100 வது படம்!
நூறு என்பது உலகம் முழுக்கவே ஸ்பெஷல்தான். வாழ்த்தும்போது கூட ‘நூறாண்டு வாழ்க’ என்றுதான் வாழ்த்துகிறார்கள். சினிமாத்துறை மட்டும் விதிவிலக்கா என்ன? இதுவும் நூறு என்கிற எண்ணை கொண்டாடக்கூடிய துறைதான். நூறாவது படம் என்பது இத்துறையில் ஈடுபட்டிருக்கும் ஒவ்வொருவரின் லட்சியம். அவ்வாறு லட்சியத்தை எட்டியவர்களின் நூறாவது படங்கள் பற்றிய குறிப்புகள், ‘வண்ணத்திரை’ வாசகர்களுக்காக...
ஒளிவிளக்குசினிமாவில் மட்டுமல்ல நிஜத்திலும் முதல்வர் ஆனவர் எம்.ஜி.ஆர். அவர் நடிப்பில் நூறாவது படமாக ‘ஒளிவிளக்கு’ அமைந்தது. இந்தப் படத்தை இயக்கியவர் சாணக்யா. ஜெமினி நிறுவனம் தயாரித்தது. 1984ல் முதல்வராக இருந்தபோது எம்.ஜி.ஆர் உடல்நலம் குன்றி அமெரிக்காவின் ப்ரூக்ளின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அப்போது இந்தப் படத்தில் இடம்பெற்ற ‘இறைவா உன் மாளிகையில்’ என்கிற பாடல் தமிழகம் முழுக்கவும் ஒலிபரப்பப்பட்டு, அவர் உடல்நலம் தேற மக்கள் பிரார்த்தித்தனர்.
நவராத்திரி
கெட்டப்புகளில் அசத்தும் நடிகர் திலகம் ஒன்பது வேடங்களில் பின்னி பெடலெடுத்த இந்தப் படமே அவரது நூறாவது படமாக அமைந்தது. ஒன்பது கதாபாத்திரங்களையும் சந்திக்கும் கேரக்டராக நடிகையர் திலகம் சாவித்திரி நடித்திருந்தார். இயக்குநர் ஏ.பி.நாகராஜன் அவர்களின் திறமையை பறைசாற்றிய படங்களில் ஒன்று.
இதயம் பார்க்கிறது
ஜேம்ஸ்பாண்ட் பாணி படங்களில் நடித்த ஜெய்சங்கரின் நூறாவது படம் உணர்ச்சிகரமான கதையைக் கொண்டது என்பது ஆச்சரியம். பார்வையற்ற இளைஞராக அவர் வெகுசிறப்பாக நடித்திருந்த இந்தப் படத்தில் ‘யானையின் பலம் எதிலே?’ பாட்டு சூப்பர்ஹிட்டு.
சொர்க்கத்தின் திறப்புவிழா
இயக்குநர் ராமண்ணா தயாரித்து இயக்கிய இப்படம் ரவிச்சந்திரனின் நூறாவது படம். ‘நான்’, ‘மூன்றெழுத்து’ என்று ரவிச்சந்திரனின் ஆரம்பகால வெற்றிப் படங்களை இயக்கியவர் ராமண்ணாதான் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனாலும், இந்தப் படம் எதிர்பார்த்த வெற்றியை எட்டவில்லை.
சீதா
சினிமாவில் மட்டுமல்ல, நிஜத்திலும் ஜோடி ஆனவர்கள் ஜெமினி கணேசன் - சாவித்திரி. இந்த காதல் பறவைகள் இருவருக்குமே ‘சீதா’ நூறாவது படமாக அமைந்தது யதேச்சையான ஒற்றுமை.
நத்தையில் முத்து
தாழ்த்தப்பட்ட பெண்ணை காதலிக்கும் பிராமண இளைஞராக முத்துராமன் நடித்த இந்தப் படமே அவரது நூறாவது படம். கே.ஆர்.விஜயா அவருக்கு ஜோடி. இயக்குநர் திலகம் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கிய இந்தப் படத்துக்கு ‘ஏ’ சான்றிதழ் கொடுக்கப்பட்டது.
ரோசாப்பூ ரவிக்கைக்காரி
பொதுவாக நட்சத்திரங்களின் நூறாவது படம், பெரிய வெற்றியை எட்டுவதில்லை. இந்த நடைமுறையை உடைத்தவர் சிவக்குமார். அவரது நூறாவது படத்தை ‘அன்னக்கிளி’ தேவராஜ் - மோகன் இயக்கினார்கள். அப்பாவி கிராமத்து இளைஞராக மிகவும் யதார்த்தமாக நடித்திருந்தார் சிவக்குமார். இவரது கவர்ச்சி மனைவியாக தீபா, ‘A’ஒன்னாக நடித்திருந்தார். இளையராஜாவின் இசையில் பாடல்கள் இன்றும் ஹிட்டு.
