கருப்பு கரை சேர்த்தது!ஸ்ரீதேவி பரவசம்!!

அந்தக்கால ஸ்ரீதேவி நல்ல சிகப்பு. புதிய ஸ்ரீதேவி கொஞ்சம் கருப்பு. தமிழ் சினிமாவுக்கு கருப்பழகிகள் புதிதல்ல. ஆனால், கொஞ்சம் அபூர்வம். இவருடைய கவர்ச்சியான கருப்புதான், ‘ஜிகினா’ படத்தில் நாயகி ஆக்கியிருக்கிறது. சினிமா ஹீரோயின் மாதிரியாக இல்லாமல், அலுவலக வேலைக்குச் செல்லும் நடுத்தர வர்க்கத்துப் பெண்ணை தோற்றத்தில் நினைவூட்டுகிறார். பந்தா இல்லாமல் பேசுகிறார். “பிறந்தது, வளர்ந்தது எல்லாம் சென்னைதான். மாதச் சம்பளத்தை நம்பி வாழும் நடுத்தரக் குடும்பம். ஒரே தம்பி. கொஞ்சம் கஷ்டப்பட்டு தான் கல்லூரிக்கே போனேன். பி.காம் முடிச்சதும் திடீர்னு ஒருநாள் ‘சினிமாவில் நடிக்கப் போறேன்’னு சொன்னேன். என் மேலே பெற்றோருக்கு இருந்த நம்பிக்கை காரணமா, பெருசா மறுப்பு எதுவும் சொல்லலை.

நான் நினைச்சமாதிரி சினிமா இல்லை. சான்ஸ் கிடைக்க ரொம்ப கஷ்டமா இருந்தது. டப்பிங் பேச ஆரம்பிச்சேன்.  ‘இவனுக்கு தண்ணிலே கண்டம்’ படத்தில் சென்ராயனுக்கு ஜோடியா நடிச்சேன். அது தான் என்னோட முதல் படம். ஆனா எடிட்டிங்கிலே என் சம்பந்தப்பட்ட அத்தனை காட்சியையும் வெட்டிட்டாங்க. “படத்துலே நீ அழகா தெரியலை. உன்னை அப்படி காட்ட எனக்கு மனசு இடம் கொடுக்கலை”ன்னு டைரக்டர் சொன்னாரு.ஹீரோ விஜய்வசந்த், இதுவரைக்கும் சிகப்பான ஹீரோயின்களோடு தான் நடிச்சிருக்கார். என்னோட நடிக்கும்போது எந்த பாகுபாடும் காட்டலை. பெண்கள் மீது மதிப்பும், மரியாதையும் கொண்ட ஜென்டில்மேன். படத்துலே இன்னொரு ஹீரோயினா நடிச்ச சானியாதாராவும் ரொம்ப நல்லா பழகினாங்க. இந்தப் படத்தில் எனக்கு கிடைத்திருக்கும் எல்லா புகழும் இயக்குனர் ரவி நந்தாபெரியசாமியையே சேரும்.

என்னோட கேரக்டர் ரொம்ப பிடிச்சிப் போய் தான் இந்தப் படத்தையே வாங்கி வெளியிட்டாராம் இயக்குனர் லிங்குசாமி. மிகப்பெரிய இயக்குனரான அவரே அப்படி நினைக்கிற அளவுக்கு நல்லா நடிச்சிருக்கேன்னு நெனைக்கறப்போ சந்தோஷமா இருக்கு. புத்தி தெரிஞ்ச நாளிலிருந்து என்னோட நிறம் பற்றி எனக்கு தாழ்வு மனப்பான்மை இருந்தது. நேரிடையாவும், மறைமுகமாகவும் நிறைய கேலி கிண்டல்களை சந்திச்சிருக்கேன். “கருப்பா இருக்கே, பல்லுலே க்ளிப் போட்டிருக்கே!  உனக்கெல்லாம் எதுக்கு சினிமா ஆசை?”ன்னுலாம் கேட்டாங்க. அவங்க எல்லாருக்கும் ‘ஜிகினா’ பதில் சொல்லியிருக்கு”.

-எஸ்