தமிழில் பிறந்தது பிறந்தநாள் பாட்டு!நெல்லைபாரதி

கடலூர் மாவட்டம் சு. கீணனூர் கிராமத்தில் பிறந்தவர் பாவலர் அறிவுமதி.. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் பயின்று தகுதியை மேம்படுத்தினார். தமிழ் சினிமாவின் தரமான இயக்குநர்கள் பட்டியலில் இடம் பிடிக்க வேண்டுமென்பதே குறிக்கோளாக இருந்தது. பாலுமகேந்திராவிடம் ஏழு ஆண்டுகள், பாரதிராஜாவிடம் ஐந்தாண்டுகள், பாக்யராஜிடம் இரண்டு ஆண்டுகள் உதவி இயக்குநராக பணியாற்றிய இவர்தான், தனது இயக்கத்தில் ‘உள்ளேன் அய்யா’ படத்துக்காக பாடவைத்து, சின்னப்பொண்ணு என்கிற நாட்டுப்புறக் கலைஞரை உலகறியவைத்தார். அந்தப்படத்தின் இசையமைப்பாளரிடம் 500 மெட்டுகளுக்குப் பாட்டெழுத பயிற்சி எடுத்திருக்கிறார் நா.முத்துக்குமார்.

தசரதன் இயக்கத்தில் ‘கடவுளை நம்புங்கள்’ படத்தில் ஒரு நம்பிக்கைப் பாடல். சந்திரபோஸ் இசையில் மலேசியா வாசுதேவன் பாடியிருந்தார். அந்தப் பாடலுக்கான வடிவமைப்புப் பணி கவிதா விடுதியில் நடந்தது. சிறிது நேரத்தில் கண்ணதாசன் அங்கு வந்திருக்கிறார். அவர், அந்த விடுதியில்தான் பாட்டெழுதுவதை வழக்கமாக வைத்திருந்தார்.

அவருக்கு இடம் கொடுத்துவிட்டு, இவர்கள் புறப்படும் போது, கண்ணதாசனிடம் அறிவுமதியை அறிமுகப்படுத்தியிருக்கிறார் தசரதன். ‘தம்பியை எனக்கு நல்லாத் தெரியுமே, இவரது நூலுக்கு நான் அணிந்துரை எழுதியிருக்கிறேன்’ என்று நினைவுகூர்ந்த கண்ணதாசன், ‘இப்போது என்ன பல்லவி எழுதினீர்கள்?’ என்று கேட்டிருக்கிறார். ‘மனமே இன்னும் கொஞ்சம் பொறு/ வருங்காலம் உன்னைத் தேடி வரும்...’ என்று சொல்ல, ‘எனது முதல் பல்லவி கூட ‘கலங்காதிரு மனமே’ என்கிற நம்பிக்கை வார்த்தைகள்தான் என்று அறிவுமதியின் தோள் தட்டிப் பாராட்டியிருக்கிறார் கவியரசு கண்ணதாசன்.‘அன்னை வயல்’ படத்தில் பொன்வண்ணன் இயக்கத்தில், சிற்பி இசையில் ‘பூேவ வண்ணப் பூவே...’, ‘வா வா வெண்ணிலாவே...’ என இரண்டு பாடல்களை எழுதினார் அறிவுமதி.  பாபு, ரகு என்கிற நண்பர்கள் கேட்டதற்கிணங்க பாலுமகேந்திரா இயக்கத்தில் வந்த ‘கண்ணே கலைமானே’ மொழிமாற்றுப் படத்தில், இளையராஜா இசையில் இரண்டு பாடல்களை எழுதும் வாய்ப்பு வாய்த்தது. ‘நீர் வீழ்ச்சி தீ மூட்டுதே/ தீ கூட குளிர்காயுதே...’ ‘உன் கண்ணில் நீரானேன்/ என் நெஞ்சில் தீயானேன்...’ என்ற அந்தப் பாடல்களுக்கு மின்விசிறியை சன்மானமாகப் பெற்று, குடியிருந்த அறையின் புழுக்கத்தை அகற்றியிருக்கிறார் அறிவுமதி.
   
பூவை செங்குட்டுவனும் புலமைப்பித்தனுமே தன்னைக் கவிக்களத்தில் எழுத்தாட துணைநின்றவர்கள் என்று குறிப்பிடும் அறிவுமதி, கவியரங்க மேடைகளில் ஏற்றி, திறன்வளரச்செய்த கவிக்கோ அப்துல் ரஹ்மானை ‘ஆண் தாய்’ என்று பாசத்தோடு பதிவு செய்கிறார். தனது எழுத்துகள் உலகத்தமிழர்களுக்கு நெருக்கமாகத் தெரிவதற்கு ‘சிறைச்சாலை’ படமும், அதைத்தயாரித்து, உரையாடல் மற்றும் பாடல்களை இளையராஜா இசையில் எழுதவைத்த ‘கலைப்புலி’ தாணுவுமே காரணம் என நன்றிதடவி மெய் சிலிர்க்கிறார் அறிவுமதி. ‘பூவே செம்பூவே…’ மெல்லிசை மேட்டிலேறி நின்றது.
 
