பாலசந்தர் பாராட்டிய பூ வாசம்!
வள்ளியூரில் சுப்பையா - மாணிக்கம் அம்மாள் பெற்றோரின் ஐந்தாவது மகனாகப் பிறந்தார் எஸ்.எஸ்.குமரன். திருக்கரங்குடியில் தொடக்கக் கல்வி பயின்றவர், ஆறாம் வகுப்பு முதல் மேல்நிலை இரண்டாம் ஆண்டுவரை வள்ளியூரில் படித்தார். பின்னர் ஆரல்வாய்மொழி அறிஞர் அண்ணா கல்லூரியில் இளநிலை விலங்கியல் பட்டம் பெற்றார்.
திருநெல்வேலி வானொலியில் ஒலிபரப்பாகும் இசையருவி நிகழ்ச்சியை தவறாமல் கேட்கும் பழக்கமுடைய குமரனுக்கு பாடல்கள் மீது காதல் பிறந்தது. வரவேற்பு பெற்ற பாடல்களின் மெட்டில் சுய வார்த்தைகளைப் போட்டு, நண்பர்களிடம் பாடிக்காட்டுவதும், ஒரு பாடலை இன்னொரு பாட்டின் மெட்டில் மாற்றிப் பாடுவதும்,
நண்பர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுத் தந்தது. ஆசிரியராக இருந்த அப்பாவுக்கு, மகனை மருத்துவராக, பொறியாளராக, வழக்கறிஞராகப் பார்க்கவேண்டும், குறைந்தபட்சம் ஒரு அரசு ஊழியராக என்பது லட்சியமாக இருந்தது. சினிமாவில் சேர்ந்து இசையமைப்பாளராக புகழ்பெறவேண்டும் என்பது குமரனின் லட்சியமாக இருந்தது.
சென்னை திரைப்படக்கல்லூரியில் ஒளிப்பதிவுத்துறையில் இடம்பெற்று, சிறந்த மாணவனாக வலம்வந்தார் குமரன். அண்ணனின் நண்பராக இருந்த இயக்குநர் செய்யாறு ரவியின் உதவியில், ‘உறுதிமொழி’ படத்தின் பாடல்பதிவைப் பார்க்கும் வாய்ப்பு குமரனுக்குக் கிடைத்தது. இளையராஜாவின் அசைவுகளையும், இசையின் அதிர்வுகளையும் கண்ணாடிக்கு வெளியே நின்று தரிசனம் செய்தார் குமரன்.
சென்னைத்துறைமுகத்தில் புதிதாக துவங்கப்பட்ட ஆடியோ - விஷுவல் பணிக்கு தேர்வானார். பத்தாண்டுகள் அதே பணியில் நீடித்த குமரனுக்கு, ‘இது போதும். சினிமா இசையமைப்பாளர் ஆவதற்கு முயற்சி செய்வோம்’ என்ற எண்ணம் உதித்தது. அலுவலகப்பணிக்கு மூன்றுமாத விடுப்பு போட்டார்.
30 லட்ச ரூபாய் செலவில் இசையமைப்பு சம்பந்தப்பட்ட கருவிகளை வாங்கி, வீட்டிலேயே ஒரு இசைக்கூடத்தை அமைத்தார். இசையின் அரிச்சுவடி அறிந்திராத நிலையில், சுயமாகவே ராகத்தையும் தாளத்தையும் கற்றுக்கொண்டார் குமரன். நான்கு பாடல்களை எழுதி, மெட்டுப்போட்டு, சொந்தக்குரலில் பதிவுசெய்திருந்தார் குமரன்.
