அடுப்பு ஊதும் பெண்களுக்கு படிப்பு வேண்டாமா?



‘அம்மணி’, ‘இறுதிச் சுற்று’ போன்ற பட வரிசையில் பெண்களின் பெருமை பேசும் படமாக தயாராகியுள்ளது ‘இலை’.ஸ்வாதி நாராயணன் நாயகியாக நடித்துள்ளார். எதிர் நாயகனாக சுஜீத் ஸ்டெபானோஸ் நடித்துள்ளார். கன்னட நடிகர் கிங்மோகன், மலையாள நடிகை தேவி என மொழிக்கு ஒரு நட்சத்திரம் நடித்துள்ளார்களாம்.

ஆரல்வாய்மொழி, சாலக்குடி, திண்டுக்கல், தேனி போன்ற பகுதிகளில் படப்பிடிப்பு நடந்துள்ளது. சந்தோஷ் அஞ்சல் ஒளிப்பதிவு செய்கிறார். இசை விஷ்ணு வி.திவாகரன், வசனம் ஆர்.வேலுமணி.‘‘வாழ்க்கையில் சாதிக்க நினைக்கும் ஒரு பெண்ணின் போராட்டம்தான் படத்தோட ஒன்லைன் ஸ்டோரி.

இது 1991ல் நடக்கும் கதை. அந்த ஊரில் பெண் பிள்ளைகளைப் படிக்க வைக்கக்கூடாது என்று ஊர்க் கட்டுப்பாடு இருக்கிறது. அந்த ஊரில் வசிக்கும் நாயகிக்கோ படித்து வாழ்வில் உயர வேண்டும் என்று கனவு. ஆனால் ‘அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு?’ என்று பெற்ற தாய் மட்டுமல்ல, அவளை மணந்துகொள்ளக் காத்திருக்கும் தாய்மாமனும் குறுக்கே நிற்கிறார்.

ஆனால் நாயகியின் அப்பாவோ மகளுக்கு ஆதரவாக இருக்கிறார். நாயகிக்கு வருகிற தடைகள் அவள் தேர்வு எழுத முடியாத அளவுக்குக் குறுக்கே நிற்கின்றன. தடைகளை மீறி அவள் தேர்வு எழுதினாளா இல்லையா என்பதே கதை. பெண்ணியம் சார்ந்த கதையாக மட்டுமில்லாமல் கமர்ஷியல் படங்களில் இருக்கும் காதல், காமெடி போன்ற அனைத்து அம்சங்களும் கச்சிதமாக இருக்கும்’’ என்கிறார் இயக்குநர் பினிஷ் ராஜ்.

- எஸ்