500 வது படத்தில் நடிக்கப்போறேன்! நடிகர் ‘தவக்களை’ சிட்டிபாபுவின் கடைசி பேட்டி



‘முந்தானை முடிச்சு’ படத்தை ரசித்துப் பார்த்தார் அன்றைய தமிழக  முதல்வர் எம்.ஜி.ஆர். குறிப்பாக அந்தப் படத்தில் நடித்திருந்த தவக்களை, எம்.ஜி.ஆரை பெரிதும் கவர்ந்திருந்தார். திருவேற்காடு மாரியம்மன் கோயிலில் கே.பாக்யராஜுக்கும், பூர்ணிமாவுக்கும் திருமணம் நடந்தபோது அதற்கு தலைமை தாங்கியவர் எம்.ஜி.ஆர்.

அப்போது கல்யாணத்தில் கலந்துகொண்ட தவக்களையை அடையாளம் கண்டு, அன்பாக அழைத்து தன்னுடைய மடி மீது வைத்துக் கொண்டார். முதல்வரின் மடியில் தவக்களை அமர்ந்திருந்த அந்த போட்டோ முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு பிரபலம்.
கடந்த மாதம் திடீரென்று மாரடைப்பால் தவக்களை மரணமடைந்தார். அவர் காலமாவதற்கு முன்பு கடைசியாக நமக்குதான் பேட்டி கொடுத்திருந்தார். ‘வண்ணத்திரை’ வாசகர்கள் சார்பாக தவக்களை என்கிற சிட்டிபாபுவுக்கு நம்முடைய ஆழ்ந்த அஞ்சலிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.இனி, தவக்களை நம்முடன் பேசுகிறார்.

“உங்க பின்னணி?”
“சொந்த ஊரு நெல்லூர். ஆனா, பிறந்து வளர்ந்ததெல்லாம் மெட்ராஸ்தான். அப்பா காலமாகிட்டாரு. வடபழனியில் வாடகை வீட்டில் நான், அம்மா, மனைவி போதுமணி மூணு பேரும் வசிக்கிறோம். குழந்தை இன்னும் பிறக்கலை.

கடவுள் கொடுப்பார்னு நம்பிக்கை இருக்கு. ரெண்டு அண்ணன், ஒரு தங்கை. எங்க ஊருலே விவசாய நிலம் இருக்கு. ஆனா, அதுலே வருமானம்தான் கிடையாது. நான் மழையடிச்சப்போ கூட பள்ளியிலே ஒதுங்கினது இல்லை. ஆனா தமிழும், இங்கிலீஷும் எனக்கு தண்ணி பட்ட பாடு. எல்லாம் அனுபவத்துலே கத்துக்கிட்டதுதான்.”

“சினிமாவுக்கு எப்படி வந்தீங்க?”

“எல்லாரையும் மாதிரி எனக்கும் நடிக்க ஆசை. கம்பெனி கம்பெனியா போய் வாய்ப்பு கேட்பேன். என்னோட உருவத்தைப் பார்த்துட்டு யாரும் மதிக்கக்கூட மாட்டாங்க. அவங்களை சொல்லியும் குத்தமில்லை. மூணு அடி உயரம்தான். நான் போய் வாய்ப்பு கேட்கிற ஆபீஸ் ரிசப்ஷன் டேபிள் உயரம்கூட இருக்கமாட்டேன். அப்போ சுசிலான்னு ஒரு துணை நடிகை இருந்தாங்க. அவங்கதான் என்னை அன்பா ஆதரிச்சாங்க.

‘பொய் சாட்சி’ன்னு ஒரு படம். பாக்யராஜ் சார் ஹீரோ. அந்தப் படத்துலே நடிச்சிக்கிட்டிருந்த குள்ளமணி சார்தான் என்னை பாக்யராஜிடம் அறிமுகப்படுத்தினார். ‘ஏதாவது நடிச்சி காமிப்பா...’ன்னு பாக்யராஜ் கேட்டாரு. எனக்குத் தெரிஞ்சதை பண்ணினேன். கைதட்டி பாராட்டினார். 1982ல் ‘முந்தானை முடிச்சு’ தொடங்கினார். அதுலேதான் சிட்டிபாபுவா இருந்த என்னை தவக்களைன்னு பேரு கொடுத்து நடிகனா அறிமுகப்படுத்தினார். அடுத்த வருஷமே ரிலீஸ் ஆன அந்தப் படம் தமிழ்நாடு முழுக்க பட்டி தொட்டியெல்லாம் சக்கைப்போடு போட்டுச்சி.