சென்னை கே.கே.நகர் சிவன் பூங்காவில் தினமும் நடைப்பயிற்சி செய்துவந்த குமரனின் மனைவி லட்சுமி, அங்கே இயக்குநர் சசி வருவதைப் பார்த்திருக்கிறார். கணவர் பதிவுசெய்து வைத்திருந்த பாடல்கள் அடங்கிய சிடியை சசியிடம் கொடுத்து, ‘இவர் தேறுவாரா இல்லையா என்பதைக் கேட்டுப் பார்த்துச் சொல்லுங்கள்’ என்று வேண்டியிருக்கிறார். அடுத்த இரண்டுமணி நேரத்தில் சசியிடமிருந்து குமரனுக்கு தொலைபேசி அழைப்பு வந்திருக்கிறது.
‘உங்கள் பாடல்களைக் கேட்டேன். பிடித்திருந்தது. இப்போது நான் எடுக்கும் படம், எனது கனவுத்திட்டம். கிராமியக்கதைக்கு உங்களால் இசையமைக்க முடியுமா?’ என்று கேட்டிருக்கிறார் சசி. முடியும் என்று வார்த்தையாலும் கண்களாலும் சொன்ன குமரனிடம், ஒரு பாட்டுக்கான சூழலைக் கொடுத்து, ‘பத்து பேரிடம் இதே சூழலைக் கொடுத்திருக்கிறேன். யார் சிறப்பாகச் செய்கிறார்களோ அதையே பயன்படுத்துவேன்’ என்று சொல்லியிருக்கிறார்.
சி.டியை வாங்கிக்கொண்டு வீட்டுக்கு வந்த ஒருமணி நேரத்தில், சசியைத் தொடர்புகொண்டு, ‘சார்! பாட்டு ரெடி. வந்து கேட்கமுடியுமா?’ என்று கேட்டிருக்கிறார் குமரன். ‘என்ன விளையாடுறீங்களா? இது சினிமாங்க. அவசரகதியில எல்லாம் பாட்டு போடக்கூடாது’ என்று சொன்ன சசி, அரைகுறை மனதோடு, குமரனின் இசைக்கூடத்துக்கு வந்து கேட்டார். பாடல் முடிந்து பக்கத்தில் பார்த்த குமரனுக்கு அதிர்ச்சி. சசியைக் காணவில்லை. வெளியே வந்து பார்த்தால், ஹாலில் உட்கார்ந்து, அழுதுகொண்டிருக்கிறார் சசி.
‘என் படத்துக்கு நீங்கள்தான் இசையமைப்பாளர். அசத்துங்கள்’ என்று வாழ்த்தி, வாய்ப்புக் கொடுத்துச் சென்றிருக்கிறார் சசி. மளமளவென்று இசைக்கோர்ப்பு செய்து, ஐந்து பாடல்களுக்கான மெட்டுகளையும் இயக்குநரிடம் கொடுத்திருக்கிறார் குமரன். எந்த மெட்டையும் மறுமுயற்சி செய்யச் சொல்லாமல், அப்படியே ஏற்றுக்கொண்டிருக்கிறார் சசி.
இசையமைப்பாளராக ‘பூ’ படத்தில் அறிமுகமாகி, அந்தப்படத்தின் பாடல்கள், அனைத்துத் தரப்பிலிருந்தும் அமோக ஆதரவை அள்ளிக்கொடுத்தது. பெரியகருப்புத்தேவர் பாடிய ‘சிவகாசி ரதியே’, சின்மயி குரலில் ‘ஆவாரம்பூ’, கார்த்திக், திப்பு, ஹரிணி கூட்டணிக்குரல்களில் ‘மாமன் எங்கிருக்கான்’,
சங்கர் மகாதேவன் பாடிய ‘தீனா தீனா’, என பட்டைையக் கிளப்பிய பாடல்களுள் தீட்டிய வைரமாக ஜொலித்தது ஸ்ரீமதி, மிருதுளா பாடிய ‘ச்சூ ச்சூ மாரி’. மும்பை பயணத்தின்போது ஒருமுறை, காரில் சிக்னலுக்காக காத்திருந்த குமரனின் காதுகளில், ‘ச்சூ ச்சூ மாரி...’ கேட்டிருக்கிறது. குரல் வந்த திசையில் கண்களைத் திருப்பினால், பார்வையற்ற ஒருவர் உற்சாகமாகப் பாடுகிறார். தனது இசைக்குக் கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமாக இதைக் கருதுகிறார் குமரன்.
