கன்னத்தில் குழி விழுந்தால்?



தமிழ்த் திரையுலகில் பிரபுவின் கன்னக்குழி ரொம்ப ஃபேமஸ். அந்தக் காலத்தில் ஹீரோயின்கள் செல்லமாக இவரது கன்னக்குழியைக் கிள்ளுவார்கள் என்று சொல்வார்கள். அவரைப் போலவே ஸ்ரீபிரியாவும் கன்னக்குழியும் பிரபலம். இப்போதைய நடிகைகளில் கன்னக்குழி அழகி என்றால், அது சிருஷ்டி டாங்கேதான். அதுவும் ஒன்று வாங்கினால் இன்னொன்று இலவசம் என்பது மாதிரி இரு கன்னத்திலும் அழகாக குழி விழுகிறது. கன்னக்குழி பற்றி கன்னல் சொல்லழகியிடம் பேசினோம்.

“பொதுவாக கன்னத்தில் குழி விழுந்தால் அதிர்ஷ்டம் என்று தமிழ்நாட்டில் சொல்கிறார்கள். எனக்கு டபுள் அதிர்ஷ்டம் என்று எடுத்துக் கொள்ள வேண்டியதுதான். ஷூட்டிங்குக்காக எங்கே போனாலும் இந்த கன்னக்குழியைப் பார்க்கும் தமிழக தாய்மார்கள் உடனே திருஷ்டி சுத்திப் போடுகிறார்கள். என்னோடு நடிக்கும் ஹீரோக்கள் மட்டுமின்றி, ஹீரோயின்களும் கூட இந்த கன்னக்குழியைப் பாராட்டிப் பேசுகிறார்கள். இரண்டு கன்னங்களையும் செல்லமாகக் கிள்ளுகிறார்கள்” என்று இரு கன்னத்திலும் குழிவிழ அழகாகச் சிரித்தார்.



‘கத்துக்குட்டி’ படத்தில் இவரது நடிப்பு ரசிகர்களிடம் சிறப்பாகப் பேசப்படுகிறது. அதுபற்றியும் கேட்டோம். “அதை ஏன் கேட்கறீங்க? ஒரு சீன் எடுக்க இருபத்தைந்து டேக்குக்கு மேல் போனேன். மிஸ்டர் கூல் ஆன டைரக்டர் சரவணனே டென்ஷன் ஆகிட்டார். தஞ்சாவூர் பாஷை பேசும் கிராமத்துப் பெண்ணாக நடிப்பது பெரும் சவாலாக இருந்தது. ஒவ்வொரு நாள் ஷூட்டிங்குக்கு போகும்போதும் நடுங்கிக்கிட்டே போவேன்.

அதிலும் க்ளைமேக்ஸ்தான் எனக்கு அக்னிப் பரீட்சை. சுனாமிக்குப் பிறகான அமைதி மாதிரி இருக்க வேண்டும்னு டைரக்டர் இலக்கியத்தரமா சொன்னாரு. அந்த அமைதி எப்படி இருக்கும்னே தெரியாம சொதப்பிட்டேன். ஒரு வழியா இந்த படம் முடிஞ்சாபோதும்னு ஆயிடிச்சி. ஆனா, இப்போ கிடைக்குற பாராட்டுகளைப் பார்க்குறப்போ அவ்வளவு கஷ்டமும் பறந்துடிச்சி” என்று சந்தோஷமாகச் சொன்னார். நாம் கிளம்பும்போது, “நான் மட்டும் சினிமாவுக்கு வரலேன்னா உங்களை மாதிரி ரிப்போர்ட்டர் ஆகியிருப்பேன்” என்று கூடுதலாக தகவல் சொன்னார்.

ச்சே... மீடியாவுக்கு ஓர் அழகான - அதுவும் இரு கன்னத்திலும் குழி விழும் - சூப்பர் ரிப்போர்ட்டர் மிஸ்ஸிங்!

- தேவராஜ்