அதுக்கப்புறம் நிக்கவே நேரமில்லாமே தொடர்ந்து நடிச்சிக்கிட்டே இருந்தேன். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, சிங்களம்னு எல்லா மொழிகளிலும் வாய்ப்பு கிடைச்சது. இதுவரைக்கும் 496 படம் நடிச்சிட்டேன். இன்னும் நாலு படம் நடிச்சேன்னா 500 ஆயிடும்.”

“நீங்க நடிச்சதுலே மறக்கமுடியாத படங்கள்?”

“எதையுமே மறக்கலை என்பதால்தான் இதுவரை நான் நடிச்ச படங்களோட எண்ணிக்கையை துல்லியமா சொல்லுறேன். என்னைமாதிரி ஏகத்துக்கும் நடிச்சவங்க இதுமாதிரி கணக்குவழக்கே பக்காவா வெச்சுக்குறதில்லை. ‘முந்தானை முடிச்சு’ படத்துக்கு முன்னாடியே சில படங்களில் தலை காட்டியிருக்கேன். குறிப்பா ‘பயணங்கள் முடிவதில்லை’ படத்தில் ‘ஏய் ஆத்தா ஆத்தோரமா வாரீயா?’ பாட்டுலே நானும் வருவேன். முதன் முதலா என்னை ஸ்க்ரீனில் நானே பார்த்தது அந்தப் படத்தில்தான்.

 வடபழனி ராம் தியேட்டரில் பார்த்தேன். ‘ஆண் பாவம்’, ‘நீங்கள் கேட்டவை’, ‘காக்கிச்சட்டை’, ‘மதுரை சூரன்’, ‘என் ரத்தத்தின் ரத்தமே’, ‘எங்க வீட்டு ராமாயணம்’, ‘நல்ல பாம்பு’, ‘நாகம்’ மாதிரி பெரிய வெற்றிப் படங்களில் நடிச்சது மறக்க முடியாத அனுபவம்.தமிழ், தெலுங்கு படங்களுக்கெல்லாம் நானே டப்பிங் பேசிடுவேன். இந்தியில் ஜிதேந்திரா, தேவி நடிச்சிருந்த ‘கர் சன்சார்’ படத்துக்கு மட்டும் நானே பேசினேன். மத்த படங்களுக்கு எல்லாம் வேற யாராவது பேசுவாங்க.”

“யார் கூட நடிக்க ஆசைப்படுறீங்க?”

“எல்லா பெரிய ஹீரோ கூடவும் நடிச்சிட்டேன். இன்னும் ரஜினி சார் படத்தில் மட்டும்தான் நடிக்கலை.”

“எப்பவுமே காமெடி ரோல்தானா?”

“தெலுங்கில் மோகன்பாபு ஹீரோவா நடிச்ச ஒரு படத்தில் வில்லனா நடிச்சிருக்கேன். அதுலே அவர் எனக்கு சிஷ்யனா வருவாரு.”
“சமீபமா உங்க நடிப்பில் படங்களே வரலையே?”

“ஆமாம் சார். கடைசியா தமிழில் நீங்க வினயன் சார் இயக்கின ‘அற்புதத் தீவு’ படத்தில்தான் பார்த்திருப்பீங்க. முழுக்க குள்ளமானவர்கள் நடிச்ச படம். அது வந்து பத்து வருஷத்துக்கு மேலே ஆயிடிச்சி. என்னவோ தெரியலை. அதுக்கப்புறம் எனக்கு ஒரு படம் கூட அமையலை. நானும் யார் கிட்டேயும் போய் வாய்ப்பு கேட்கலை. நம்ம சினிமா முன்ன மாதிரியா இருக்கு? ரொம்ப மாறிடிச்சி. இப்போ இருக்கிற ஆட்கள் யாரையும் எனக்குத் தெரியாது. என் குரு பாக்யராஜ் சார் படம் ஆரம்பிச்சாருன்னா போய் வாய்ப்பு கேட்பேன்.”

