புலியோடு நமீதா ரொமான்ஸ்!



உறுமிக் கொண்டு வருகிறான் புலி முருகன்

தம்மாத்தூண்டு ஏரியாதான் கேரளா. ஆனாலும், அவ்வப்போது பிரும்மாண்ட படங்களை எடுத்து மிரட்டுகிறார்கள். அந்தப் படங்களை தமிழிலும் டப்பாக்கி டப்பு பார்க்கிறார்கள். அந்த அடிப்படையில் சமீபத்தில் மலையாள இண்டஸ்ட்ரியை அதிரவைத்த திரைப்படம் ‘புலி முருகன்’.முப்பத்தியேழு கோடி ரூபாய் பட்ஜெட் என்பது மலையாளத்தைப் பொறுத்தவரை குருவி தலையில் பனங்காய்தான்.

ஆனால், ‘புலி முருகன்’ அதை வெற்றிகரமாக சுமந்தது. காரணம், ஹீரோ மோகன்லால். மலையாளத்திலேயே அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம்தான், மலையாளத்திலேயே அதிக வசூலை எடுத்த படம் என்கிற சாதனையையும் படைத்திருக்கிறது. நூறு கோடி ரூபாய் வசூலைத் தாண்டிய ‘புலி முருகன்’, ஏற்கனவே தெலுங்கு பேசிவிட்டார். இப்போது தமிழ் பேச வருகிறார்.

மோகன்லாலுக்கு ஹீரோயினாக கமலினி முகர்ஜி நடித்திருக்கிறார். கவர்ச்சிப் பெருங்கடல் நமீதாவும் நச்சென்று ஒரு கேரக்டரில் இடம் பிடித்திருக்கிறார். ஜெகபதிபாபு, லால், கிஷோர் என்று நட்சத்திரப்பட்டாளம் குவிக்கப்பட்டிருக்கும் இப்படத்தை இயக்கியிருப்பவர் வைஷாக். தமிழுக்காக வசனம் எழுதியிருக்கும் ஆர்.பி.பாலாவை பிடித்து படம் பற்றி விசாரித்தோம்.

“தன் கண் எதிரே தனது தந்தையை ஒரு புலி அடித்துக் கொல்வதை பார்க்கிறான் சிறுவன். அவனே அப்புலியைக் கொன்று பழி தீர்க்கிறான். அதன் பிறகு ஆட்கொல்லி புலிகளிடமிருந்து அந்த மலைப் பிராந்திய மக்களைக் காக்கும் பொறுப்பை அவன் ஏற்கிறான். அவர் புலிகளோடு மட்டு மல்ல, புலியைவிட கொடூரமான மனிதர்களோடும் போராட வேண்டியிருக்கிறது என்பதே கதை.

புலிகளோடு மோகன்லால் சண்டை போடும் ஸ்டண்ட் காட்சிகள் ஹாலிவுட் தரத்துடன் அமைக்கப்பட்டிருக்கிறது. ஸ்டண்ட் காட்சிகளை கம்போஸ் செய்திருப்பவர் பீட்டர் ஹெய்ன். ஆக்‌ஷன் ரசிகர்களுக்கு அந்த காட்சிகள் அற்புதமான அனுபவத்தைத் தரும்.மோகன்லாலின் முன்னாள் டாவு நமீதா. மனைவியாக கமலினி நடிக்கிறார். எசகுபிசகாக முன்னாள் டாவுவோடு அவரை தொடர்பு படுத்தி மனைவி மிரட்டும் காட்சிகள் வெடிச்சிரிப்பு கேரண்டி.

டப்பிங் படம் என்கிற வாசனை தெரியாத அளவுக்கு பர்ஃபெக்டாக செய்திருக்கிறோம். கோபி சுந்தர் இசையில் சினேகனும், நானும் பாடல்கள் எழுதியிருக்கிறோம். நமீதாவுக்கு இது தமிழில் ரீ-என்ட்ரி படமாக வருமளவுக்கு அவரது கவர்ச்சி பேசப்படும்.

நேரடிப் படங்களுக்கும், டப்பிங் படங்களுக்கும் வசனம் எழுதுவதில் நிறைய வித்தியாசங்களுண்டு. லிப் மூவ்மெண்ட் மற்றும் மண்சார்ந்த கலாச்சாரத்தை மனதில் வைத்து எழுத வேண்டும். டப்பிங் படங்களுக்கு வசனம் எழுதுவது தனிக் கலை. எல்லோராலும் முடியாது. எனக்கு இந்த டப்பிங் தொழிலில் இன்ஸ்பிரேஷனாக இருந்தவர் டப்பிங் டான் ஏ.ஆர்.கே.ராஜராஜா.

அவருடைய அடிச்சுவட்டை பின்பற்றியே எழுதியிருக்கிறேன்.ஜல்லிக்கட்டு மூடில் இருக்கும் தமிழர்களுக்கு ‘புலி முருகன்’ தடபுடல் விருந்து வைப்பான். விசிலடித்துக் கொண்டாட புலிப்பாய்ச்சலுக்கு தயாராகுங்கள் ரசிகர்களே!” என்று உற்சாகமாகப் பேசினார் ஆர்.பி.பாலா.

- சுரேஷ்ராஜா