அதே கண்கள்



காதலுக்கு கண்ணில்லை!

இளமைப் பருவத்திலேயே பார்வையை இழக்கும் ஹீரோவின் கதை என்பதால் படத்துக்கு அவ்வளவு கச்சிதமாக பொருந்துகிறது டைட்டில்.பார்வை இல்லையென்றாலும் ஹீரோ கலையரசன் சமையலில் கெட்டி. சொந்தமாக ஹோட்டல் நடத்துகிறார். ஜர்னலிஸ்டான ஜனனி இவரை காதலிக்கிறார். ஆனால், காதலை வெளிப்படுத்தவில்லை. கலைக்கோ ஷிவதா மீது லவ்வு.

திடீரென சாலை விபத்தில் சிக்கும் கலையரசனுக்கு மெடிக்கல் மிராகிளாக இழந்த பார்வை திரும்பக் கிடைக்கிறது. ஷிவதாவைத் தேடுகிறார். அவரைத் தேடும் முயற்சியின் போதுதான் தான் நன்றாக ஏமாற்றப்பட்டதை உணர்கிறார்.ஷிவதா யார்? அவரை கலை கண்டுபிடித்தாரா? ஜனனியின் லவ் என்ன கதியானது என்பதெல்லாம் விறுவிறு கிளைமேக்ஸ்.

‘மெட்ராஸ்’ கலையரசன், இதில் முழுநீள ஹீரோவாகி இருக்கிறார். பார்வையற்ற இளைஞனாக அவரது நடிப்பு சிறப்பு. பார்வை வந்த பின்பு கம்பீரத்தையும் காட்டத் தவறவில்லை. படம் முழுக்கவே கேரக்டருக்கு எது தேவையோ அதை மட்டுமே கச்சிதமாக கொடுத்திருக்கிறார் கலை.

ஜனனிக்கு அதிக வேலை இல்லை. ‘நெடுஞ்சாலை’ ஷிவதா, வசீகர அழகினாலும் இயல்பான நடிப்பாலும் ரசிகர்களின் நெஞ்சை டச் செய்கிறார். பாலசரவணன், வழக்கம்போல கெக்கேபிக்கே என நகைக்க வைக்கிறார்.

ஜிப்ரான் இசையில் பாடல்களும், பின்னணியும் நன்று. ஒளிப்பதிவளர் ரவிவர்மன் நீலமேகத்தின் பங்களிப்பு படத்துக்கு மிகப்பெரிய பலம். கன்னியாகுமரி காட்சிகள் தியேட்டரை விட்டு வெளியே வந்த பிறகும் கண்முன் அப்படியே நிற்கின்றன.

முகிலின் வசனங்கள் நறுக்குத் தெறித்தாற்போல நச். சஸ்பென்ஸ் த்ரில்லர் ஜானரில் படம்  இருந்தாலும் காதல், காமெடி, இசை என அனைத்து அம்சங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து  கமர்ஷியல் எஃெபக்ட் கொடுத்திருக்கும் இயக்குநர் ரோஹின் வெங்கடேசன், தமிழுக்கு நம்பிக்கைக்குரிய புதிய வரவு.