொடுத்ததை, காதில் போட்டுக்கொள்ளாத அஜீத், நடிக்க சம்மதித்தார். நாயகி தேவயானி. முதல்நாள் படப்பிடிப்புக்கான ஆயத்த வேலைகள் தொடங்கிய நேரத்தில், ரமேஷ் கண்ணாவுக்கு அழைப்பு வந்தது.

அழைத்தவர் இயக்குநர் விக்ரமன். ‘உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்’ படத்தின் இறுதிநாள் படப்பிடிப்பு. உன் சம்பந்தப்பட்ட காட்சிகளை எடுக்கவேண்டும். உடனே வா’ என்கிறார். பதறிப்போன ரமேஷ் கண்ணா பக்குவமாக எடுத்துச் சொல்லியும் இயக்குநர் கேட்கவில்லை. ‘இதோ வந்துவிடுகிறேன்’ என்று அஜீத்திடம் சொல்லிவிட்டு, படப்பிடிப்பு நடக்கும் இடத்துக்கு விரைந்து, நடித்துக்கொடுத்திருக்கிறார் ரமேஷ் கண்ணா. தனது படத்தின் படப்பிடிப்புத் தளத்துக்கு திரும்பும்போது அரை நாள் ஆகிவிட்டது. அதுவரை பொறுமை காத்து நடித்திருக்கிறார் அஜீத்.

வஸந்த் இயக்கத்தில் ‘ஆசை’ படத்தில் நடித்தார் அஜீத். அந்தப்படத்தில் உதவி இயக்குநராக இருந்தார் எஸ்.ஜே.சூர்யா. அவருக்கும் அஜீத்துக்கும் நல்ல புரிதல் இருந்தது. காலண்டர்கள் மாறின. ‘நீ ஒரு படம் பண்ணு டார்லிங்!’ என்று அஜீத் கேட்டுக்கொண்டபோது, எஸ்.ஜே.சூர்யாவிடம்  கதை இல்லை. இரட்டைவேடக் கதையில் நடிப்பதற்கு அஜீத் விரும்புகிறார் என்று கேள்விப்பட்ட எஸ்.ஜே.சூர்யா, அவருக்காகவே எழுதிய கதைதான் ‘வாலி’. அந்தப்படம் இரண்டு பேருக்கும் நல்ல பெயர் வாங்கித் தந்தது.

முதலில் ஒரு பைக், பின்னர் ஒரு கார் என சூர்யாவுக்கு பரிசளித்து மகிழ்ந்தார் அஜீத். கொஞ்ச நாள் பயன்படுத்தியபிறகு பைக்கை நண்பருக்கும், காரை அப்பாவின் நண்பருக்கும்  பரிசளித்தாராம் எஸ்.ஜே.சூர்யா.

‘வரலாறு’ படப்பிடிப்பு நடந்த நேரம். அதற்குமுன் அஜீத் ஒப்புக்கொண்ட படத்தின் படப்பிடிப்பை துவக்கி அஜீத்துக்கு  நெருக்கடி கொடுக்கிறார்கள். ‘வரலாறு’ படத்தை முடிக்க 15 நாட்கள் கால்ஷீட்  தேவை. புதிய படக்குழுவிடம் ஏழு நாட்கள் அவகாசம் கேட்கிறார் அஜீத். ‘ஏழு நாட்களில் எப்படி முடிக்க முடியும்’ என்று  குழம்பிப்போகிறார் கே.எஸ்.ரவிகுமார். பதினைந்து நாட்களில் நடிக்கவேண்டியதை ஏழு நாட்களில் இரவு பகலாக நடித்துக் கொடுத்திருக்கிறார் அஜீத். தன்னால் யாருக்கும் பாதிப்பு வரக்கூடாது என்கிற அவரது தொழில் அக்கறையையும்  மன உறுதியையும் சிலாகித்துக் கூறுகிறார் கே.எஸ்.ரவிகுமார்.

‘வேதாளம்’ படப்பிடிப்பின்போது முதல்நாளே தகவல் சொல்லி, கேரவனுக்குள் அழைத்து பிரியாணி விருந்து கொடுத்திருக்கிறார் அஜீத். அப்படியொரு பிரியாணியை இதுவரை சாப்பிட்டதில்லை என்கிறார் மயில்சாமி. ‘இவன் நல்லவனாக இருக்கிறானே, வரம் கொடுப்போம் என முடிவெடுத்து சம்பந்தப்பட்டவனைச் சந்திக்கிறார் கடவுள். உனக்கு மூன்று வரம் தருகிறேன்.

பசியால் வாடுகிறவர்களின் வயிற்றில் நீ கைவைத்தால் பசியாறிவிடுவார்கள். நோய் வந்தவர்களின் தலையில் நீ கைவைத்தால்  நோய் பறந்துவிடும். பிரச்னை வந்தவர்களின் நெஞ்சில் நீ கைவைத்தால்  பிரச்னை தீர்ந்துவிடும்’ என்கிறார் கடவுள். ‘எனக்கு இன்னுமொரு வரம் வேண்டும்’ என்கிறான் அந்த மனிதன். ‘என்ன வரம்?’. ‘இப்படியெல்லாம் செய்தது நான்தான் என்று யாருக்கும் தெரியக்கூடாது’ என்கிறான் அந்த மனிதன். தான் செய்யும் உதவி பிறருக்குத் தெரியக்கூடாது என்கிற அந்த மனிதனைப் போன்றவர்தான் அஜீத்’ என்று ஒரு நீதிக்கதை சொல்கிறார் மயில்சாமி.

- நெல்லை பாரதி