திருத்த முடியாத தவறு!
சினிமாவுக்கு கதை எழுத கத்துக்கலாம்!
மாணவன் 32
தவறுகள் செய்வது மனித இயல்பு.தவறுகளே செய்யாதவன் வாழ்க்கையில் எதையுமே செய்ததில்லை என்று அர்த்தம். எதையாவது செய்யும்போதுதான் அதன் விளைவு சரியானதாகவோ அல்லது தவறானதாகவோ அமைகிறது. எனவே, தவறு செய்வது என்பது ஒருவகையில் வரவேற்கக்கூடியதுதான். நீங்கள் உயிரோடு இருக்கிறீர்கள், செயல்படுகிறீர்கள் என்பதற் கான அடையாளம் அது.
அதே நேரம் தெரிந்தோ தெரியாமலோ திருத்தப்பட முடியாத தவறினை செய்பவர்கள் அதற்குரிய விளைவுகளை எதிர்கொண்டே ஆகவேண்டும். ‘ஒவ்வொரு விசைக்கும், அதற்கு இணையான எதிர்விசை உண்டு’ என்பதல்லவா அறிவியல்? மதரீதியான நம்பிக்கையிலும் கூட நம்முடைய பாவமும், புண்ணியமும் அதற்குரிய வெகுமதியை பெறும் என்பதுதானே?
முப்பத்தாறு சிச்சுவேஷன் வரிசையில் பதினேழாவதாக நாம் பார்க்கப் போவது இந்த திருத்தமுடியாத தவறைத்தான்.கோபத்தின் விளைவாகவோ, அதிகார மமதையாலோ அல்லது வேறு ஏதோ ஒரு காரணத்துக்காகவோ தவறான நடவடிக்கையில் ஈடுபட்ட ஒருவன், அதன் விளைவுகளை எதிர்கொள்ளுவது என்கிற இந்த கதையமைப்பு தமிழில் வெகு அரிதாகவே எடுபடுகிறது. ஏனெனில், வில்லனின் குணநலன் என்று தவறிழைப்பதை நாம் தொடர்ச்சியாக வரையறுத்து வைத்திருக்கிறோம். நம்முடைய ஹீரோக்கள் வெள்ளந்திகள், நல்லவர்கள், வல்லவர்கள் என்றே காலம் காலமாக கற்பனை செய்து வருகிறோம்.
நம்முடைய இதிகாசங்களில் ஒரு சிறிய தவறு இழைத்துவிட்டு, அதற்காக மிகப்பெரும் விலைகளை கொடுத்த கதாபாத்திரங்கள் ஏராளம்.தருமன், சூதாட்ட வெறியில் தன்னிலை மறந்து தன் மனைவியை பந்தயமாக்கி சகுனியின் சூழ்ச்சியில் தோற்றதாலேயே தான் மட்டுமின்றி தன்னுடைய சகோதரர்களையும் இன்னலுக்கு உள்ளாக்கினான்.
எல்லா கல்யாண குணநலன்களும் பெற்றிருந்த இராவணன், சீதையை கடத்திய ஒரே தவறினாலேயே தன்னுடைய சிறப்புகள் அத்தனையையும் இழந்தான்.தவறு செய்தவனை ஹீரோவாக நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே அந்த தவறால் பாதிக்கப்பட்டவனை ஹீரோவாக்கி, அவன் இவனை வெல்வதாகவே கதைகள் எழுதிக் கொண்டு இருக்கிறோம்.
நம்முடைய இந்த மரபான கதையாடலை உடைத்து உல்டாவாக மாற்றி யோசித்தோமானால், புதிய கதைகளையும் புதுவிதமான பாத்திரங்களையும் படைக்க முடியும்.தவறு செய்பவனை ஹீரோவாக ஏற்றுக்கொள்ளக்கூடிய ‘மங்காத்தா’ மனநிலைக்கு மக்கள் வந்திருக்கும் காலத்தில் இம்மாதிரி கதைகளுக்கும் வரவேற்பு இருக்கவே செய்யும். ‘சதுரங்க வேட்டை’ போன்ற படங்களின் வெற்றியே இதற்கு சாட்சி.
(கதை விடுவோம்)
|