வைகை எக்ஸ்பிரஸ்
கொலை எக்ஸ்பிரஸ்
சென்னையிலிருந்து மதுரைக்கு செல்லும் வைகை எக்ஸ்பிரஸ் ரயிலில் இரண்டு இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழக்கிறார்கள். மற்றொரு இளம்பெண்ணுக்கு மூளைச்சாவு.
 இந்தக் குற்றங்களைச் செய்த கொலையாளி யாரென் பதை தடதடக்கும் எக்ஸ்பிரஸ் வேகத்தில் துப்பறிகிறார் ரயில்வே சிறப்புப் போலீஸ் அதிகாரியான ஆர்.கே.விசாரணையை பல்வேறு கோணங்களில் துப்பறியும் ஆர்.கே.வுக்கு, இந்தக் கொலைகளுக் கான அடிப்படைப் பின்னணியும், கொலைகளுக்குப் பின்னால் இன்னும் சிலர் இருக்கும் அதிர்ச்சித் தகவலும் தெரிகிறது. நீது சந்திரா மீதான கொடூரமான தாக்குதலுக்கு பின்னணியில் ஒளிந்திருக்கும் காரணமும் திகைக்க வைக்கிறது. இறுதியில் குற்றவாளி யார், அவருக்கு என்ன தண்டனை கிடைக்கிறது என்பது எதிர்பாராத க்ளைமாக்ஸ்.
பொருத்தமான கதையைத் தேர்ந்தெடுத்து நடிக்கும் நாயகர்கள் பட்டியலில் இருப்பவர் ஆர்.கே. இந்தப்படத்திலும் அந்த இடத்தைத் தக்கவைத்திருக்கிறார். கம்பீரத்தோற்றமும் கணீர் குரலும் ஏற்றுக்கொண்ட பாத்திரத்துக்கு எக்கச்சக்கமாக உதவுகிறது. நீது சந்திராவுக்கு இரட்டை வேடம். இரண்டுக்கும் வித்தியாசம் காட்டி நடிக்கமுடியும் என்று நிரூபித்திருக்கிறார். நடிகை இனியாவாகவே வருகிறார் இனியா. இனிமை. கோமல் சர்மாவும் சுஜா வாருணியும் கலர்புல்லாக கலக்குகிறார்கள். அர்ச்சனா அளவாக நடித்து பாராட்டுப் பெறுகிறார்.
இயக்குநர் ஆர்.கே.செல்வமணிக்கு நாயகன் ஆர்.கேவுக்கு நிகரான பில்டப். அதை நியாயப் படுத்தி நடித்திருக்கிறார். பண்பலை தொகுப்பாளர்களுக்கு சவால் விடும் வகையில் தட தட ரயிலில் லொட லொட டி.டி.ஆர் கேரக்டரில் எம்.எஸ்.பாஸ்கர்.கொலையாளியை ஒவ்வொரு முறை ஆர்.கே. நெருங்கும்போதும் ட்விஸ்ட்டுக்கு மேல் ட்விஸ்ட் கொடுத்து படம் பார்ப்பவர் களின் இதயங்களை எக்ஸ்பிரஸ் வேகத்தில் துடிக்கச் செய்திருக்கிறார் இயக்குநர் ஷாஜிகைலாஸ்.
எஸ்.எஸ்.தமனின் இசை படத்தின் பரபரப்புக்கு பக்கா பலம். ஒளிப்பதிவாளர் சங்கர் சஞ்சீவின் பணியில் எக்ஸ்பிரஸ் வேகம். வி. பிரபாகரின் நறுக் வசனங்கள் படத்தின் வேகத்துக்கு கைகொடுத்துள்ளது. ‘எல்லாம் அவன் செயல்’, ‘என் வழி தனி வழி’ ஆகிய தரமான அதிரடி த்ரில்லர் படங்களைத் தொடர்ந்து இந்தப் படத்திலும் மகத்தான வெற்றியை எட்டி ஹாட்ரிக் அடித்திருக்கிறார்கள் ஆர்.கே - ஷாஜி கைலாஷ் கூட்டணியினர்.
|