அமாவாசைக்கு க்ளீன் ‘ஏ’



ஹீரோ ரேஸில் இல்லாதவர் போல் இருந்த ஜெய் ஆகாஷ் இப்ப செம பிஸி. ‘அமாவாசை’ என்ற படத்தின் மூலம் அடுத்த ஆட்டத்துக்கு தயாராகி இருக்கிறார். கோடம்பாக்கத்தின் பேவரைட் கதைக்களமான திகில் பின்னணியோடு இந்தப் படம் தயாராகியுள்ளது.இந்தப் படத்தில் ஜெய் ஆகாஷ் லவ்வர் பாயாக வருகிறார். இளமையான தோற்றத்துக்காக கடுமையான உடற்பயிற்சி  மூலம் பத்து கிலோ உடல் எடையை குறைத்துள்ளாராம். பாலிவுட் இறக்குமதி நுபுர் ஜோடியாக நடிக்கிறார்.

இவர் ‘ஜோ போலே சோ’ உட்பட ஏராளமான இந்திப் படங்களில் நடித்துள்ளாராம். நுபுர் என்றால் கணுக்கால் மணிகள் என்று அர்த்தமாம். எக்ஸ்ட்ரா ஹீரோயின்களாக சாக் ஷி ஷோகன், ப்ரீத்தி சிங், தன்யா மௌரியா, முமைத்கான், ரூபி கான், சீமாசிங் ஆகியோர் நடிக்கிறார்கள். முக்கிய ரோலில் கோட்டா னிவாச ராவ் நடிக்கிறார்.

இயக்குநரே தயாரிப்பாளர் என்பதால் ராஜஸ்தான், உதய்ப்பூர், ஜோத்பூர், சென்னை என இந்திய வரைபடத்தில் உள்ள கணிசமான இடங்களில் படப்பிடிப்பு நடந்துள்ளதாம். பிரபல பாலிவுட் இசையமைப்பாளரான சையத் அஹமத்  இந்தப் படத்தின் மூலம் தமிழுக்கு வருகிறார். தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் உருவாகியுள்ள இந்தப் படத்திற்கு  சென்சார் போர்டு க்ளீன் ‘ஏ’ சர்டிபிகேட் வழங்கியுள்ளது.

‘‘இப்போதுள்ள டிரெண்டுக்கு ஏற்ற மாதிரிதான் இந்தப் படத்தை எடுத்துள்ளேன். திகில் படத்தில் இசையமைப்பாளரின் பங்கு அதிகமாக இருக்கும். அந்த வகையில் பாலிவுட் இசையமைப்பாளர் சையத் அஹமத்தின் இசை தென் இந்திய ரசிகர்களுக்கு புது அனுபவமாக இருக்கும். வரிவிலக்கு கிடைக்குமளவுக்கு தூய தமிழில் டைட்டில் வைத்திருந்தேன்.

ஆனால் சென்சார் போர்டு ‘ஏ’ சர்டிபிகேட் கொடுத்தார்கள். பொதுவா ஒரு படத்துக்கு ‘ஏ’ சர்டிபிகேட் கொடுத்தால் ‘யு’ சர்டிபிகேட்டுக்காக போராடுவார்கள். அரை டஜன் ஹீரோயின்கள் குத்தாட்டம் ஆடியிருக்கும் படத்துக்கு ‘ஏ’ கொடுக்காமல் இருந்தால்தான் ஆச்சர்யம்’’ என்று கேஷுவலாக பேசுகிறார் தயாரிப்பாளர் கம் இயக்குநர் ராகேஷ் சவந்த்.

- எஸ்