சிறிய இடைவெளிக்குப்பின், இயக்குநர் சற்குணம் அழைத்து, ‘களவாணி’ பட வாய்ப்பைக் கொடுத்தார். அதில் இடம்பெற்ற ஸ்ரீமதுமிதா - ஹரீஷ் ராகவேந்திரா பாடிய ‘டம்ம டம்மா’ நல்ல வரவேற்பைப் பெற்றது.‘விருந்தாளி’யில் மகாலட்சுமி - ஹரிஹரன் பாடிய ‘எப்போது உன் ஜன்னல் திறந்தது...’, ‘நெல்லு’வில் சிம்பு - சைந்தவி பாடிய ‘கன்னக்கோலு திருடா...’,
‘தேநீர் விடுதி’யில் எஸ்.எஸ்.குமரன் - சின்மயி பாடிய ‘என்னவோ பண்ணுது...’ அதே படத்தில் மும்பை பாடகி சோனா முஹத்ராவை தமிழுக்கு அறிமுகம் செய்து பாடவைத்த ‘ஒரு மழை...’, ‘கேரள நாட்டிளம் பெண்களுடனே’வில் மோஹித் சௌகான் பாடிய ‘ஹலோ யாரது கடவுளா...’, இசையமைப்பாளர் ஜாஸி கிப்ட் பாடிய ‘கேரளா போல மண்ணுமில்ல...’, விஜய் பிரகாஷ், ரூப் குமார், ரத்தோட் பாடிய ‘கொள்ளை அழகே...’, ஜாவித் அலி பாடிய ‘ஆண்களை நம்பாதே...’ என அனைத்துப் பாடல்களும் குமரனின் இசைத் திறமைக்கு எடுத்துக்காட்டாக ஒலிக்கின்றன.
மு.களஞ்சியத்தின் உதவியாளர் சங்கரபாண்டியன் இயக்கத்தில் ‘பட்டதாரி’ தொடங்கி ஏழு படங்களுக்கு இசையமைத்து வருகிறார் குமரன். அப்பா- மகன் உறவைச் சொல்லும் ‘எல்.ஐ.சி’ படத்தை தயாரித்து இயக்கும் வேலையும் நடக்கிறது. மழைச் சேதத்தின்போது, இவர் உருவாக்கி, தேசிய விருதுபெற்ற குட்டிப்பாடகி உத்ரா உன்னி கிருஷ்ணன் பாடிய ‘வட கிழக்குப் பருவ மழையே..’ சிறப்புப்பாடல் மனிதநேயத்துக்கு நன்றிசொல்லும் கீதமாக அமைந்தது.
அறிமுகமான ‘பூ’ இவருக்கு மாநில அரசின் சிறந்த இசையமைப்பாளர் விருதை வாங்கிக் கொடுத்தது. ‘கேரள நாட்டிளம் பெண்களுடனே’ படத்தைப் பார்த்த இயக்குநர் சிகரம் கே. பாலசந்தர், ‘கேரள மண்ணின் வாசம் உங்கள் இசை யில் பூவாக மணக்கிறது’ என்று குமரனை வாழ்த்தியிருக்கிறார்.
25 ஆண்டுகளுக்கு முன், திரைப்படக் கல்லூரியில் சிறந்த குறும்படத்துக்கான விருதை பாலசந்தர் கையால் வாங்கியவர் குமரன்.கிராமியம், நகரப்பின்னணி என இரண்டு களத்திலும் இசை முத்திரை பதிக்க விரும்பும் குமரனின் பாட்டுச்சாலைப் பயணம் பாதுகாப்பான வேகத்துடன் செல்கிறது.
அடுத்த இதழில் பின்னணிப் பாடகர் எஸ்.என்.சுரேந்தர்
நெல்லைபாரதி
|