வாத்தியார் ஏ.வெங்கடேஷ்



டைட்டில்ஸ் டாக் 4

(சென்ற இதழ் தொடர்ச்சி)


என்னுடைய படங்களில் வாத்தியார் கேரக்டர் நிறைய இருக்கும். எனக்கு பள்ளி, கல்லூரிகளில் பாடம் நடத்திய வாத்தியார்களை அப்படியே இந்த கேரக்டர்களுக்குள் கொண்டு வருவேன். ‘வாத்தியார்’ படத்தில் அர்ஜுன் ஸ்கூல் வாத்தியாராக வருவாரே, ஆக்சுவலாக என் காலேஜ் வாத்தியார் ஒருவரின் கேரக்டர்தான் அது.

சினிமாவில் எனக்கு வாத்தியார் என்றால் அது இயக்குநர் கே.ராஜேஷ்வர் அவர்கள்தான். பிரமாதமான கதாசிரியர். ‘அவள் அப்படித்தான்’, ‘பன்னீர் புஷ்பங்கள்’, ‘கடலோரக் கவிதைகள்’ உள்ளிட்ட கதைக்காக பேசப்பட்ட படங்களை எழுதியவர். ஒரு கதையை எப்படி உருவாக்குவது, அதற்குக் காட்சிகளை எப்படி அடுக்குவது, திரைக்கதை, வசனம் உள்ளிட்ட நுணுக்கங்களை எனக்கு கற்றுக் கொடுத்தவர் அவர்தான்.

அவரிடம் கற்றுக் கொண்ட அனுபவத்தை வைத்துக் கொண்டு தான் இயக்குநர் பவித்ரனிடம் போய் சேர்ந்தேன். சினிமா என்பது டேபிளில் மட்டும் உருவாவது அல்ல. படப்பிடிப்பில் உழைத்து உருவாக்க வேண்டிய கலை என்பதை பவித்ரனிடம்தான் அறிந்தேன். அவருடன் இருந்தபோதுதான் ஷங்கரின் நட்பு கிடைத்தது.  தொழில் நுணுக்கங்களை எனக்கு கற்றுக் கொடுத்த வாத்தியார் அவர்.  ஷங்கர் இயக்கிய ‘ஜென்டில்மேன்’, ‘காதலன்’ படங்களில் வேலை செய்தபோது ஒருங்கிணைப்பு குறித்த தெளிவு கிடைத்தது.

இவர்கள் மூவரிடம் நான் கற்றுக் கொண்டதைத்தான் என்னை வாத்தியார் என்று கருதும் என்னுடைய உதவியாளர்களுக்கு நான் சொல்லிக் கொடுக்கிறேன். ஃபீல்டில் நான் கண்டிப்பான வாத்தியார் என்று பெயர் பெற்றவன். தனிமனித ஒழுக்கம், தொழில் நேர்த்தி, கவனம் சிதறாமை, நேர மேலாண்மை, பொறுப்பு போன்ற விஷயங்களில் என் உதவி இயக்குநர்களிடம் நான் ரொம்பவும் கண்டிப்பாக நடந்து கொள்கிறேன். அதனால்தான் என்னிடம் கற்றுக் கொண்டவர்களும் நல்ல நிலைமைக்கு வந்திருக்கிறார்கள்.

லிங்குசாமி, எஸ்.ஆர்.பிரபாகரன், கனகசபாபதி, ஸ்டீபன், திருக்குமரன், கிங்ஸ்லி உள்ளிட்ட என் மாணவர்கள், நான் கற்றுக் கொடுத்ததை மறக்காமல் அவர்களுடைய உதவியாளர்களுக்கு பாடம் எடுக்கிறார்கள். சினிமா ஒரு குருகுலம். இப்படியே மரபாக நாம் கற்றவை நமக்கு அடுத்தடுத்து வருபவர்களுக்கு கடத்தப்பட்டுக் கொண்டே இருக்கும்.

சினிமாத்துறையில் வாத்தியார் என்றால் அது எம்.ஜி.ஆர் அவர்களையே குறிக்கும். சினிமாவில் நல்ல கருத்துகளை மட்டுமே பாடம் மாதிரி சொல்ல வேண்டும் என்பதை திரும்பத் திரும்ப வலியுறுத்தியதோடு, சினிமாவுக்கு வெளியேவும் மக்களுக்கு பாடம் எடுத்தவர் என்பதால் அவரை வாத்தியார் என்றார்கள்.

ஆனால், எல்லா சினிமாக்காரர்களுக்குமே இன்னொரு வாத்தியார் உண்டு. அவர் பாக்யராஜ். எனக்கும் இவர் மானசீகமான குரு. திரைக்கதை எழுதுவதில் மன்னன் என்று நாடு முழுக்க பேரெடுத்தவர். இவரிடம் உதவியாளராக சேர அந்தக் காலத்தில் அவ்வளவு போட்டா போட்டி நடக்கும். நானும் இவரிடம் வேலைக்கு சேர முயற்சித்தவன்தான்.

இப்போதும் திரைக்கதை எழுதிக் கொண்டிருக்கும்போது எனக்கு ஏதேனும் இடத்தில் அப்படியே தடுக்கிவிட்டால், பாக்யராஜ் எடுத்த படம் எதையாவது டிவிடியில் பார்ப்பேன். சட்டென்று பொறி பிறக்கும். ‘வாங்க சினிமா பற்றி பேசலாம்’ என்று அவர் எழுதியிருக்கிற புத்தகம், ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு சர்வதேச நூலகங்களில் வைக்கப்படுமளவுக்கு சினிமாவை அக்குவேறு ஆணிவேறாக அலசியிருக்கிறது. அந்த நூலை வாசித்த பாதிப்பில் நானும் ஒரு நூல் எழுதினேன் - ‘விக்னேஷ்வரனாகிய நான்’.

என்னுடைய மானசீகமான வாத்தியார் பாக்யராஜை என்னுடைய ஒரு படத்திலாவது நடிக்க வைக்க வேண்டுமென்று அவ்வளவு ஆசைப்பட்டேன். இதுவரை அமையவில்லை. அவருடைய ஒரு படத்தையாவது ரீமேக் செய்து, அவரை பெருமைப்படுத்த வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.
வாழ்க்கையிலும் சரி, சினிமாவிலும் சரி, வாத்தியார்களின் பங்களிப்பு அளப்பரியது. அவர்களை மறந்தவனுக்கு மன்னிப்பே கிடையாது.

எழுத்தாக்கம் : சுரேஷ்ராஜா
(தொடரும்)