மூடர் கூடம் நவீன்



டைட்டில்ஸ் டாக் (சென்ற இதழ் தொடர்ச்சி)

நுனிமரத்தில் அமர்ந்து கொண்டு அடிமரத்தை வெட்டுபவர்களை முட்டாள் என்பார்கள். இவ்வாறு சொல்பவர்கள் வேறொரு விஷயத்தில் வேறு சிலரால் முட்டாள் எனப்படுபவர்கள். எல்லோருமே ஏதோ ஒரு வகையில் மூடர்கள்தான் எனும்போது ஒரு மூடன் இன்னொரு மூடனை, ‘மூடன்’ என்று திட்டுவது எவ்வளவு பெரிய நகைமுரண்?

பணம் சம்பாதிக்காதவனை மூடன் என்கிறார்கள். ஏழையாக இருந்தால் அவன் தோற்றுப்போனவனோ, முட்டாளாகவோதான் இருக்க வேண்டுமா என்ன? ஒருவன் சாகும்போது, ‘நான் சந்தோஷமாக நிறைவாக வாழ்ந்தேன்’ என்று சொல்கிறானே, அவன்தான் வெற்றிகரமான வாழ்க்கையை நடத்தியவன். பெரும் பணம் சேர்த்தவன் எவனும் மனநிம்மதியாக செத்ததாக வரலாறே இல்லை.

நான் இயக்கிய ‘மூடர் கூடம்’ படத்தில் சென்ராயன் என்கிற கேரக்டரைத்தான் எல்லோரும் மூடன் என்று நினைத்தார்கள். உண்மையில் அந்தப் படத்தில் சீரியஸாக பேசுவதாக இடம்பெற்ற நவீன் கேரக்டரும் முட்டாள்தான். வாழ்க்கையில் தோல்வி அடைந்ததும் எப்போது திருட நினைக்கிறானோ அப்போதே நவீனும் மூடனாக மாறிவிட்டான். அந்தப் படத்தில் இடம்பெற்ற அத்தனை கேரக்டருமே மூடர்கள்தான். எனவேதான் அந்தப் படத்துக்கே ‘மூடர் கூடம்’ என்று பெயர் வைத்தேன்.

அந்தப் படத்தின் இறுதிக்காட்சியில் இரண்டு ரவுடிகள் ஒருவருக்கு ஒருவர் சுட்டுக் கொண்டு சாகும்போது கடைசி நொடியில் சிரிப்பார்கள். அந்தச் சிரிப்பின் அர்த்தமே, வாழ்க்கையை வாழத் தெரியாமல் தவற விட்டுவிட்டோமே என்பதின் வெளிப்பாடுதான். மரணம்தான் அவர்களை உலகம் என்கிற மூடர்கூடத்தில் இருந்து விடுதலை அளிக்கக்கூடிய செயல்பாடாக அமைந்தது. சாகிற நொடியில்தான் நாம் நம்மை முட்டாள் என்பதையே உணரத் தொடங்குகிறோம்.

ஒரு கோடு பெரியதாக தெரிய வேண்டுமானால் பக்கத்தில் சின்னதாக ஒரு கோடு வரையவேண்டும் என்பார்கள். ஒருவனுக்கு அறிவு இருக்கிறதோ இல்லையோ, அவன் தன்னை அறிவாளியாக காட்டிக் கொள்ளவே மற்றவனை முட்டாளாக கட்டம் கட்டத் தொடங்குகிறான்.இருநூறு ஆண்டுகளுக்கு முன் உடன்கட்டை ஏறுவது தவறு என்று சொல்லியிருந்தால் அது முட்டாள்தனம். ஆனால், இப்போது உடன்கட்டை ஏறுவதை சரி என்று சொன்னால்தான் முட்டாள்தனம்.

நாம் வாழுகிற நாடு, காலம் எல்லாமும்தான் நம்முடைய அறிவைத் தீர்மானிக்கிறது. நாம் மிகவும் குறைவாகத்தான் நம் மூளையைப் பயன்படுத்துவதாகச் சொல்கிறார்கள். அதாவது அறிவியலாளர் ஐன்ஸ்டீனே அதிகபட்சமாக அவருடைய மூளைத்திறனில் பதினைந்து சதவிகிதத்தைத்தான் பயன்படுத்தி இருக்கிறார். மூளையை முழுமையாகப் பயன்படுத்தத் தெரியாத நம்மையெல்லாம் அறிவாளிகள் என்று சொன்னால் அது எப்படி சரியாகும்?

என்னைப் பொறுத்தவரை எல்லோருமே ஏதோ ஒரு வகையில் மூடர்கள்தான். இதைச் சொன்னால் கோபம் வருகிறது. அடுத்தவனை மட்டம் தட்டி பிழைப்பவனெல்லாம் அறிவாளி என்று தன்னைத் தானே சொல்லிக் கொள்கிறான். மற்றவர்களையும் எப்படியோ நம்பவைத்தும் விடுகிறான். அறிவாளியாக இருப்பதைவிட மனிதனாக இருப்பதே முக்கியம். இன்றைய பொருளாதார நலன் சார்ந்த உலகில் மனிதனாக இருப்பதுதான் சிரமம்.

(தொடரும்)
எழுத்தாக்கம் : சுரேஷ்ராஜா