ரசிகர்களை குஷிப்படுத்துவேன்! சாக்ஷி சபதம்
கொழுக் மொழுக்கென்று கும்மென்று இருந்த சாக்ஷி அகர்வால், இப்போது நல்லி எலும்பு மாதிரி மெலிந்த தேகத்துக்கு மாறியிருக்கிறார். ‘யூகன்’, ‘திருட்டு விசிடி’, ‘ஆத்யன்’, ‘கககாபோ’ போன்ற படங்களுக்குப் பிறகு இப்போது ‘ஜெயிக்கிற குதிரை’யில் ஜீவனுடன் டூயட் பாடுகிறார். காபி ஷாப்பில் தோழிகளுடன் கடலை போட்டுக்கொண்டிருந்தவரை தற்செயலாக சந்தித்தோம்.
“எங்கே திடீர்னு நடுவுலே கொஞ்சம் பக்கத்தை காணோம்?” “சார், நீங்களே என்னை மறந்துடலாமா? ‘வண்ணத்திரை’யில் என்னோட எத்தனை ஸ்டில்களை ப்ளோ-அப் போட்டிருக்கீங்க? அதுக்கு ஏடாகூடமா நீங்க எழுதற கமெண்டையெல்லாம் நான் பொறுத்துக்கலையா? ஓக்கே. இப்போவாவது அக்கறையா விசாரிச்சீங்களே! அமெரிக்காவுக்கு போய் சினிமா கற்றுக் கொள்ள வேண்டும் என்பது நீண்ட நாள் திட்டம். வரிசையாக படங்கள் இருந்ததால் அதற்கு வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது. ‘ஜெயிக்கிற குதிரை’ முடிச்சதும் சின்ன இடைவெளி கிடைச்சதால் அமெரிக்காவுக்கு ஜூட் விட்டேன்.
லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருக்கும் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த நடிப்பு பயிற்சி பள்ளியான லீ ஸ்ட்ராஸ்பெர்க் தியேட்டர் மற்றும் திரைப்பட பயிற்சி நிறுவனத்தில் ஆக்டிங் கோர்ஸில் சேர்ந்தேன். அங்கே பயிற்சி பெற்ற சிலர் ஆஸ்கார் விருதைக்கூட தட்டி இருக்காங்க.
நாலு மாசம் கடுமையான பயிற்சி. ‘மெத்தட் ஆக்டிங்’ என்ற நுட்பமான நடிப்பை கத்துக்கிட்டேன். இந்த நிறுவனத்தில் நடிப்பு பயிற்சி பெற்ற முதல் தென்னிந்திய நடிகை நான்தான். எனக்கு முன்னாடி அங்கே தேவியின் மகள் ஜானவி கபூர், ரன்பீர் கபூர், இம்ரான் கான் ஆகியோர் டிரெய்னிங் எடுத்திருக்காங்க. ஸ்கார்லட் ஜொகான்சன், உமா துர்மன் உள்ளிட்ட சர்வதேச நடிகைகளும் இங்கு பயிற்சி பெற்றவர்கள்தான்.” “மெத்தட் ஆக்டிங்குன்னா?”
“நம்முடைய வாழ்க்கையில் அன்றாடம் நடைபெறும் அனுபவங்களையும், உணர்வுகளையும் மீட்டெடுத்து அதனை நாம் நடிக்கிற கேரக்டரின் தன்மையோடு பிரதிபலிப்பதுதான் மெத்தட் ஆக்டிங். இது உலக அளவில் நடிப்பிற்கு இலக்கணமாக இருக்கும் ஸ்டேன்ஸ்லெவாஸ்கி, லீ ஸ்ட்ராஸ்பெர்க், ஸ்டெல்லா அட்லர், மெய்ஸ்னர், மைக்கேல் செக்காவ், உடா ஹேகன், வயோலா ஸ்பொலீன் உள்ளிட்ட எட்டு வகையான நுணுக்கங்களில் டெப்த் லெவல் ஆஃப் ஆக்டிங்கை வெளிப்படுத்துவதுதான் மெத்தட் ஆக்டிங்.
அதுமட்டுமில்ல, நம்மைச் சுற்றியுள்ளவர்களின் நடவடிக்கையை உற்றுக் கவனிச்சி அவங்களோட நடை, உடை, பாவனை, பேச்சுமொழி இதையெல்லாம் உள்வாங்கிக்கிட்டு, அதனை நம்மோட நடிப்புத்திறனுடன் இணைச்சு திரையில் வழங்கணும். யதார்த்தமான நடிப்புன்னா அந்தக் கேரக்டராகவே மாறணும். அந்தக் கேரக்டரை உள்வாங்கிக் கொண்டு, உணர்ந்து நடிக்கணும்.
இதனை உடனடியாக செய்ய முடியாது. இதற்கு பயிற்சி வேணும். உடல் சார்ந்த பயிற்சி, மனம் சார்ந்த பயிற்சி, உணர்வுகளை வெளிப்படுத்தக்கூடிய பயிற்சின்னு சில நுட்பமான விஷயங்களில் கவனம் செலுத்தணும். மெத்தட் ஆக்டிங் முடித்தவர்கள் யதார்த்தமான கேரக்டர்களில் அசால்ட்டா நடிக்க முடியும். இந்தப் பயிற்சி மூலம் என்னுடைய சினிமா பயணத்தை மேலும் அர்த்தமுள்ளதாக மாற்ற முடியும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது.” “உங்க ‘ஜெயிக்கிற குதிரை’ எவ்வளவு தூரத்தில் ஓடி வந்துக்கிட்டு இருக்கு?”
