வைகை எக்ஸ்பிரஸ் வசனகர்த்தா வி.பிரபாகர்



டைட்டில்ஸ் டாக் 12

ரயிலை பிடிக்காது என்று சொல்பவர்கள் யாராவது இருக்கிறார்களா என்ன?

நம்மைப் பொறுத்தவரை ரயில் என்பது வெறுமனே போக்குவரத்துக்கு உதவும் வாகனம் அல்ல. அது நினைவுகளின் வேடந்தாங்கல். ஒவ்வொரு ரயில் பயணமும் ஒவ்வொரு அனுபவமாக நம்முடைய மூளையில் எப்போதும் பதிந்துள்ளது. அதிலும், சினிமாக்காரனாக நான் ரயிலை மறக்கவே முடியாது.கல்லூரியில் படிக்கும்போது முதன்முதலாக ஒரு நாடகத்துக்கு கதை எழுதினேன்.

மூளையை கசக்கிப் பிழிந்து நான் எழுதியிருந்த அந்த ஸ்க்ரிப்ட் ரயிலில்தான் தொலைந்து போனது. கைவசம் நகலும் இல்லை. எனவே மீண்டும் எழுத உட்கார்ந்தேன். திரும்ப எழுதிய ஸ்க்ரிப்ட் எந்த குறைபாடும் இல்லாமல் விறுவிறுப்பாக அமைந்தது. ஒருவேளை ரயிலில் முதல் ஸ்க்ரிப்ட் தொலையாமல் இருந்திருந்தால் நான் அவ்வளவு சிறப்பாக எழுதியிருக்க முடியாது என்று தோன்றும். அந்த நாடகம் பெரிய வெற்றியை எட்ட, நான் மனமார ரயிலுக்குதான் நன்றி சொன்னேன்.

‘மண்ணுக்குள் வைரம்’ என்றொரு படம். சிவாஜி சார் நடித்த படம். மனோஜ்குமார் இயக்கம். நான் அந்தப் படத்தில் உதவி இயக்குநராக வேலை பார்த்தேன். வெளியூர் படப்பிடிப்புக்காக எங்கள் எல்லோருக்கும் ரயில் டிக்கெட் பதிவு செய்யப்பட்டிருந்தது.

அப்போது கடைசி நேரத்தில் படக்குழுவைச் சேர்ந்த நான்கு பேர் முன்பதிவு செய்யப்படாத டிக்கெட்டோடு எங்கள் பெட்டியில் ஏறிவிட்டார்கள். ரயில் வேகம் எடுக்க ஆரம்பித்தது. ரொம்ப தூரம் போனபிறகும் டிக்கெட் பரிசோதகர் எங்கள் பக்கமே வரவில்லை. அவருக்கு விஷயம் தெரியாது என்று நாங்கள் நிம்மதியடைந்த வேளையில், திடீரென்று வந்தார்.

“நீங்க சினிமாக்காரங்கன்னு தெரியும். டைமுக்கு ஷூட்டிங்கில் கலந்துக்கணும்னு சொல்லிதான் கண்டுக்காம விட்டுட்டேன். இனிமே இதுமாதிரி பண்ணாதீங்க” என்று அக்கறையாக பேசினார். அவர் சிறுவயதில் சினிமா ரசிகராக இருந்து, சினிமாவில் நடிப்பதற்காக கோடம்பாக்கத்தில் சுற்றியவராம். சினிமாவில் வாய்ப்பு கிடைக்காத நிலையில் அரசுவேலை கிடைத்து ரயில்வேக்கு வந்துவிட்டதாக அவர் கதையை சொன்னார்.

இத்தனை ஆண்டுகள் கழித்தும் அந்தப் பயணத்தில்  இருந்த  எல்லாருக்குமே இதுவரை அந்த டிக்கெட் பரிசோதகரின் கதை அப்படியே நினைவில் இருக்கிறது. நாங்கள் சினிமாக்காரர்கள் என்கிற ஒரே காரணத்துக்காக எங்களுக்கு அன்று கிடைத்த மரியாதை, அவ்வளவு சிலிர்ப்பை ஏற்படுத்தியது.

பிரகாஷ்ராஜ் நடித்த ஒரு தெலுங்குப் படம். தெலுங்கில் ‘வீடு சாமன்யடு காது’ என்ற பெயரிலும், தமிழில் ‘குருபார்வை’ என்கிற பெயரிலும் ரிலீஸ் ஆனது. தெலுங்கு வெர்ஷனுக்காக ஹைதராபாத்துக்கு வரச்சொல்லி எனக்கு ஃப்ளைட் டிக்கெட் அனுப்பி வைத்தார்கள். நான் ரயிலில்தான் பயணிக்கணும், ஃப்ளைட் டிக்கெட் வேண்டாம் என்று சொன்னேன்.

 எல்லாரும் ஃப்ளைட்டில் போக ஆசைப்பட, நீங்கள் ரயிலில் பயணிக்க விரும்புகிறீர்களே என்று ஆச்சரியப்பட்டார்கள். இப்போதும் தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களில் மட்டுமே ஃப்ளைட்டில் பறக்கிறேன். மற்றபடி ரயில் பயணம்தான். ஏனெனில், ரயில்தான் எனக்கு நூலகம். நான் அதிக நூல்களை வாசித்தது ரயில்  பயணங்களில்தான்.

லாரன்ஸ் மாஸ்டர், பிரபுதேவாவை வைத்து இயக்கிய ‘ஸ்டைல்’ படத்துக்காக ஒவ்வொரு வாரமும் ரயிலில் ஹைதராபாத்துக்கு போய்வருவேன். அப்போதெல்லாம் வீட்டிலோ, ஷூட்டிங் ஸ்பாட்டிலோ இருந்த நேரத்தைவிட ரயிலில் நான் செலவழித்த காலமே அதிகம்.

பல நூறுமுறை ரயில் பயணம் செய்திருந்தாலும் ஒருமுறை ரயில் மாறி ஏறி அவஸ்தைப்பட்ட அனுபவமும் எனக்கு நடந்திருக்கிறது. அதைப்பற்றி அடுத்த வாரம் சொல்கிறேன்.

எழுத்தாக்கம் : சுரேஷ் ராஜா
(தொடரும்)