சஞ்சிதா காட்டில் அடைமழை! நட்டி மகிழ்ச்சி
இந்தியில் அமிதாப், தமிழில் விஜய் என்று பெரிய ஹீரோக்களின் ஃபேவரிட் கேமராமேன் இவர், என்றாலும் நடிப்பிலும் பிஸியாகத்தான் இருக்கிறார்.
‘சதுரங்க வேட்டை’க்குப் பிறகு நட்ராஜ் ரசிகர்கள் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளும் ஹீரோவாகி இருக்கிறார். நிதானமாக படங்களைத் தேர்வு செய்து நடிக்கும் நட்டியின் அடுத்த ரிலீஸ் ‘எங்கிட்டே மோதாதே’. சென்னைக்கும் மும்பைக்கும் ரெகுலர் சர்வீஸில் பறந்துகொண்டிருப்பவரை, ஒரு சின்ன கேப்பில் மடக்கினோம்.
“எப்படி சார் இருக்கீங்க?” “எல்லாம் அவன் செயல். ரொம்பவே ஹேப்பியாதான் இருக்கேன். நான் நடிச்ச படம் ஓடினாலும் சரி, ஓடலைன்னாலும் சரி, பெருசாவெல்லாம் அலட்டிக்கமாட்டேன். எப்பவுமே போல சளைக்காம உழைக்க ரெடியாயிடுவேன். என் கடன் பணி செய்து கிடப்பதே. கேமராமேன், நடிகன்னு வாழ்க்கை பரபரன்னு போயிக்கிட்டிருக்கு.”
“ரஜினி பாட்டை தலைப்பா வெச்சு நடிக்கறீங்க?” “ஆமாம் பாஸ். அது எதுக்குன்னு படம் பார்த்தா புரிஞ்சுப்பீங்க. ‘சதுரங்க வேட்டை’க்குப் பிறகு மானாவாரியா பட வாய்ப்புகள் வந்தது.
ரொம்ப செலக்டிவ்வா நான் ஒப்புக்கிட்ட படத்தில் இதுவும் ஒண்ணு. தமிழ், இந்தி, தெலுங்குன்னு இருபது படத்துக்கும் மேலே கேமரா பண்ணிட்டேன். எப்படியும் ஆயிரத்து சொச்சம் விளம்பரப் படங்கள் பண்ணியிருப்பேன். அறுபது டாக்குமென்டரியாவது வேலை செஞ்சிருப்பேன். இவ்வளவு நாள் அனுபவமெல்லாம் நான் நடிக்கிற படத்தை செலக்ட் பண்ணுறதுக்கு உதவுது.
ரஜினி - கமல் இரண்டு பேரும் அசைக்க முடியாத அரசர்களா வாழ்ந்த எண்பதுகளின் காலகட்டத்துலே நடக்கிற கதை. அதை நேர்த்தியா எல்லாத் தரப்புக்கும் கொண்டு செல்கிற ஜனரஞ்சகமான திரைக்கதை. ரொம்ப நுணுக்கமா வடிவமைக்கப்பட்டிருக்கிற என்னோட கேரக்டர். இப்படியாக எல்லா அம்சங்களும் எனக்குப் பிடிச்சிருந்ததாலே இந்தப் படத்தை செலக்ட் பண்ணினேன்.”
“படத்தோட கதை?”
“ரஜினி - கமல் ரெண்டு ஹீரோக்களின் ரசிகர்களுக்குள் நடக்கிற கட்டவுட் வெக்கிறது மாதிரியான பிரச்சினைகள்தான் கதை. இது எப்படி அரசியலா மாறுதுன்னு ரொம்ப இயல்பா ‘எங்கிட்டே மோதாதே’ சொல்லும்.1987 தீபாவளிக்கு ரஜினி நடிச்ச ‘மனிதன்’, கமல் நடிச்ச ‘நாயகன்’ ரெண்டும் ரிலீஸ் ஆகுது. திருநெல்வேலியிலே இந்தப் படங்களின் ரிலீஸின் போது நடந்த சில சம்பவங்கள், அவற்றுக்கு பின்னணியான அரசியல் விவகாரங்கள்னு துல்லியமா படமெடுத்திருக்கிறாரு டைரக்டர் ராமு செல்லப்பா. அவரும் அந்த ஊர்க்காரர் என்பதால் நேட்டிவிட்டி டச் ரொம்ப பிரமாதமா அமைஞ்சிருக்கு.”
