விடாக்கண்டன் கொடாக்கண்டன்!



சினிமாவுக்கு கதை எழுத கத்துக்கலாம்!

மாணவன் 27

‘தனி ஒருவன்’ படத்தை மறக்க முடியுமா?
அந்தப் படத்தின் கதை ஃபார்முலாவை இப்படி பிரித்துப் பாருங்கள்.முற்பாதியில் ஹீரோவான ஜெயம் ரவி, வில்லனான அரவிந்த்சாமிக்கு தண்ணீ காட்டுகிறார். யார் தன்னுடைய திட்டங்களை குலைப்பது என்று மண்டைகாயும் அரவிந்த்சாமி, அது ஜெயம் ரவிதானென்று
கண்டுபிடிக்கிறார்.

இரண்டாம் பாதி அப்படியே உல்டா. இப்போது ரவிக்கு அரவிந்த்சாமி அபாரமாக லந்து கொடுக்கிறார்.இந்த cat & mouse விளையாட்டு, பல வெற்றிகரமான படங்களின் கதைக்கருவாக அமைந்திருக்கிறது.இவ்வகை கதைகளை செய்ய தேவையான பொருட்கள்.

* ஒரு வலுவான பிரச்சினை
* அந்த பிரச்சினையை ஏற்படுத்துபவர்
* அந்த பிரச்சினையை தீர்த்து வைப்பவர்
வலுவான பிரச்சினை என்று எதை எடுத்துக் கொள்ளலாம்?

ஜல்லிக்கட்டு பிரச்சினையையே எடுத்துக் கொள்ளலாம். மக்கள் விளையாடும் இந்த விளையாட்டை கைப்பற்ற நினைக்கிறார் ஒரு கார்ப்பரேட் மாஃபியா. ஐ.பி.எல். விளையாட்டை போல ஐ.ஜே.பி.எல் (இண்டியன் ஜல்லிக்கட்டு ப்ரீமியர் லீக்) நடத்தி பல்லாயிரம் கோடிகளை சுருட்ட நினைக்கிறார் அந்த வில்லன்.

இந்த திட்டத்தை ஜல்லிக்கட்டு மாடுபிடிவீரனான அலங்காநல்லூர் இளைஞன் ஒருவன் தகர்க்கிறான். அவனது திட்டப்படியே மெரீனாவில் மகத்தான மாணவர் போராட்டம் நடக்கிறது என்று கதையை நகர்த்திச் சென்றால் படம் ஹிட்டா இல்லையா?


இம்மாதிரி கதைகளில் முதல் பாதியில் வில்லன் ஹீரோவை துரத்தி துரத்தி அடிக்கிறான் என்றால், இரண்டாம் பாதியில் ஹீரோ வில்லனை துரத்தி துரத்தி அடிக்க வேண்டும். இந்த காட்சி களில் ரசிகர்கள் ரசிக்கக்கூடிய அளவுக்கு ஃபேன்டஸி கலந்திருந்தால் போதும். கலகலப்பான ஜனரஞ்சகப் படம் தயார்.

இம்மாதிரி கதைகளை எழுதும்போது ஒரு விஷயத்தை மட்டும் மிகவும் கவனமாக செய்யவேண்டும். ஹீரோவை விட வில்லன் பாத்திரம் வலுவானதாக அமைந்தால்தான் இரண்டரை மணி நேரத்துக்கு டென்ஷனைத் தக்கவைக்க முடியும்.

எப்படியும் இறுதியில் ஹீரோதான் வெல்லுவான் என்பது ரசிகர்களுக்கு தெரியும். இருந்தாலும் அப்படியாப்பட்ட வில்லனை, இப்படியாப்பட்ட ஹீரோ எப்படி ஜெயிக்கப் போகிறானோ என்கிற பதட்டம் அவர்களுக்கு நிலவும். இந்த பதட்டம்தான் இவ்வகை படங்கள் கட்டக்கூடிய கல்லாவுக்கு அச்சாரம்.

(கதை விடுவோம்)