வதந்திகள் சகஜம்தான்!



‘சென்னை 600 028’ படத்தில் மிர்ச்சி சிவாவை லவ்ஸ் விடும் ஸ்கூல் யூனி ஃபார்ம் பெண்ணை அதற்குள் மறந்திருக்க மாட்டீர்கள். தேசிய விருது பெற்ற இயக்குநர் அகத்தியனின் மகள் விஜயலட்சுமி. சரசரவென்று படம் பண்ணிக் கொண்டிருந்தவர் திடீரென பெரோஸ் என்கிற உதவி இயக்குநரை காதலித்து கல்யாணம் செய்து கொண்டார்.

இப்போது பெரோஸ் எழுதி இயக்கும் ‘பண்டிகை’ படத்தின் தயாரிப்பாளராகவும் ஆகியிருக்கிறார். கிருஷ்ணா ஹீரோ. ‘கயல்’ ஆனந்தி ஹீரோயின். தயாரிப்பு அனுபவங்கள் பற்றி ‘வண்ணத்திரை’யிடம் பேசினார் விஜயலட்சுமி.
“உங்க தயாரிப்பு நிறுவனத்தோட பேரே வித்தியாசமா இருக்கே?”

“ஆமாம். ‘டீ டைம் டாக்ஸ்’. சினிமான்னா நம்ம ஊர்லே மெயினா என்டர்டெயின்மென்ட். அதை ஸ்ட்ராங்கா மென்ஷன் பண்ணுறமாதிரி கம்பெனிக்கு பேரு வெச்சிருக்கோம்.”“புரொடக்‌ஷன்லே நிறைய பிராப்ளம்னு சொல்றாங்களே?”

“சண்டையிலே கிழியாத சட்டை எங்கே இருக்கு? (சிரிக்கிறார்). தயாரிப்புன்னாலே பிரச்சினை இருக்கத்தான் செய்யும். தில்லா கோதாவில் குதிச்சிட்டேன். இந்தப் படத்தைப் பத்தி இண்டஸ்ட்ரியிலே நிறைய வதந்திகள் பரப்புறாங்க. அதெல்லாம் சகஜம்தான். ஷூட்டிங் ஸ்பாட்டுன்னாலே டெய்லி ஏதாவது புதுசா பிராப்ளம் நிக்கும். ஆர்ட்டிஸ்டா இருக்குறப்போ அதெல்லாம் தெரியாது. அன்றாடம் இதையெல்லாம் சால்வ் பண்ணுறதுதான் ஒரு தயாரிப்பாளரோட திறமை.”

“அசிஸ்டென்ட் டைரக்டரா வேலை பார்க்கப் போறதா சொன்னாங்களே?”
“பெரோஸுக்கு நான் லைஃப்லேயே அசோசியேட். அதனாலே அவரோட அசிஸ்டென்டா சினிமாவில் வேலை பார்க்க மாட்டேன் (சிரிப்பு). இயக்குநர் திரு, என்னோட மாமா. அக்கா கணவர். அவர் இயக்குற படத்துலே வேலை பார்க்கலாம்னு சான்ஸ் கேட்டேன். இப்போ புரொடியூஸரா ரொம்ப பிஸியாகிட்டதாலே மாமாவே வேணாம்னு சொல்லிட்டாரு.”

“உங்க படத்துக்கு வரவேற்பு எப்படி இருக்கும்னு நெனைக்கறீங்க?”“திட்டமிட்டபடி ஷூட்டிங் போயிக்கிட்டிருக்கு. சமீபத்தில் வெளியான ‘பண்டிகை’ டீசருக்கு யூட்யூப்பிலும், தியேட்டர்களிலும் நல்ல வரவேற்பு. அதே வரவேற்பு படத்துக்கும் நிச்சயமா இருக்கும்.”“தொடர்ந்து தயாரிப்பீங்களா?”

“இந்த படம் முடிஞ்சபிறகு பெரோஸ், வெளிப்படங்கள் இயக்க இருக்கிறார். எனவே எனக்கு நோ சான்ஸ். இருந்தாலும் தொடர்ச்சியா வேற இயக்குநர்களை வெச்சிகூட படம் தயாரிக்கலாம்னுதான் ஐடியாவில் இருக்கேன்.”“நடிப்பு?”“பெரோஸே கூட கேட்டார். இப்போதைக்கு கேமிராவுக்கு முகம் காமிக்கிற ஐடியா எனக்கு இல்லை.”

- தேவராஜ்