வா மச்சான் வா!
விடாமுயற்சிக்கு உதாரணமாக இருக்கும் ஒரு இயக்குநர், வண்ணாரப்பேட்டை பகுதியில் படப்பிடிப்பு நடத்திவருவதாக தகவல் கிடைத்தது. விசாரணையைப்போட்டு, களத்தில் இறங்கினோம். வண்ணாரப்பேட்டையில் உள்ள வள்ளல் எட்டியப்ப நாயக்கர் பள்ளியில் படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்தது. படத்தின் பெயர் ‘பழைய வண்ணாரப்பேட்டை’. நாயகி அஸ்மிதாவிடம் நாயகன் பிரஜன், காதலைச் சொல்லவேண்டும் என்பதே காட்சி. இருவரும் நட்பாக பழகி வந்தவர்கள் என்பதால், காதலை ரொம்ப பக்குவமாகச் சொல்லவேண்டும். நேரடியாக சொல்லி விடக்கூடாது. அதற்காக பிரஜன் பேசும் வசனம் என்ன என்பதை சஸ்பென்சாக வைத்திருக்கிறார் இயக்குநர். ஆகவே, அங்கே என்ன வசனம் பேசப்பட்டது என்பதை நமது வாசகர்களுக்கு சொல்லமுடியாத சூழல்.

காட்சியை முடித்துவிட்டு வந்த இயக்குநர் மோகன்.ஜியிடம் பேசினோம். ‘இது அரசியல் மற்றும் திரில்லர் கலந்த கதை. மெக்கானிக்கல் எஞ்சினியரிங் மாணவர் பிரஜன், போலீஸ் உதவி கமிஷனர் ரிச்சர்டு, வேலையில்லாத காரணத்தால் சின்னச்சின்ன திருட்டுகளில் ஈடுபடும் நிஷாந்த் ஆகிய மூன்று பேருக்கும் இடையில், பிரச்னையாக வரும் ஒரு கொலைதான் படத்தின் முக்கிய அம்சம்’ என்றவரிடம், ‘நீங்க யாருகிட்ட தொழில் கத்துக்கிட்டீங்க?’ என்ற கேள்வியைப் போட்டோம். ‘நான் சென்னையிலேயே பிறந்து வளர்ந்தவன். எடிட்டிங் கற்றுக்கொண்டு, கொஞ்ச நாட்கள் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியுடன் பணியாற்றினேன். அதன்பிறகு ஒரு கதையைத் தயார் செய்தேன். முழுக்க முழுக்க வடசென்னைக் கலாச்சாரத்தை மையமாகக்கொண்ட அந்தக்கதையை 20 நிமிடப் படமாக குறுந்தகட்டில் எடுத்துவைத்துக்கொண்டு, தயாரிப்பாளர்களைத் தேடி அலைந்தேன்.
ஒருவர் அல்ல, இரண்டுபேர் அல்ல, 101 பேரைப் பார்த்து கதை சொல்லி, ஓகே ஆகாமல், 102 ஆவது ஆளாக எனக்குக் கிடைத்த தயாரிப்பாளர்தான் ஸ்ரீ கிருஷ்ணா டாக்கீஸ் வி.எம்.பிரகாஷ்’ என்று சாதித்த கதையை பெருமையுடன் சொல்கிறார் இயக்குநர் மோகன்.ஜி. இந்தப்படத்தின் இசை வெளியீட்டுவிழா சமீபத்தில் நடந்தது. தாஸ் டேனியலின் உதவியாளர் ஜூபின் இசையமைத்திருக்கிறார். எல்லாப்பாடல்களையும் இயக்குநரே எழுதியிருக்கிறார். கானா பாலா பாடிய ‘வா மச்சான் வா மச்சான்...’, வேல்முருகன் பாடிய ‘உன்னைத்தான் நினைக்கையிலே...’ பாடல்கள் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கின்றன. ஏகாம்பரத்தின் உதவியாளர் ஃபாரூக் ஒளிப்பதிவில், வடசென்னைக்கு என்ன அழகு உண்டோ, அதை கச்சிதமாகப் படம்பிடித்திருக்கிறார்களாம்.
- நெல்பா
|