விட்டுக்கொடு,வெற்றிபெறு!



சரண் இயக்கிய ‘அமர்க்களம்’ படத்தில் நடித்தபோது அஜீத்துக்கும், ஷாலினிக்கும் காதல் மலர்ந்தது. இரு வீட்டார் சம்மதத்தோடு ஏப்ரல் 24, 2000 அன்று திருமணம் செய்துகொண்டார்கள்.

தன் கேரியரின் உச்சத்தில் இருந்தபோதும், திருமணத்துக்குப் பிறகு சினிமாவுக்கு முற்றிலுமாக முழுக்குப் போட்டார் ஷாலினி. அதன்பிறகு முழுமையான இல்லத்தரசியாகி அஜீத்தையும், குழந்தைகளையும் கவனமாக பார்த்துக் கொள்கிறார்.
ஷாலினி, ஷட்டில்காக் ஆட்டத்தில் கில்லாடி.

ஆரம்பத்தில் அஜீத்துக்கு இது தெரியாது. ஷாம்லி மூலமாக இதை அறிந்ததுமே, சென்னை திருவான்மியூர் வால்மீகி நகரிலுள்ள வீட்டில் ஷாலினி விளையாடுவதற்கென்றே சர்வதேசத் தரத்தில் ‘ஷட்டில் கோர்ட்’ அமைத்துக் கொடுத்து இன்ப அதிர்ச்சிக்கு உள்ளாக்கினார். அது மட்டுமின்றி எங்காவது இறகுப்பந்து விளையாட்டுப் போட்டி நடந்தால், அதில் ஷாலினி தவறாமல் பங்கேற்க வேண்டும் என்று தொடர்ச்சியாக ஊக்குவித்துக் கொண்டே இருப்பார்.

படப்பிடிப்பு இல்லாமல் ஓய்வாக இருக்கும் நேரத்தில் ஷாலினியோடு அஜீத்தும் ஷட்டில்காக் ஆடுவதுண்டு. இருவரும் ஆடும்போது இருதரப்பு நண்பர்களும் பார்வையாளர்களாக பங்கேற்று உற்சாகப்படுத்துவார்கள். அஜீத்தும், விளையாட்டுகளில் கை தேர்ந்தவர்தான். இருந்தாலும் தன்னை தன்னுடைய மனைவி தோற்கடிக்க வேண்டும் என்பதற்காக கொஞ்சம் அடக்கியே வாசிப்பார்.

வேண்டுமென்றே தன்னுடைய கணவர் தனக்காக விட்டுக் கொடுத்து விளையாடுவது ஷாலினிக்கும் தெரியும்.“விளையாட்டில் மட்டுமல்ல, வாழ்க்கையிலும் விட்டுக் கொடுத்து வாழ்ந்தால் எந்தப் பிரச்சினையும் வராது” என்பது அஜீத், தன்னுடைய ரசிகர்களுக்கு சொல்லும் உபதேசம்.

- தேவராஜ்