“உங்களோட கேரக்டர்?”
“நான் சூப்பர் ஸ்டார் ரசிகனா வர்றேன். அவரோட கட்டவுட்டை வரையுற ஆர்ட்டிஸ்ட். பீடி, சிகரெட், லுங்கின்னு தரை லோக்கல் கேரக்டர். சஞ்சிதா ஷெட்டிக்கு அண்ணனா நடிக்கிற ராஜாஜி, கமல் ரசிகரா வர்றாரு.”
“சஞ்சிதா ஷெட்டி பத்தி சொல்லுங்களேன்?”
“இன்னிக்கு கோலிவுட்டோட ஹாட் டால் சஞ்சிதாதான். அவங்க காட்லேதான் அடை மழை. ‘ரம்’, ‘என்னோடு விளையாடு’ன்னு வாராவாரம் அவங்களுக்கு படம் ரிலீஸ் ஆகிட்டே இருக்கு. அவங்கதான் எனக்கு படத்துலே ஹீரோயின். அவங்க ரஜினி ரசிகையா வர்றாங்க. ரொம்ப வெகுளித்தனமான பொண்ணு. சீனியர்களை பார்த்தா கால்லே விழுந்து ஆசீர்வாதம் வாங்குற லெவலுக்கு பயங்கர தொழில் பக்தி. சினிமா தவிர்த்து பெரும்பாலான நேரத்தில் மாடர்ன் உடையிலேயே உலவும் அல்ட்ரா மாடர்ன் மோகினி.
யதேச்சையா ஒருநாள் சொன்னேன், ‘உங்களுக்கு புடவை ரொம்ப அழகா இருக்குமே’ன்னு. இப்போ படத்தோட புரமோஷனுக்கு மங்களகரமா புடவையில்தான் வலம் வர்றாங்க.”“ரஜினி ரசிகரா நடிக்கிறதாலே கமலைத் திட்டுற மாதிரி டயலாக்கெல்லாம் உங்களுக்கு இருக்குமே சார்?”“ரஜினி - கமல் ரெண்டு பேரையுமே நான் ரசிக்கிறவன்.
ஒரு காலத்தில் இவங்க ரெண்டு பேருக்குமே வெறித்தனமான ரசிகர்கள் இருந்தாங்க. இரண்டு பேரோட படங்கள் வர்றப்போ கத்திக்குத்து மாதிரி சம்பவங்கள் எல்லாம் நடந்தது உண்மை. ஆனா, காலப்போக்குலே எல்லாம் மாறிடிச்சி. இந்த ஃபேஸ்புக் யுகத்துலே ரெண்டு தரப்பு ரசிகர்களுமே ரொம்ப புரிதலோடு பழகுறாங்க.
எனக்கு படத்துலே கமல் சாரை திட்டுறமாதிரி டயலாக் எதுவுமில்லை. இருக்குமோன்னு நான் பயந்தது உண்மை. ஆனா, என்னை டைரக்டர் அந்த தர்மசங்கடத்துக்கு ஆளாக்கவே இல்லை. அவரவருக்கு பிடிச்ச ஹீரோவை அவரவர் கொண்டாடுறதுமாதிரிதான் காட்சிகள் இருக்கும். வெறுமனே ரசிகர் மன்ற சண்டைன்னு இல்லாம காதல், ஃப்ரெண்ட்ஷிப், துரோகம்னு பக்கா கமர்ஷியல் டோனில் வந்திருக்கு நம்ம படம்.”
- சுரேஷ்ராஜா
|