“அப்ப வருமானம்?”

“வயித்துப் பாட்டுக்காக ‘சினி மின்மினி’ என்கிற கலைக்குழு நடத்துறேன். கோயில் விழாக்கள் மாதிரி விசேஷங்களில் நிகழ்ச்சிகள் நடத்துறேன். ஒருவேளை சாப்பாடாவது நிம்மதியா சாப்பிடறேன்னா இந்தக் கலைக்குழுதான் காரணம்.”
“விருது மாதிரி ஏதாவது அங்கீகாரம் கிடைச்சிருக்கா?”

“இல்லை சார். முப்பத்தஞ்சி வருஷமா கிட்டத்தட்ட ஐநூறு படங்களில் நடிச்ச எனக்கு நடிப்புக்கு அங்கீகாரமா நடிகர்கள் எல்லாருக்கும் கிடைக்கிற கலைமாமணி கூட கிடைக்கலை.”

“சொந்தமா படம் தயாரிச்சீங்க இல்லையா?”

“நானே மறந்துட்ட விஷயம். நீங்க நினைவில் வெச்சிருக்கீங்க. கிட்டத்தட்ட முப்பது வருஷம் ஆயிடிச்சி. 1988ல் ஜெயா புரொடக்‌ஷன்ஸ்னு சொந்தமா கம்பெனி ஆரம்பிச்சேன். சில பார்ட்னர்ஸோடு சேர்ந்து புதுமுகங்களை வெச்சி ‘மண்ணில் இந்த காதல்’னு ஒரு படம் தயாரிக்கத் தொடங்கினேன். பாதி படம் வளர்ந்த நிலையில் பார்ட்னர்ஸ் திடீர்னு கழட்டிக்கிட்டாங்க. எல்லா சுமையும் என் மேலே விழுந்தது. வடபழனி குமரன் காலனியில் அப்போ சொந்தமா வாங்கியிருந்த வீட்டை அடிமாட்டு விலைக்கு வித்தேன். பயங்கர நஷ்டம். அதுக்கப்புறம் வாடகை வீடுதான். இன்னும் சொந்தவீட்டு யோகம் அமையலை.”

“சினிமாவுக்கு புதுசா வர்றவங்களுக்கு நீங்க சொல்லுற அட்வைஸ்?”

“உண்மையா உழைக்கணும். பொய் சொல்லக்கூடாது. யாரையும் ஏமாத்த நினைக்கக்கூடாது. இப்படி இருந்தோம்னா நம்மை பொழைக்கத் தெரியாதவன்னு நாலு பேரு சொல்லுவாங்க. ஆனா, நாற்பது பேரு ‘நல்ல மனுஷன்யா இவன்’னு நெனைப்பாங்க. அந்த நினைப்புதான் நாம பூமியிலே பொறந்ததுக்கான குறைந்தபட்ச அங்கீகாரம். சினிமான்னு இல்லை, எங்கே இருந்தாலும் இந்தப் பேரை எடுக்குறதுதான் கஷ்டம். அதை எப்பாடு பட்டாவது எடுத்துடுங்க.”

“அடுத்து?”

“மீண்டும் சினிமாவில் பிஸியாகணும்னு ஆசையிருக்கு. ஐநூறு படத்தைத் தாண்டிடணும். அதுதான் இப்போதைக்கு ஒரே லட்சியம். எனக்கு ஏத்த கேரக்டர் கிடைச்சா முழு உழைப்பையும் கொட்டி தயங்காம நடிப்பேன்.”தவக்களை ஆசைப்பட்ட அந்த ஐநூறு என்கிற மேஜிக் எண்ணைத் தொடாமலேயே விண்ணுலகம் போய்ச் சேர்ந்துவிட்டார் என்பதுதான் சோகம்.

- தேவராஜ்