பிச்சைக்காரன்



தாய்க்காக பிச்சையெடுக்கும் கோடீஸ்வரன்!

நெகட்டிவ்வாக தலைப்பு வைத்தால் படம் ஓடாது என்பது சினிமா சென்டிமென்ட். அந்த மூடநம்பிக்கையை தகர்த்திருக்கிறான் பிச்சைக்காரன்.கிட்டத்தட்ட ஆயிரம் கோடி ரூபாய்க்கு அதிபதி விஜய் ஆண்டனி.

அவருடைய அம்மா தனி மனுஷியாக ஏற்படுத்திய மாபெரும் தொழில் சாம்ராஜ்யம் அது. திடீரென ஒரு விபத்தில் கோமா நிலைக்குப் போகிறார் ஆண்டனியின் அம்மா. எல்லாவகை மருத்துவத்தையும் பார்த்து அவர் குணமாகவில்லை. ஒரே மகன் துடிதுடித்துப் போகிறார்.

இந்தச் சூழலில் ஒரு சித்தர், “உன் அம்மா நலம் பெறவேண்டும் என்றால், நீ நாற்பத்தெட்டு நாட்கள் பிச்சை எடுத்து வாழ வேண்டும். நீ யார் என்றும், எதற்காக பிச்சை எடுக்கிறாய் என்பதையும் யாரிடமும் சொல்லக்கூடாது” என்று ஒரு வித்தியாசமான வேண்டுதலை அறிமுகப்படுத்துகிறார். அடுத்த நிமிடமே பகட்டு வாழ்க்கையை உதறி, அறிமுகம் இல்லாத ஊரில் பிச்சை எடுக்கிறார் விஜய் ஆண்டனி.

வேண்டுதல் பலித்ததா என்பதே மீதிக்கதை. தனக்கு எந்த மாதிரியான வேடங்கள் பொருத்தமாக இருக்கும் என்பதை மிக கவனமாகத் தேர்வு செய்து நடிக்கிறார் விஜய் ஆண்டனி. அவ்வகையில் படம் முழுக்க பிச்சைக்காரனாய் வாழ்ந்திருக்கிறார். நெகட்டிவ்வான டைட்டிலிலும், அழுக்கான கேரக்டரிலும் கூட என்னால் ஜொலிக்க முடியும் என முன்னணி ஹீரோக்களுக்கு சவால் விட்டிருக்கிறார்.

அம்மாவை நினைக்கும் போது சோகம், காதலியிடம் மோகம், வில்லன்களிடம் ஆக்ரோஷம் என எல்லாம் கலந்த கலவையாக பிச்சைக்காரனை மிக அழகாக ரசிக்கவைக்கிறார். ஆடி காரை சேதப்படுத்தும் காதலிக்காக அந்தக் காரின் ஓனர்  ஆடிப் போகுமளவுக்கு டயலாக் அடிக்கும் காட்சியில் அசரவைக்கிறார்.  டிராபிக் போலீஸிடம் மாட்டிக் கொள்ளும்போது, அந்த போலீஸிடம் ‘உண்மையைச் சொல்லும்’ காட்சியில் சபாஷ் போட வைக்கிறார்.

காதல் சந்தியா ஜாடையில் இருக்கும் சாட்னா டைட்டஸை இனி அதிகம் திரையில் பார்க்கலாம். யதார்த்தமான ரோலில் மிக யதார்த்தமாக நடித்திருக்கிறார். ‘தன்னுடைய காதலன் பிச்சையா எடுக்கப் போகிறான்’ என்று சொல்லி முடிக்கும் அதே  வேளையில் தன் காதலன் பிச்சைக்காரன்தான் என்று தெரிந்தபிறகு தவிக்கும் காட்சிகளில் அப்ளாஸ் வாங்குகிறார். காந்த விழிகள் அதுக்கும் மேல!

ஹீரோவின் நண்பராக வரும் பகவதி பெருமாளுக்கு வாய்ப்பு குறைவு என்றாலும் குறை ஏதும் இல்லை. விஜய் ஆண்டனியின் பெரியப்பாவாக வரும் முத்துராமனின் கேரக்டர் கஞ்சனாக இருந்தாலும் நடிப்பில் கஞ்சத்தனம் கிஞ்சித்தும் இல்லை. அம்மாவாக வரும் தீபா,  பிச்சைக்கார நண்பர்களாக வரும் மூர்த்தி, சபரீஷ் அனைவரும் மனதில் நிற்கிறார்கள்.

பிரசன்னகுமாரின் கேமரா பிச்சைக்காரர்களின் வாழ்க்கையை பிரகாசமாக காண்பித்திருக்கிறது. நடிப்பைப் போலவே இசையிலும் தன் வல்லமையை காண்பித்திருக்கிறார் விஜய் ஆண்டனி. ‘நெஞ்சோரம்’, ‘உனக்காக வருவேன்’ ஆகிய பாடல்கள் ஒன்ஸ்மோர் ரகம்.

எத்தனையோ இயக்குனர்கள் தங்கள் பெயருக்கு முன்னால்  கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் என பட்டியலிடுவார்கள். அந்த பட்டியலுக்கு உண்மையான சொந்தக்காரராக இயக்குனர் சசி தெரிகிறார். கதை, திரைக்கதை உருவாக்கத்திலும் சரி, ‘மாலை ஆறு மணிக்கு மேல் பிச்சைக்காரனுக்கும் ஒரு வாழ்க்கை இருக்கு’ என்பது போன்ற டயலாக்கிலும் சரி, கேரக்டர்களைப் படைத்திருக்கும் விதத்திலும் சரி, மிகச் சிறந்த படைப்பாளியாக ஜொலிக்கிறார் சசி.