பாம்பு சட்டை



அநீதிக்கு எதிராக போராடும் இளைஞன்!

வாழ்க்கையில் செட்டில் ஆக போராட்டம் நடத்திவரும் பாபிசிம்ஹா, தன்னுடைய அண்ணனின் அகால மரணத்திற்குப் பிறகு அண்ணிக்கு நல்ல வாழ்க்கை அமைத்துத் தர முயற்சிக்கிறார். இதற்கிடையே கீர்த்தி சுரேஷோடு இன்ஸ்டன்ட் லவ். எல்லாம் சரியாக வரும் வேளையில் திடீரென கள்ளநோட்டு கும்பல் ஒன்றால் பாபிசிம்ஹாவின் வாழ்க்கை தடம் மாறுகிறது. அண்ணி பானுவுக்கு நல்ல வாழ்க்கை அமைத்துக் கொடுத்தாரா, காதலில் வெற்றி கண்டாரா என்பதே கிளைமேக்ஸ்.

பாபிசிம்ஹா வழக்கம்போல அந்தக்கால ரஜினியை நினைவு படுத்தும் நடிப்பில் தூள் கிளப்பியிருக்கிறார். ரொமான்ஸ் காட்சிகளில் குறும்பான அவரது கண்கள் கை கொடுக்கின்றன. ஹோம்லி லுக்கில் கீர்த்தி அவ்வளவு அழகு. அவரது டிரேட் மார்க் சிரிப்புக்கு ரசிகர்களிடம் அவ்வளவு ஆரவாரம். அண்ணியாக பானு, பாந்தமான நடிப்பை வழங்குகிறார்.

வில்லனாக மிரட்டும் கே.ராஜன், புரோக்கராக வரும் ‘ஜோக்கர்’ சோமசுந்தரம், மொட்டை ராஜேந்திரன், சார்லி என்று அத்தனை பேருமே கச்சிதமாக நடித்திருக்கிறார்கள். அஜேஷ் அசோக்கின் இசையும், வெங்கடேஷின் ஒளிப்பதிவும் படத்துக்கு பலம்.முதல் படத்திலேயே சாமானிய மக்களின் பிரச்னைகளை கண்ணியமாகச் சொல்ல முயற்சித்திருக்கிறார் டைரக்டர் ஆடம் ஜான்சன்.