மகனுக்காக மல்லுக்கட்டும் சிரஞ்சீவி
புரூஸ்லீ-2 விமர்சனம்
‘எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை’ என்று ஆனந்தமாய் வாழ்கிறது ராம்சரண் குடும்பம். நடுத்தர வாழ்க்கைதான். ஆனால், நிம்மதியான வாழ்க்கை. தன் மகனை கலெக்டராக்கிவிட வேண்டும் என்று ஆசைப்படுகிறார் ராம்சரணின் அப்பா. எனவே தன் சக்திக்கு மீறிய தரமான பள்ளியில் சேர்த்துவிட நினைக்கிறார். அதே நேரம் மகளை சாதாரண பள்ளியிலேயே படிக்க வைக்கிறார். அக்காவுக்கோ நிறைய படிக்க வேண்டும், கலெக்டர் ஆக வேண்டும் என்று ஆசை. இதைப் புரிந்துகொண்ட ராம்சரண், அக்காவுக்காக தன் படிப்பை தியாகம் செய்கிறார். சினிமாவில் ஹீரோக்களுக்கு டூப் போடும் ஸ்டண்ட்மேனாக வேலைக்குச் செல்கிறார். அக்கா கீர்த்தி கர்பந்தாவை ஒரு சுபமுகூர்த்தத்தில் பெரிய செல்வந்தர் வீட்டுக்கு மருமகளாக அனுப்புகிறார்கள். வழக்கம்போல அந்த பெரிய வீடு மூலம் அக்காவுக்கு பிரச்சினை. ஆபத்திலிருந்து அக்காவை எப்படி ராம்சரண் காப்பாற்றுகிறார் என்பதுதான் பரபர க்ளைமேக்ஸ்.

கேட்பதற்கு குடும்பக் கதையாக இருக்கிறதே என்று எண்ண வேண்டாம். தெலுங்குப் படங்களுக்கே உரித்தான சண்டை, டூயட், குத்துப்பாட்டு என்று அத்தனை மசாலா அம்சங்களும் வகையாக பரிமாறப் பட்டிருக்கின்றன. குறிப்பாக க்ளைமேக்ஸில் சிரஞ்சீவி கவுரவ வேடத்தில் தோன்றி வில்லன்களைப் பறக்கவிடும் காட்சியில் தியேட்டர்கள் அலறுகின்றன. “அன்றைக்கு ‘மாப்பிள்ளை’ ரஜினிக்கு சண்டை போட்டேன், இன்னைக்கு உனக்காக சண்டை போடுறேன்” என்று டைமிங்காக அவர் அடிக்கும் டயலாக்குக்கு அத்தனை ரெஸ்பான்ஸ். சிரஞ்சீவியின் மகன் அல்லவா? மிடுக்கான பார்வை, அதிரடி நடிப்பு, அமர்க்களமான டான்ஸ் என்று பிரமாதப்படுத்தியிருக்கிறார் ராம்சரண்.
நாயகி ரகுல் ப்ரீத் சிங்குக்கு வேலை குறைவுதான் என்றாலும் கிளாமரில் எந்த குறையும் வைக்கவில்லை. சம்பத், அருண் விஜய் வில்லன்களாக தங்கள் வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார்கள். நதியா, தொழிலதிபராக கம்பீரம் காட்டியிருக்கிறார். எஸ்.எஸ்.தமன் இசையில் பாடல்கள் பிரமாதம். மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவு கதைக்கு கனம் கூட்டுகிறது. தெலுங்கு டப்பிங் படமென்றாலும், அந்த குறை தெரியாத அளவுக்கு சிறப்பாக தமிழில் வசனம் எழுதியிருக்கிறார் ஏ.ஆர்.கே.ராஜராஜா. இயக்குனர் சீனு வைதாலா ஆந்திராவில் ஹிட்டுக்கு மேல் ஹிட்டாக கொடுக்கும் அதிரடி இயக்குநர். புரூஸ்லீ-2 அவருக்கு பம்பர்ஹிட் படமாக அமைந்திருக்கிறது.
|