அவசர போலீஸ் 100
தன்னுடைய நூறாவது படத்தில் டைட்டிலிலேயே 100 என்கிற எண்ணை கொண்டுவந்த பாக்யராஜின் புத்திசாலித்தனத்தை எவ்வளவு மெச்சினாலும் தகும். எம்.ஜி.ஆர் நடித்து வெளிவராமல் இருந்த ‘அண்ணா நீ என் தெய்வம்’ படத்திலிருந்த சில காட்சிகளை எடுத்து ஒட்டவைத்து, இந்தப் படத்தை உருவாக்கினார். பாக்யராஜின் வழக்கமான ‘பலான’ மேட்டர்கள் (இரட்டை வேடத்தில் நடித்தார். ஒரு பாக்யராஜுக்கு சிலுக்கு ஹீரோயின்) தூக்கலாக இருந்தும், அவரது வழக்கமான வெற்றியை இப்படம் எட்டவில்லை.
ராகவேந்திரர்
தன்னுடைய நூறாவது படம், ராகவேந்திரர் என்கிற மகானைக் குறித்த படமாக இருக்க வேண்டும் என்று நடிக்க ஆரம்பித்த ஆரம்ப காலத்திலேயே திட்டமிட்டு விட்டார் ரஜினிகாந்த். அவரது நடிப்பில் உச்சம் தொட்ட இப்படம், வழக்கமான வசூலில் அவ்வளவாக சோபிக்கவில்லை.
ராஜபார்வை
சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கிய ‘ராஜபார்வை’, கமலுக்கு நூறாவது படம். வெளிவந்த காலத்தில் பெரிய வெற்றியைப் பெறவில்லை என்றாலும், இன்றும் நினைவுகூறக்கூடிய சிறப்பான திரைப்படமாகவே இது இருக்கிறது. பார்வையற்ற இளைஞராக நடித்த கமலுக்கு, மாதவி ஜோடி. இளையராஜாவின் ‘அந்திமழை பொழிகிறது’ வானொலியிலும், டிவியிலும் ஒலி-ஒளிபரப்பப்படாத தினங்களே இத்தனை ஆண்டுகளாக இல்லை எனலாம்.
ராஜகுமாரன்
இளையதிலகத்தின் நூறாவது படத்துக்கு மிகவும் பொருத்தமான தலைப்பு. ஜனரஞ்சகமான அம்சங்கள் நிறைந்த இந்தப் படத்தை ஆர்.வி.உதயகுமார் இயக்கினார். கவுண்டமணி - செந்தில் - வடிவேலு கூட்டணியில் காமெடி வெகுவாக பேசப்பட்டது.
வாத்தியார் வீட்டு பிள்ளை
வாத்தியார் ரசிகனான சத்யராஜ், தன்னுடைய நூறாவது படத்துக்கு வைத்த டைட்டிலே பெரும் எதிர்பார்ப்புகளை கிளப்பியிருந்தது. வெற்றிப்படம்தான் என்றாலும், சத்யராஜுக்கு அப்போதிருந்த மாஸை ஒப்பிடுகையில் ஆஹா ஓஹோவென்று சொல்லிக் கொள்ளும்படி ஓடவில்லை.
திருமாங்கல்யம்
மறைந்த முதல்வர் ஜெயலலிதா நடித்த நூறாவது படம். சுயநினைவில்லாதபோது ஒரு பெண்ணுக்கு தாலி கட்டப்படுகிறது. தான் அறியாமல் தனக்கு கட்டப்பட்ட மாங்கல்யத்தை அப்பெண் ஏற்றுக் கொள்வதா வேண்டாமா என்கிற கேள்வியை முன்வைத்து எடுக்கப்பட்ட இப்படம், வெளியான காலத்தில் சமூகத்தில் ஏராளமான அதிர்வுகளை ஏற்படுத்தியது. ஹீரோவாக முத்துராமன் நடித்திருந்தார்.
தீர்க்க சுமங்கலி
புன்னகை அரசி கே.ஆர்.விஜயாவின் நூறாவது படம். ஏ.சி.திருலோகசந்தர் இயக்கியிருந்தார். ‘மல்லிகை என் மன்னன் மயங்கும்’ என்கிற அபாரமான பாடல் இடம்பெற்ற திரைப்படம் இதுதான்.
திருப்பதி ஏழுமலை வெங்கடேசா
இயக்குநர்களுக்கு 100வது படம் அமைவது என்பது அரிதிலும் அரிது. அனேகமாக உலகிலேயே 126 படங்களை இயக்கிய இயக்குநராக இராம.நாராயணன் மட்டுமே இருப்பார். அவரது நூறாவது படம் இது. பிரபு, எஸ்.வி.சேகர், வடிவேலு, ரோஜா, ஊர்வசி, கோவை சரளா என்று நட்சத்திரப் பட்டாளம் குவிந்திருந்த இந்தப் படம் வசூலிலும் ஏமாற்றவில்லை. தெலுங்கு, கன்னட மொழிகளிலும் இப்படம் ரீமேக் ஆனது.
பார்த்தாலே பரவசம்
இயக்குநர் கே.பாலச்சந்தரின் நூறாவது படமாக இது அமைந்தது. மாதவன், சிம்ரன், ராகவாலாரன்ஸ், சினேகா நடித்திருந்த இத்திரைப்படத்தில் பாலச்சந்தர் தனக்கே உரிய முத்திரையை பதித்திருந்தாலும், படம் வெற்றியை எட்டவில்லை. இதற்குப் பிறகு அவர் ‘பொய்’ என்கிற ஒரே ஒரு படத்தை மட்டும் இயக்கியிருந்தார்.
|