சந்தோஷத்தின் மறுபெயர் சரளா!
ஹீரோயினிஸம்
மனோரமாவுக்கு அடுத்தபடியாக அதிக படங்களில் நடித்து சாதனை புரிந்திருப்பவர் கோவை சரளா. இன்றைய தேதியில் 700 படங்களைக் கடந்துவிட்டார். ஒரு ஹீரோயினுக்கான அழகும், திறமையும் இருந்தும் காமெடி நடிகையாகவே தன்னை நிலை நிறுத்திக் கொண்டவர்.
தமிழ் சினிமாவுக்கு எண்பதுகளில் கேரளாவிலிருந்தும், மும்பையில் இருந்தும் நடிகைகள் இறக்குமதி ஆகிக் கொண்டிருந்தார்கள். சினிமாவில் நடிப்பதை தமிழ்ப் பெண்கள் புறக்கணித்த காலம். அந்தக் காலகட்டத்தில் துணிச்சலாக நான் நடிகையாவேன் என்று வளர்ந்தவர் கோவை சரளா.
ஒரு நாள் வகுப்பு நடந்து கொண்டிருக்கிறது. ஆசிரியை ஒவ்வொரு மாணவனிடமும் நீ என்னவாக விரும்புகிறாய் என்று கேட்கிறார், என்ஜினியராக வேண்டும், டாக்டராக வேண்டும் என்கிறார்கள். சரளா எழுந்தார்.
“நான் நடிகையாக வேண்டும்” என்றார். அப்போது அவருக்கு வயது ஒன்பது. “ச்சீ, வெளியே போய் நில்லு” என்று அன்று முழுவதும் வகுப்பறைக்கு வெளியே நிறுத்தப்பட்ட சரளாதான் இன்றைக்கு 700 படங்களைத் தாண்டி நடித்துக் கொண்டிருக்கிறார். நடிகைகள் பற்றி தப்பான அபிப்ராயம் இருந்த காலகட்டத்தில் அந்தச் சிறுவயதிலேயே நடிகையாவேன் என்று பகிரங்கமாக அறிவித்த கோவை சரளா நிஜ ஹீரோயின்தானே.
ஒரு முறை எம்.ஜி.ஆர் படப்பிடிப்புக்காக கோவை வந்தார். அவரைப் பார்ப்பதற்காக வகுப்பறையை கட் அடித்துவிட்டு அவர் ஓட்டல் முன் தினசரி போய் நின்றார் சரளா. இதை கவனித்த எம்.ஜி.ஆர், “யாரம்மா நீ? உனக்கு என்ன வேண்டும்” என்று கேட்க, “உங்களுடன் நடிக்க வேண்டும்” என்றார்.
ஷாக்கான எம்.ஜி.ஆர். “முதலில் படி. அப்புறம் நடிக்கலாம்” என்று சொன்னதோடு சரளாவின் முழு படிப்பு செலவையும். ஏற்றார். எம்.ஜி.ஆருக்காக படித்த சரளா, படிக்கும்போதே நாடகங்களில் நடித்து தன்னை வளர்த்துக் கொண்டார்.
அழகும், திறமையும் இருப்பதால் ஹீரோயினாகத்தான் நடிக்க ேவண்டும் என்று நினைக்காமல் ‘முந்தானை முடிச்சு’ படத்தில் அருக்காணியாக அறிமுகமாகி முருங்கைக்காய் மகத்துவம் சொன்னார்.
நடிகைகளில் தனக்கென தனி பேச்சு பாணியை உருவாக்கிக் கொண்டு இன்று வரை அதைத் தக்க வைத்துக் ெகாண்டிருப்பவர். நிறைய மும்பை நடிகைகள் வந்திறங்கியதால் தன்னை தமிழ்ப் பெண் என்று அறிவிப்பதற்காகவே தன் பெயருக்கு முன்னால் ேகாவையைச் சேர்த்துக் கொண்டார்.
இதுவரை 50 படங்களிலாவது அவரை ஹீரோயினாக நடிக்க கேட்டிருப்பார்கள். ஆனால் அதனை கடுமையாக மறுத்தவர், தமிழில் வாய்ப்பு குறைந்தபோது ைதரியமாக தெலுங்கிற்கு போனார். தெலுங்கு கற்று கோவை ஸ்லாங்கிலேயே தெலுங்கை பேசி அசரவைத்து அங்கும் 100 படங்களைத் தாண்டி நடித்து விட்டார். கோவை சரளா திருமணம் செய்து கொள்ளவில்லை.
“எதுக்காக எல்லோரும் போல வாழணும்? தனிச்சு வாழ்ந்து பார்க்கணுங்றதுக்காகத்தான் கல்யாணம் பண்ணிக்கலை” என்பார். பொதுவாக நகைச்சுவை நடிகர், நடிகைகளின் சொந்த வாழ்க்கை சோகமாக இருக்கும் என்பார்கள். ஆனால் கோவை சரளா படத்தின் கேரக்டர்கள் போலவே சொந்த வாழ்க்கையிலும் மகிழ்ச்சியாக இருக்கிறவர். படங்களில் காமெடியாக நடித்தாலும் அவர் என்றுமே நிஜத்தில் ஹீேராயின்தான்.
- மீரான்
|