‘பிரியாத வரம் வேண்டும்’ படத்துக்கு, எழுதிய ‘பிரிவொன்றை சந்தித்தேன் முதல்முறை நேற்று/ நுரையீரல் தீண்டாமல் திரும்புது காற்று…’ என்ற வரிகளைப்பார்த்தவுடன், தனது விரலிலிருந்த அரை பவுன் மோதிரத்தைக் கழற்றி அணிவித்தார் எஸ்.ஏ.ராஜ்குமார். ‘நான் மோதிரம் அணிவதில்லை’ என்று இவர் அன்பாக மறுத்தபோது, ‘இது உங்களுக்கில்லை, உங்கள் தமிழுக்கு’ என்று சொல்லி ருமைப்படுத்தியிருக்கிறார்.

இயக்குநர் அழகம்பெருமாள் அன்புடன் கொண்டுவந்த ஏ.ஆர். ரஹ்மானின் மெட்டு, துள்ளல் பாடலுக்கானது. ‘அவரது இசையில் ‘மார்கழித் திங்கள் அல்லவா…’ போன்றதொரு மெல்லிய பாடல் எழுதவே விரும்புகிறேன்’ என்று மெட்டைத் திருப்பிக்கொடுத்திருக்கிறார் அறிவுமதி. ‘அப்படியானால் அவரை ஒரு பாடல் எழுதித் தரச் சொல்லுங்கள், பயன்படுத்திக்கொள்கிறேன்’ என்று ரஹ்மான் கேட்டுக்கொண்டதன்படி உருவானதுதான் ‘உதயா உதயா…’ பாடல். ‘பாய்ஸ்’ படத்தில் ‘அரசியல் திருடர்கள் புகலிடமா?’ பாடலை ரஹ்மான் இசையில் எழுதியிருக்கிறார் அறிவுமதி.
 
பாலுமகேந்திராவின் ‘ராமன் அப்துல்லா’ படத்தில் எழுதிய ‘முத்தமிழே… முத்தமிழே…’ பாடல் மெல்லிசைப்பாடல்கள் அகராதியில் மேன்மையான இடத்தைப்பிடித்தது.  சசி இயக்கத்தில் பாபி இசையில் ‘சொல்லாமலே’ படத்தில் எழுதிய ‘சொல்லாதே சொல்லச் சொல்லாதே…’ பாடல் இவருக்கு தமிழக அரசின் சிறந்த பாடலாசிரியர் விருதைப் பெற்றுத்தந்தது. பாரதிராஜாவின் ‘அன்னக்
கொடியும் கொடிவீரனும்’ படத்தில் எழுதிய ‘பொத்திவச்ச ஆசதான்/ ஒத்துக்கிச்சு பேசதான்…’ பாடல், சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.
 
‘சேது’வில் ‘மாலை என் வேதனை கூட்டுதடி…’, ‘எங்கே செல்லும் இந்தப் பாதை…’, ‘ஜெயம்’ படத்தில் ‘கவிதையே தெரியுமா…’, ‘ரன்’னில் ‘பொய்சொல்லக் கூடாது காதலி…’, ‘தூள்’ படத்தில் ‘சிங்கம்போல நடந்து வாறான்…’, ‘குண்டு குண்டு குண்டுப்பெண்ணே…’, ஜிப்ரான் இசையில் ‘வாகை சூட வா’ படத்தில் ‘சூளையில கல்லு வேகையில…’, ‘வத்திக்குச்சி’யில் ‘கண்ணக் கண்ண உருட்டி உருட்டி…’, ‘நய்யாண்டி’யில் ‘ஏலேலே எட்டிப் பார்த்தாலே…’, ‘அள்ளித்தந்த வானம்’ படத்தில் ‘தோம் தோம் தோம் தித்தித்தோம்…’, ‘கண்ணாலே மிய்யா மிய்யா…’, ‘வாடி வாடி நாட்டுக்கட்ட…’,‘மந்திரப்புன்னகை’யில் ‘இந்தக் காதலை நானடைய எத்தனை காமம் கடந்துவந்தேன்…’ உள்ளிட்ட நான்கு பாடல்கள் என அறிவுமதியின் பாட்டுச்சாலைப் பயணம் தொடர்கிறது.
 
ஈழத்தமிழரின் அழுகுரலுக்கிடையே குத்துப்பாடல்களில் குலவிக்கிடப்பதா என்று கோபம்கொண்டு ஆறு ஆண்டுகளாக திரைப்பாடல்களின் பக்கம் திரும்பிப் பார்க்காமல் இருந்தவரை, கரு.பழனியப்பன் தனது ‘மந்திரப்புன்னகை’யால் மீட்டு வந்தார்.  தாஜ்நூர் இசையில் இவர் எழுதிய ‘தாய்ப்பால்’ இசைத்தொகுப்பு ஈழத்தமிழர்களின் கண்ணீர் துடைத்த கைக்குட்டையாக அமைந்தது. ‘நீண்ட நீண்ட காலம் நீ நீடு வாழவேண்டும்…’ என்று தமிழில் பிறந்தநாள் சொல்லும் பாடலை ‘பிசாசு’ ஆரோல் கரோலி இசையில் எழுதியிருக்கிறார் அறிவுமதி. அமெரிக்க நண்பர் பார்த்தசாரதி சம்பந்தன் உதவியுடன் வெளியாகவுள்ள அந்தப்பாடல், உலகத்தமிழரின் உள்ளத்தில் இடம்பிடிக்கும்.

அடுத்த இதழில்…
பாடகர் கானா பாலா