குற்றம் 23



தாய்மார்களை குறிவைக்கும் கேப்மாறிகள்!

கிரைம் கதை மன்னன் ராஜேஷ்குமாரின் கதைக்கு அமர்க்களமான திரைக்கதை வடிவம் கொடுத்து வெளிவந்திருக்கும் படம்.சென்னையில் அடுத்தடுத்து மூன்று பெண்கள் மர்மமான முறையில் தற்கொலை செய்துகொள்கிறார்கள். மூவருமே செயற்கை முறையில் கருத் தரித்தவர்கள் என்கிற ஒற்றுமையை உணரும் போலீஸ் அதிகாரி அருண் விஜய், விசாரணையை தீவிரப்படுத்துகிறார்.

அப்போதுதான் குழந்தைப்பேறு இல்லாத தம்பதியினரை மிரட்டி பணம் பிடுங்கும் ஒரு கும்பலைக் குறித்த விவரம் அவருக்கு தெரியவருகிறது. மக்களுக்கு பயன்பட வேண்டிய மருத்துவத்தை, தங்கள் சுயநலத்துக்காக சீரழிக்கும் மக்கள் விரோதிகளை எப்படி அழிக்கிறார் என்பதே கதை.

ஒரு சிறு அணுவாக தாயின் கருவறையைத் தட்டி இடம் கேட்கும் குழந்தையின் பத்துமாத வளர்ச்சியை அனிமேஷனாக உருவாக்கிய டைட்டில் காட்சியிலேயே பலமான கைதட்டல்களைப் பெறுகிறார் இயக்குநர் அறிவழகன்.

படம் முழுக்கவே அருண்விஜய் ராஜ்ஜியம். கட்டுக்கோப்பான உடல், மிரட்டலான பார்வை, மீட்டரைத் தாண்டாத கச்சிதமான நடிப்பு என்று ‘குற்றம் - 23’யின் அஸ்தி வாரமாக படத்தைத் தாங்குகிறார். அண்ணியிடம் காட்டும் பாசம், வழக்குக்கு சாட்சியாக வரும் பெண்ணின் மீது காதல் என்று அவர் வெளிப்படுத்தும் உணர்வுகள் அபாரம்.

அருமையாக நடனம் ஆடத்தெரிந்த அருண்விஜய்க்கு டூயட் காட்சிகளே இல்லை என்பது மட்டும்தான் குறை.ஹீரோயின் மகிமா நம்பியாருக்கு துணிச்சலான வேடம். குரலை உயர்த்தி போலீஸிடம் பேசுவதாகட்டும், ரவுடிகளுக்கு அச்சப்பட்டு காதலனிடம் உதவி கேட்கும் காட்சியாகட்டும்.. யதார்த்த நடிப்பால் பின்னுகிறார். சீரியஸான இந்தப் படத்துக்கு தம்பிராமையா மட்டும் பொருந்தாமல் தனித்துத் தெரிகிறார்.

வில்லனாக வம்சிகிருஷ்ணா வழக்கம்போல மிரட்டல். டாக்டராக வரும் கல்யாணி நடராஜன், வில்லனின் நண்பனாக வரும் அரவிந்த் ஆகாஷ் ஆகியோரின் கேரக்டர் தேர்வும் நடிப்பும் சிறப்பு.ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா, இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர், ஒளிப்பதிவாளர் பாஸ்கரன் அத்தனை பேரும் இயக்குநருக்கு தோள்கொடுத்து மிக சிறப்பாக வேலை செய்திருக்கிறார்கள்.

ஆயினும், தாய்மைப்பேறு கிட்டாமல் மருத்துவர்களிடம் மாற்று கர்ப்ப முயற்சிகளுக்காக சிகிச்சைக்கு சென்றுகொண்டிருக்கும் தாய்மார்கள் இப்படத்தை பார்த்தால் சங்கடப்பட மாட்டார்களா என்று இயக்குநர் அறிவழகன் யோசித்திருக்கலாம்.

ஒரு கமர்ஷியல் படம் எடுப்பதற்காக மகத்தான ஓர் அறிவியல் முன்னேற்றத்தை குற்றவாளிகளுக்கான களமாக சித்தரித்திருப்பதை தவிர்த்திருக்கலாம். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை சினிமா வெறும் பொழுதுபோக்கல்ல, சமூகத்தின் கவனத்தை சுலபமாக ஈர்க்கக்கூடிய கலைமேடையும்தானே?