மாற்றம் தந்தது மாற்றுத்திறன்!



மார்ச் மாதத்தில் மணக்கோலம் காணும் மகிழ்ச்சியில் இருக்கிறார் திரைப்பட பின்னணிப்பாடகி வைக்கம் விஜயலட்சுமி. பிறக்கும்போதே இழந்த பார்வை, திடீரென கிடைக்கப்பெற்றதில் கூடுதல் மகிழ்ச்சியில் குதூகலிக்கிறார்.

விஜயதசமி நாளில் பிறந்ததால், அப்பா முரளிதரனும் அம்மா விமலாவும் குழந்தைக்கு விஜயலட்சுமி என்று பெயரிட்டார்கள். பார்வையற்றவளாகப் பிறந்துவிட்டாளே என்கிற கவலை அவர்களை வாட்டியது. குழந்தை வளர, வளர அவளுக்குள் இருக்கும் மாற்றுத்திறன் வெளிப்பட்டது. எந்தப்பாடலைக் கேட்டாலும் சுருதி சுத்தமாக அப்படியே பாடும் வல்லமை விஜயலட்சுமிக்கு வாய்த்தது.

எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜாவின் திரைப்பாடல்கள் மற்றும் கே.ஜே.ஏசுதாஸ் பாடிய கிளாஸிக்கல் ஆகியவை விஜயலட்சுமியின் பாட்டுப்பயணத்துக்கு பாதை அமைத்துக் கொடுத்தன.கேள்வி ஞானத்தால் சங்கீதம் கற்றுத் தேர்ந்த விஜயலட்சுமியின் அரங்கேற்றம் வைக்கத்தில் உள்ள சாத்தாம்குடி ஆலயத்தில் நடந்தது. பின்னர் மும்பை சண்முகானந்தா ஹாலில் மாபெரும் கச்சேரியை நடத்தினார். மானசீக குருவாக இவர் கருதும் ஏசுதாஸ், இவரது சங்கீதத் திறனை வியந்து பாராட்டியிருக்கிறார்.

முதல் 10 வருடங்களில் சென்னையிலுள்ள முக்கிய சபாக்களில், 400க்கும் மேற்பட்ட கச்சேரிகளை நிகழ்த்தியிருக்கிறார். ஒற்றை நரம்புடன் கூடிய வீணையில் இவர் நிகழ்த்திய சங்கீத சாதனையைக் கண்டு வியந்த இசைமேதை குன்னக்குடி வைத்தியநாதன் அந்த வீணைக்கு ‘காயத்ரி வீணை’ என பெயர்சூட்டி பெருமைப்படுத்தியிருக்கிறார். குருவாயூரில் நடந்த செம்பை சங்கீதோத்ஸவம் விழாவில், பார்வையற்ற இவரது வீணை வாசிப்பு, பார்வையாளர்களைப் பரவசப்படுத்தியது.

விஜயலட்சுமியின் 31ஆம் வயதில் ஜெயச்சந்திரன் அழைத்து, ‘செல்லுலாய்டு’ படத்தில் பாடவைத்தார். ‘காட்டே… காட்டே…’ என்கிற அந்தப்பாடல் கேரள மாநில அரசு விருது மற்றும் பல்வேறு அமைப்புகளின் விருதுகளைக் குவித்தது. ‘நாடன்’ படத்தில் பாடிய ‘ஒட்டக்கு பாடுன…’ பாடல், இவருக்கு கேரள அரசின் ‘சிறந்த பின்னணிப் பாடகி’ விருதை வாங்கித்தந்தது. ‘குக்கூ’ படத்தில் சந்தோஷ் நாராயணன் இசையில் பாடிய’ கோடையில.....’ இவரை தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தியது.

‘வெள்ளக்கார துரை’யில் ‘காக்கா முட்ட....’, ‘ரோமியோ ஜூலியட்’டில் ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரி’, ‘பாகுபலி’யில் ‘சிவச் சிவாய போற்றி…’, ‘தெறி’யில் ‘என் ஜீவன்’, ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ படத்தில் ‘சொப்பன சுந்தரி…’ என ஹிட் பாடல்களைக் கொடுத்து, தமிழ் ரசிகர்களுக்கு ரொம்பவே நெருக்கமாகிவிட்ட விஜயலட்சுமி, சென்னையையே சொந்த ஊராகப் பாவித்து, இங்கேயே வசித்து வருகிறார்.

- நெல்லைபாரதி