கிசுகிசு எழுதிய பத்திரிகையாளரை சாட்டையால் விளாசிய நடிகை!



ஹீரோயினிஸம்

‘கபாலி’ ஹீரோயின் ராதிகா ஆப்தேவின் துணிச்சலைப் பற்றி நமக்குத் தெரியும். சாந்தா ஆப்தே?தெரிந்திருக்க வாய்ப்பு குறைவுதான். எழுபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு எவ்வித பின்புலமும் இன்றி தனியாக சினிமாவில் எதிர்நீச்சல் போட்டு கோலோச்சியவர்.

1916-ஆம் ஆண்டு மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒரு குக்கிராமத்தில் பிறந்தவர். அப்பா, ரெயில்வே பணியாளர் என்பதால் நகர்ப்புறத்துக்கு இடம்பெயர வேண்டி யிருந்தது. சிறுவயதிலேயே சாந்தாவுக்கு இசை என்றால் ஈர்ப்பு. மகளின் ஆசைக்கு தடை போடாமல் அவரை முறைப்படி சங்கீதம் படிக்க வைத்தார் அவரது அப்பா.

சங்கீதம் கற்றுத் தேர்ந்து பெரிய பாடகியான சாந்தாவுக்கு சினிமா வாய்ப்பு தேடி வந்தது. அந்தக் காலத்தில் ஒரு நடிகை அழகாக இருந்தால் மட்டும் போதாது. குரல் வளமும் இனிமையாக இருக்க வேண்டும், பாடத் தெரியவேண்டும். இத்தனை தகுதிகளும் இருந்ததால்தான் சாந்தா ஆப்தே நடிகையானார்.ஆரம்பத்தில் சாந்தா நடித்த படங்களில் அவர் அவ்வளவாக பேசப்படவில்லை.

ஆனால், இயக்குநர் சாந்தாராம் இயக்கிய ‘அமர்ஜோதி’, இவரது வாழ்க்கையில் வெளிச்சத்தைக் கொண்டுவந்தது. தமிழில் பானுமதியைச் சொல்லுவதைப் போல பாலிவுட்டில் சாந்தாவைத்தான் குறிப்பிடுவார்கள். இவர் செட்டுக்கு வந்தாலே தயாரிப்பாளர், இயக்குநர் உட்பட அத்தனை பேரும் எழுந்து நின்று வணங்குவார்களாம்.இயக்குநருக்கே தன்னை எப்படி இயக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுப்பார். தயாரிப்பாளருக்கு வீண்செலவு வைக்காமல் காட்சியை அமைப்பது எப்படி என்று டிப்ஸ் கொடுப்பார். அதிவேகமாக கார் ஓட்டுவது, குதிரையில் உலா வருவது, பைக் ரைடிங் என்று அந்தக் காலத்தில் சாந்தா ஆச்சரியங்களை அள்ளிக் கொடுப்பவராக இருந்தார். எனவே, இவரைக் கண்டாலே பாலிவுட்டில் இருந்தவர்களுக்கு பயங்கலந்த மரியாதை இருந்தது.

ஒருமுறை பிரபாத் ஸ்டுடியோ இவரிடம் போட்ட ஒப்பந்தத்தை மீறியது. அதைக் கண்டித்து தன்னந்தனி மனுஷியாக ஸ்டுடியோவுக்குள் நுழைந்து போராட்டம் நடத்தினார். தொழிலாளர்களும் சாந்தாவுக்கு ஆதரவாக கைகோர்க்க, வேறுவழியின்றி ஸ்டுடியோ அதிபர்கள் இவரிடம் பணிந்தார்கள்.
ஒருமுறை குதிரை ஓட்டிக் கொண்டிருந்தபோது, ‘பிலிம் இந்தியா’ பத்திரிகையில் இவரைப் பற்றி ஆபாசமாக எழுதப்பட்ட கிசுகிசுவைக் காட்டினார்கள். அப்படியே குதிரையில் ‘பிலிம் இந்தியா’ அலுவலகத்துக்குப் போனார். அந்தக் கட்டுரை எழுதியவரை கையில் வைத்திருந்த சாட்டையாலேயே விளாசினார்.

பாலிவுட்டிலிருந்து தமிழ் சினிமாவுக்கு இறக்குமதி செய்யப்பட்ட முதல் நடிகை சாந்தா ஆப்தேதான். அவரைப் பற்றி ஏற்ெகனவே அறிந்திருந்ததால் தமிழ் தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் அவரை தமிழ்ப் படத்தில் நடிக்கவைக்க தயங்கிக் கொண்டிருந்தார்கள். இயக்குநர் ஒய்.வி.ராவ்தான் தான் நடித்து இயக்கிய ‘சாவித்ரி’ படத்தில் சாந்தாவை நடிக்க வைத்தார்.

தான் நடிக்கும் படத்தில் தானே பேசவேண்டும், தானே பாடவேண்டும் என்கிற நிபந்தனையோடு தமிழுக்கு வந்தார். எனவே, படப்பிடிப்பு தொடங்கு வதற்கு ஓராண்டு முன்பே ஓர் ஆசிரியரை வைத்து தமிழ் கற்றார். தமிழில் பாடுவதற்கு பயிற்சிகளும் எடுத்துக் கொண்டார்.

‘சாவித்ரி’ படத்தில் எட்டு பாடல்களை பாடி, அருமையாக நடித்தார். அதன் பின்னர் ஏனோ அவரை தமிழ் சினிமா பயன்படுத்திக் கொள்ளவில்லை. ஒருவேளை பத்திரிகையாளரை அவர் சவுக்கால் விளாசிய சேதியை இங்கே அப்போதே அறிந்திருப்பார்களோ என்னவோ?

- மீரான்