லட்சியத்துக்காக தியாகம்!
சினிமாவுக்கு கதை எழுத கத்துக்கலாம்! மாணவன் 35
“இன்றைய உலகமயமாக்கல் காலத்தில் லட்சியமெல்லாம் நம்முடைய பெரும்பாலான இளைஞர்களுக்கு இருக்கிறதாவென்று தெரியவில்லை. ஓரிரு இலட்சியங்கள் இருக்கலாம். அவையும்கூட சுயமுன்னேற்றம் தொடர்பானதாக இருக்குமே தவிர, ஒட்டுமொத்த சமூகத்துக்குமான அக்கறை கொண்டவையாக இல்லை.” இப்படித்தான் சில ஆண்டுகளுக்கு முன்பு நமக்கு முந்தைய தலைமுறையினர் பேசிக் கொண்டிருந்தனர்.
 ஆனால்-தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக ஈழம், கூடங்குளம், மீத்தேன், ஜல்லிக்கட்டு, நியூட்ரினோ, முல்லைப் பெரியாறு, விவசாயிகள் பிரச்சினை என்று மக்கள் நலம் சார்ந்த ஏராளமான பிரச்சினைகளுக்காக இளைஞர்கள் தெருவில் நின்று போராட ஆரம்பித்திருக்கிறார்கள்.
அரசியல் கட்சிகளோ, வேறு அமைப்புகளோ போராட்டங்களை கையிலெடுத்துக் கொள்ள அனுமதிக்காமல் பிரச்சினைக்கான தீர்வு என்கிற ஒற்றை அடிப்படையில் போராட்டங்களை முன்னெடுக்கிறார்கள்.இலட்சியம் என்பது ஒவ்வொரு மனிதனின் உள்ளத்திலும் நீறுபூத்த நெருப்பாக எப்போதும் கனன்றுகொண்டேதான் இருக்கிறது. சமூகத்துக்காக அது எரிமலையாக வெடிக்க நேரும்போதுதான் தியாகங்கள் மலருகின்றன.
ஈழத்துக்காக முத்துக்குமரன் தீக்குளித்தான். தமிழனுக்கு ஈழம் கிடைக்காமல் போயிருக்கலாம். ஆனால், முத்துக்குமரன் தமிழின வரலாற்றில் தனி இடம் பிடித்திருக்கிறான்.காதலுக்காக, கடனுக்காக தற்கொலை செய்துகொள்கிறவர்கள் கோழை என்றே பெயர் பெறுகிறார்கள். ஓர் உயர்ந்த இலட்சியத்துக்காக தன்னை தியாகம் செய்துகொள்பவனையே வரலாறு தியாகியென்று குறிப்பிடுகிறது.
வரலாற்றில் இன்றளவும் தத்துவமேதை சாக்ரடீஸை நாம் நினைத்துப் பார்க்கிறோம் என்றால், அவரது தத்துவங்கள் மட்டுமே காரணமல்ல. சமூகத்துக்காக பாய்ஸனை பாயாசம் மாதிரி சிரித்தவாறே அருந்தி உயிர்நீத்தாரே, அந்த தியாகம்தான் அவரை அந்தளவு உயரத்துக்கு கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறது.உலகளவில் என்று வெற்றி பெறக்கூடியவை தியாகக் கதைகள். குறிப்பாக தியாகிகளின் வாழ்வை தழுவி எடுக்கப்பட்ட படங்களுக்கு நல்ல மதிப்புண்டு.
கமர்ஷியலாகவும் தியாகம் ஒர்க் அவுட் ஆகும்.‘ரமணா’ படத்தின் இறுதிக்காட்சியை அவ்வளவு சுலபமாக மறந்துவிட முடியுமா? முதலமைச்சரே முன்வந்து, ரமணாவை விடுவிக்க நினைக்கிறார்.ஆனால்-சட்டத்தை மீறுபவர்கள் தனக்கு கொடுக்கப்பட்ட சலுகையைக் காட்டி தப்பித்துக் கொள்வார்கள் என்கிற சமூக அக்கறையோடு தூக்குக் கயிற்றில் தன்னுடைய தலையை நுழைப்பாரே? நினைக்கும்போதே சிலிர்க்கிறது இல்லையா?
(கதை விடுவோம்)
|