நல்ல மனுஷங்களை சம்பாதிச்சிருக்கேன்!
காமெடி நடிகர் மிப்பு சொல்கிறார்
‘சூது கவ்வும்’, ‘வீரம்’, ‘வேதாளம்’, ‘ஆடாம ஜெயிச்சோமடா’, ‘வெள்ளக்காரதுரை’, ‘மான்கராத்தே’, ‘36 வயதினிலே’, ‘எனக்குள் ஒருவன்‘, ‘நையப்புடை’ போன்ற படங்களில் கவனம் ஈர்த்த வளர்ந்துவரும் நடிகர் மிப்பு,
இப்போது சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘ரெமோ’, ‘அட்டி’, ‘யானை மேல் குதிரை’, ‘அர்த்தநாரி’, ‘உள்குத்து’ என எராளமான படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். அடுத்த யோகி பாபு இவர்தான் என்று கோலிவுட் இவரைக் கொண்டாடுகிறது.“சினிமாவுக்கு எப்படி வந்தீங்க?”
“சேலத்திலிருந்து 2000த்துல சென்னைக்கு வந்தேன். லாரி க்ளீனர், டீக்கடை என கிடைச்ச வேலைகளைச் செய்தேன். 2003ல்தான் நடிப்பதற்கான முயற்சி எடுக்கத் தொடங்கினேன். பாக்யராஜ் சாரிடம் ஆபீஸ் பாய் வேலைக்கு சேர்ந்ததால் சினிமா கதவுகள் எனக்கு உடனே திறந்தது.”“நீங்க காமெடியனா வில்லனா?”
“இப்போதைய நிலவரத்துக்கு காமெடியன். எதிர்காலத்தில் என்னவாக வேண்டுமானாலும் ஆகலாம்.”“யாரை ரொம்ப பிடிக்கும்?”“நாகேஷோட காமெடி. அவர் நடிச்ச படங்களை சின்ன வயசுலேருந்தே விரும்பிப் பார்ப்பேன். அவருக்கு அடுத்தபடியா கவுண்டமணி, செந்தில், வடிவேலு, விவேக், சந்தானம்னு அத்தனை ஜாம்பவான்களையும் பிடிக்கும். தமிழில் இருக்கிற அளவுக்கு உலகத்தில் வேறெங்கேயும் காமெடி நடிகர்கள் இவ்வளவு வெரைட்டியா இல்லை.”
“பிடிச்ச நடிகை?”“நயன்தாரா நடிப்பு ரீதியாக என்னை அதிகமாக பாதிச்சவங்க. நான் அவங்களோட ரசிகன்.”“எப்போ ஹீரோ ஆகப்போறீங்க?”“அதையெல்லாம் யோசிக்கற கண்டிஷனிலா இருக்கேன்? கிடைக்கிற சான்ஸை நல்லா பண்ணணும் என்பதுதான் என்னோட குறிக்கோள். இயக்குநர்கள் விரும்புற நடிகனா இருப்பேன். காமெடியனா, வில்லனா, ஹீரோவா என்பதெல்லாம் அடுத்த பட்சம்தான்.”“பிடிச்ச டைரக்டர்?”
“பாக்யராஜ் சார். நான் மறக்கவே கூடாதவர். முதன்முதலா ‘சொக்கத்தங்கம்’ படத்தில் என் முகத்தை காண்பிச்சாரு. அந்தப் படத்தை நான் திரையில் பார்த்தப்போ, நானே ஹீரோவா நடிச்சதைப் போல உணர்ந்தேன். அதே போல இயக்குனர் நலன் குமாரசாமி.
ஒரு காலத்திலே ‘வண்ணத்திரை’ வாசகனா இருந்த நான், அந்தப் பத்திரிகையிலேயே பேட்டி கொடுக்குற அளவுக்கு உயர்ந்திருக்கேன்னா அவர்தான் காரணம். ‘சூதுகவ்வும்’ படத்தில் எனக்கு நல்ல வேடம் கொடுத்ததோடு அவருக்குத் தெரிஞ்ச நண்பர்களிடமும் சிபாரிசு பண்ணியிருக்கார். என்னுடைய வளர்ச்சியில் நலன் சாருக்கு முக்கிய பங்கு உண்டு.”“வந்தவரைக்கும் லாபம்னு நடிக்கறீங்களா?
இல்லைன்னா கேரக்டர் பார்த்து ஒத்துக்கறீங்களா?”“இப்போதான் வளர்ந்துக்கிட்டு வர்றேன். செலக்ட் பண்ணுற பொசிஷனில் நான் இல்லை. அதனால் கிடைக்கிற ஒவ்வொரு வேடத்திலும் எனது ‘தி பெஸ்ட்’ நடிப்பை கொடுக்க முயற்சிக்கிறேன்.”“நடிப்பு, நடனம், சண்டைப் பயிற்சிகள் எடுக்கிறீர்களா?”
“இதுவரை எனக்கு நடனமாட வாய்ப்பு கிடைக்கலை. ‘நையப்புடை’ படத்தில் நடிச்சப்போ சண்டை இயக்குநர் ‘பில்லா’ ஜெகன் கொடுத்த பயிற்சி காரணமா ஈஸியா சண்டை போட முடிஞ்சது. நடிப்புக்காக ‘கூத்துப்பட்டறை’ ஜெயராவிடம் பயிற்சி எடுத்துக்கிட்டேன். என்னுடைய ஏழ்மையைப் பார்த்துட்டு பீஸ் வாங்காமல் நடிப்பு சொல்லிக் கொடுத்தார். அந்தவகையில் இந்த சினிமாவில் பணம் சம்பாதித்தேனோ இல்லையோ, இவங்களை மாதிரி நல்ல மனுஷங்களை சம்பாதிச்சிருக்கேன்.”
- சுரேஷ்ராஜா
|