போக்கிரி ராஜா



கொட்டாவி விட்டவனின் கதை

‘தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்’ படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் ராம் பிரகாஷ் ராயப்பாவின் அடுத்த படம்.அளவுக்கு அதிகமாக கொட்டாவி விடுவதன் காரணமாகவே வேலையை இழக்கிறார் ஜீவா.

இவரின் நண்பர் யோகிபாபுவின் ரெகமண்டேஷன் மூலம் ஹன்சிகா வேலை செய்யும் கம்பெனியில் சேர்கிறார். பொது இடங்களில் சிறுநீர் கழிப்போர் மீது தண்ணீர் லாரியில் சென்று பீய்ச்சி அடிக்கும் சமூக சேவை செய்கிறார் ஹன்சிகா. அந்த சேவையில் ஜீவாவும் இணைந்து கொள்கிறார்.

 ஆரம்பத்தில் ஜீவாவும் ஹன்சிகாவும் மோதிக்கொண்டாலும் ஒரு கட்டத்தில் காதலிக்க ஆரம்பிக்கிறார்கள். அப்படி ஒரு நாள் லோக்கல் தாதா சிபிராஜ் மீது தண்ணீரை பீய்ச்சி அடிக்கும்போது, நடுரோட்டில் வேட்டி அவிழ்ந்து அவமானப்படுகிறார் சிபிராஜ்.

 பழிக்குப் பழியாக ஜீவாவை பழி வாங்க சிபிராஜ் பிளான் பண்ணுகிறார். ஒரு கட்டத்தில் தன்னிடம் இருக்கும் விசேஷ சக்தி மூலம் சிபிராஜைத் தாக்குகிறார் ஜீவா. அந்த மோதலில் சிபிராஜின் கண் பார்வை பாதிக்கப்படுகிறது. சிபிராஜுக்கு மீண்டும் கண்பார்வை கிடைக்கும்போது என்ன நடக்கிறது என்பது க்ளைமாக்ஸ்.

வித்தியாசமான கதையில் தன்னை நிலைநிறுத்திக்  கொள்ள முயற்சித்திருக்கிறார் ஜீவா. வழக்கமான தன் நடிப்பு மூலம் கேரக்டருக்கு வலிமையும் சேர்த்திருக்கிறார். பிரமாண்டமான பில்டப்புடன் என்ட்ரி கொடுக்கிறார் சிபிராஜ்.

கண் பார்வை இழந்த பிறகும்  அவர் அடிக்கும் லூட்டி ரசிக்க வைக்கிறது. வழக்கம்போல் கொஞ்சம் சிரித்து ஓவர் க்ளாமர் காட்டுகிறார் ஹன்சிகா. யோகி பாபு, ராம்தாஸ் கூட்டணி சிரிக்க வைக்கிறது. இவர்களோடு மயில்சாமி, மனோபாலா ஆகியோரும் தங்கள் பணியை சிறப்பாகச் செய்திருக்கிறார்கள்.   

இமான் இசையில் ‘அத்துவுட்டா’ பாடல் தாளம் போட வைக்கிறது. ஆஞ்சநேயலுவின் ஒளிப்பதிவு கதைக்கு பலம் சேர்த்திருக்கிறது. கொட்டாவி  நோயால் பாதிக்கப்பட்ட ஒருவனின் வாழ்க்கையை வித்தியாசமாக சொல்லியிருக்கிறார் இயக்குனர் ராம் பிரகாஷ்.  பொது இடத்தில் சிறுநீர் கழிப்பவர்களை எப்படி தண்டிக்கலாம் என்ற மெசேஜ் சொன்ன காரணத்துக்காகவே இயக்குனரைப் பாராட்டலாம்.