ரஜினிகாந்த் விரும்பிய டிராக் பாடகர்



நெல்லைபாரதி

சேலம் மாவட்டம் வேம்படித்தாளம் கிராமத்தில் ராமசாமி - விருதம்மாள் தம்பதியின் மகனாகப் பிறந்தார் கிருஷ்ணராஜ். அப்பா, அம்மா இருவருக்குமே இசைஞானம் இருந்தது. ஓர் அண்ணன் ஆர்மோனியம் வாசித்தார். இன்னொரு அண்ணன் பாட்டு, நாடகம் என்று ஈடுபட்டார். எனவே கிருஷ்ணராஜுக்கும் பாட்டு மற்றும் நாடக மேடையில் ஆர்வம் வந்தது. பதினொன்றாம் வகுப்போடு படிப்பை முடித்துவிட்டு சேலம் செளந்தர் நாடகக்குழுவில் ஐந்நூறுக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி பயிற்சி பெற்றார். ஏற்காட்டில் நடந்த மலர் கண்காட்சியில் இசையமைப்பாளர் வி.குமார் நடுவராக இருந்து தேர்வு செய்த மேடை மெல்லிசைப் போட்டியில் முதல் பரிசு வாங்கினார்.

அதன் பிறகுதான் இவருக்கு சினிமா ஆசை வந்தது. சென்னைக்கு வந்து அடையாறு இசைக் கல்லூரியில் 1980 முதல் 1983 வரையில் இசை படிப்பு படித்து முடித்தார். அப்போது முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர் கையால் சங்கீத வித்வான் பட்டம் வாங்கினார். கல்லூரியில் சிறந்த மாணவர் பதக்கமும் இவருக்கே கிடைத்தது. இசைக் கல்லூரிக்கு குரல் தேர்வு செய்து வந்த ஆர்.ராமானுஜம் இவரையேதான் தேர்ந்தெடுத்தார். இவர் இசையமைத்த சில படங்களில் கிருஷ்ணராஜ் பாடினார்.

மயிலாப்பூர் ரெமி ஸ்டுடியோவில் கிறிஸ்துவம், இந்து மற்றும் அனைத்து மத பக்திப் பாடல்களைப் பாடி வந்தார். ஒரு முறை அந்த ஸ்டுடியோவுக்கு வந்த இசைைமப்பாளர் தேவா இவரை தன்னுடன் அழைத்துக் கொண்டார். தேவாவின் இசைக் குழுவில் ஒருவராகவே இருந்து வந்தார் கிருஷ்ணராஜ். இயக்குனர் அகத்தியன், ‘அதிகாலை சுபவேளை’ படத்தை இயக்கிய போது தேவா இசையில் ‘ஒன்ன நான் தொட்டதுக்கு ஙொம்மா சாட்சி சொன்னதுக்கு...’ என்ற பாடலைப் பாடினார். பின்னணிப் பாடகி ஜானகி தயாரித்து அவரது மகன் முரளி நடித்த அந்தப் படம் வெளிவரவேயில்லை.



அதன் பிறகு அதே அகத்தியன் இயக்கிய ‘காதல் கோட்டை’ படத்தில் தேவா இசையில் ‘வெள்ளரிக்கா பிஞ்சு வெள்ளரிக்கா...’ பாடலைப் பாடினார். பாடகராக அறிமுகமாகி பத்து வருடம் கழித்து இவருக்கு கிடைத்த முதல் ஹிட் பாடல் இதுதான். சேரனின் ‘பொற்காலம்’ படத்தில் ‘தஞ்சாவூரு மண்ணெடுத்து...’ பாடலுக்கு டிராக் பாடினார். வேறொரு பாடகரை வைத்து அந்தப் பாடலை ஒலிப்பதிவு செய்ய முடிவு செய்து வைத்திருந்தார்கள். இடைப்பட்ட காலத்தில் தயாரிப்பாளரின் அலுவலகத்தில் அந்தப் பாடல் பலமுறை ஒலித்தது. அதைக் கேட்ட பலரும் குரல் நன்றாக இருக்கிறது என்று கருத்து சொன்னதால் இவரையே பாட வைத்தார்கள். தேவா இசையில் வெளிவந்த அந்தப் பாடல் தான் இவருக்கு தமிழக அரசின் சிறந்த பின்னணிப் பாடகர் விருதைப் பெற்றுத் தந்தது.

‘நினைவிருக்கும் வரை’ படத்தில் ‘திருப்பதி ஏழு மலை வெங்கடேசா...’, ‘பார்வை ஒன்று போதுமே’ படத்தில் ‘பாத்துட்டு போனாலும்....’, பார்த்திபன் நடித்த ‘உன்னருகே நானிருந்தால்’ படத்தில் ‘எந்தன் உயிரே எந்தன் உயிரே...’, சரத்குமாரின் மூவேந்தர் படத்தில் ‘சோக்கு சுந்தரி....’, ‘நட்புக்காக’ படத்தில் ‘கருடா கருடா என் காதலை....’, வடிவேலு நடித்த ‘இம்சை அரசன் 23-ஆம் புலிகேசி’ படத்தில் ‘பஞ்சு மெத்தைக் கனியே....’, ‘கழுகு’ படத்தில் ‘ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் அவசரம்....’, யுவன்ஷங்கர் ராஜா இசையில் ‘பருத்தி வீரன்’ படத்தில் ‘சண்டாளி உன் பாசத்தால.....’, இமான் இசையில் ‘தெனாலி ராமன்’ படத்தில் ‘ஏ வாயாடி....’, ‘மஞ்சப் பை’ படத்தில் ‘அன்புதான் இருக்கையிலே....’, வித்யாசாகர் இசையில் ‘புரட்சிக்காரன்’ படத்தில் ‘மண்ணுக்கு நாமதான் சொந்தக்காரங்க....’, தஷி இசையில் ‘அலையாத்திக் காடு’ படத்தில் ‘கடலே கடலின் அலையே....’, ‘தாஜ்மஹால்’ படத்தில் ரஹ்மான் இசையில் ‘ஈச்சி எலுமிச்சி.....’, அனிருத் இசையில் ‘நானும் ரவுடிதான்’ படத்தில் ‘ஒரு கணம் ஒரு போதும்....’ என இவரது பாட்டுச்சாலைப் பயணம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

ரஜினி நடித்த ‘அருணாச்சலம்’ படத்துக்கு ‘நகுமோ....’ பாடலுக்கான டிராக்கை இவர்தான் பாடினார். இசைத்தட்டுக்காக ஹரிஹரனைப் பாடவைத்து ஒலிப்பதிவு செய்தார்கள். படம் தயாராகின்ற நிலையில் ஏற்கனவே ட்ராக் பாடிய கிருஷ்ணராஜின் குரலைப் பயன்படுத்துங்கள் என்று சொல்லி விட்டார் ரஜினி. அப்போது இவருக்குக் கிடைத்தது தான் சூப்பர்ஸ்டாருக்கு வாய்ஸ் கொடுக்கக் கூடிய வாய்ப்பு.  இப்போதும் திரையிசைப் பாடல்கள், பக்திப் பாடல்கள் என்று ஓய்வில்லாத ஒலிப்பதிவிலிருக்கிறார். தேவா இசையில் இவர் பாடிய ‘சிறகுகள் நிழலில்’ என்கிற பாடல் கிறிஸ்தவர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றது.

அடுத்த இதழில்… கவி. கா.மு. ஷெரிப்