“என்னோட போர்ஷன் உட்பட முழுப்படப்பிடிப்பும் முடிஞ்சிடிச்சி. போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் ஜரூரா போய்க்கிட்டிருக்கு. ஜீவனோட நடிச்சது நல்ல அனுபவம். வெளித்தோற்றத்தில் ஆன்மிக அண்ணல் போல் இருந்தாலும், படப்பிடிப்பு சமயத்தில் பக்கா புரஃபஷனல் ஆர்டிஸ்ட்டாக இருப்பார். இது கமர்ஷியல் மூவியாக இருந்தாலும் என்னுடைய கேரக்டருக்கு நல்ல முக்கியத்துவம் இருக்கும்.”
“சினிமாவில் உங்களுக்கான இடம்?”
“நான் என்னுடைய விருப்பத்தின் காரணமாகத்தான் சினிமாவுக்கு வந்தேன். இன்ஜினியரிங், எம்.பி.ஏ. என்று படிப்பிலும் கெட்டிக்காரி. என்னுடைய குடும்பத்துக்கு பிசினஸ்தான் முக்கியம். நானும் பிசினஸ் வுமனாகவோ, கலெக்டராகவோ வருவேன் என்றுதான் வீட்டில் எதிர்பார்த்தார்கள். ஆனால் நான் சினிமாவை தேர்ந்தெடுத்ததும் அவர்களுக்கு அதிர்ச்சி.
அதனால் முதலில் என்னுடைய முயற்சிக்கு ஆதரவு தெரிவிக்காமல் இருந்தனர். ஆனால் இப்போது என்னுடைய முயற்சியால் சினிமாவிலும் விளம்பரப் பட உலகிலும் வளரத் தொடங்கி இருப்பதால் என்னோடு ராசியாகிவிட்டார்கள். அமெரிக்காவிலிருந்து ரிட்டர்னான பிறகு தமிழிலும் தெலுங்கிலும் வாய்ப்புகள் வர ஆரம்பித்துள்ளது. முக்கியமாக தெலுங்கில் அதிக வாய்ப்புகள் வருகிறது. ஆனால் எனக்கு நம்மூரில் பேர் வாங்க வேண்டும் என்பதுதான் விருப்பம்.”
“கிளாமர்?”
“நடிகைகளைப் பொறுத்தவரை அவர்களுடைய கிளாமரை பொறுத்துதான் மார்க்கும் மார்க்கெட்டையும் பிக்ஸ் பண்ணுகிறார்கள். ஆனால் கிளாமர் கேரக்டரில் நடிப்பது அவ்வளவு சுலபமான விஷயம் இல்லை. எல்லா படங்களிலும் எல்லாருக்கும் கிளாமர் ரோல் கிடைக்காது. அப்படியே கிளாமர் ரோல் கிடைத்தாலும் கிளாமர் மூலம் ரசிகர்களை ஈர்ப்பது என்பது அதைவிட கடினம். ஏனெனில் ஒவ்வொரு ரசிகருக்கும் ஒவ்வொரு வகையான கவர்ச்சி பிடிக்கும்.
என்னைப்பொறுத்தவரை கவர்ச்சியை, சினிமாவின் ஒரு பகுதியாகத்தான் நான் பார்க்கிறேன். கவர்ச்சியை வெளிப்படுத்த வேண்டுமானால் பாடிலேங்வேஜ், புஷ்டியான உடல் அமைப்பு, காஸ்டியூம்ஸ், கேமரா கோணங்கள், இயக்குநரின் கற்பனை என பல விஷயங்கள் உள்ளடங்கியிருக்கின்றன.
இப்படி அனைத்து அம்சங்களும் சரியாக அமையும்போதுதான் அந்த கிளாமர் கேரக்டர் ரசிகர்கள் மத்தியில் ரீச்சாகும். அந்தவகையில் எனக்கு பொருத்தமாக அமைகிற கிளாமர் ரோலில் நடித்து ரசிகர்களை குஷிப்படுத்துவேன்.” “நடிக்க விரும்பும் ரோல்?”
“இந்தக் கேள்வியை நான்கு மாதங்களுக்கு முன்பு கேட்டிருந்தால் எப்படி பதில் சொல்லியிருப்பேன் என்று தெரியாது. ஆனால் லீ ஸ்ட்ராஸ்பெர்க்கில் மெத்தட் ஆக்டிங்கில் தேர்ச்சி பெற்ற பிறகு எந்த கேரக்டரிலும் என்னால் நடிக்க முடியும் என்ற நம்பிக்கை பிறந்திருக்கிறது. ஆக்ஷன், காமெடி, ஹீரோயின் ஓரியன்டட் ஸ்கிரிப்ட் என எந்த வகையான படங்களிலும் நடிக்க நான் ரெடி.”
“சினிமா தவிர உங்கள் டைம் பாஸ்?”
“ஹைவேஸில் வேகமாக பயணிப்பது மிகவும் பிடிக்கும். அண்மையில் அமெரிக்காவில் இருக்கும்போது எனக்கு சொந்தமான மசாராட்டி வகையான காரில் பயணித்தபோது அதிகமான சந்தோஷத்தை அடைந்தேன். அந்த காரை இங்கு கொண்டு வந்தாலும் அதற்குரிய சாலைகள் இங்கு குறைவு. சாலைப் பாதுகாப்பு முக்கியம் என்பதால் நம்மூருக்கு அடக்கமாக இருக்கும் சின்ன ரக கார்களில் நேரம் கிடைத்தால் சென்னையை ஒரு ரவுண்ட் அடிப்பேன்.”
- சுரேஷ்ராஜா
|