தமிழ் மசாலாவில் மலர்ந்த குறிஞ்சிப்பூ!



தனி ஒருவன் விமர்சனம்

“மன்னா?”
“என்னா?”
“ ‘தனி ஒருவன்’ பார்த்தீர்களா? மக்களெல்லாம் கொண்டாடுகிறார்கள்!”
“நீர் ஒரு மங்குனி அமைச்சர் என்பதை மணிக்கொரு முறை தெளிவுபடுத்தி விடுகிறீர்கள்.
மக்கள் கொண்டாடும் படத்தை பார்க்காமல் இருப்பேனா இந்த மகத்தான மாமன்னன்?”
“ரீமேக் ராஜா என்று பெயர் பெற்ற ஜெயம் ராஜா... மன்னிக்கவும் மன்னரே. மோகன்ராஜா புத்தம்புது கதையில் அசத்தியிருக்கிறார் மன்னா”
“திரைக்கதையில் அவரோடு வேலை பார்த்திருப்பது இரட்டை எழுத்தாளர்களான சுபா (சுரேஷ் - பாலகிருஷ்ணன்) ஆயிற்றே! அசத்தாமல் இருந்தால் தான் அதிசயம்!”
“போலீஸ் கதை தான். ஆனால், ஹீரோவாக பர்ஃபெக்டாக ஃபிட் ஆகியிருக்கிறார் ஜெயம் ரவி!”
“அவருக்கு பெரிய மைனஸ் பாயின்டாக இருந்தது அவரது குரல் தான். ஆனால், ரோமியோ ஜூலியட்டில் தொடங்கி அவரது குரலில் ஒரு மாற்றத்தை கவனித்தீரா அமைச்சரே?”
“ஆம் மன்னா. தங்களது கம்பீரக் குரலுக்கு ஒப்பாக ஆண்மை மிளிரும் அழகான குரல்!”
“திரைவிமர்சனம் செய்யும் போதும் எனக்கு ஜால்ரா தட்டத் தவறாத உங்கள் அல்லக்கை விசுவாசத்தை மெச்சினேன் அமைச்சரே!”
“உன் எதிரி யாரென்று சொல், உன்னைப் பற்றிச் சொல்கிறேன் என்பது படத்தில் ஹீரோவின் தாரக மந்திரம் மன்னவா. ஆனால்- தங்களை எதிரியாகப் பெற்ற மன்னர்கள் தான் பாவம். டொக்குகள்!”



“வஞ்சப்புகழ்ச்சி மாதிரி தெரிகிறதே அமைச்சரே? ஏதேனும் உள்குத்து?”
“அதை விடுங்கள் மன்னா. நயன்தாராவைக் கண்டீர்களா? லேசான மேக்கப்பில் அவ்வளவு அழகு. சுபாவின் கதைகளில் வரும் நாயகி வைஜெயந்தியை அப்படியே திரைக்குக் கொண்டு வந்திருக்கிறார்கள்”
“நாயகி பாத்திரம் மட்டுமல்ல. படத்தில் ஒரே ஒரு சிறு பாத்திரம் கூட வீணடிக்கப்படாத அளவுக்கு பலமான திரைக்கதை. வலிவூட்டும் வசனங்கள். தேவையில்லாத பாடல்கள் இல்லை. அபாரம்... அபாரம்!”
“ஒவ்வொரு சிறு குற்றத்துக்கும் பின்னால் மிகப்பெரிய குற்ற வலைப்பின்னல் இருக்கலாம் என்கிற ஐடியாவே தமிழுக்கு புதுசு இல்லையா?”
“நிச்சயமாக. நாயகன் என்பவன் கதைக்குத்தான் விசுவாசமான பாத்திரமாக இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் படம் எடுத்து வெற்றி கண்டிருக்கிறார்கள். இந்த போக்கு தொடர்ந்தால் நட்சத்திர ஆதிக்கம் தமிழ் சினிமாவில் குறைந்து, மீண்டும் நல்ல கதைகளும் புதிய சிந்தனைகளும் கோலோச்சும்”
“ஒளிப்பதிவு, எடிட்டிங் எல்லாம் கச்சிதமாக அமைந்துவிட்டது மன்னா!”
“அரவிந்தசாமி?”
“படத்தில் ரவி ஹீரோவா, அரவிந்தசாமி ஹீரோவா என்று நாடு முழுக்க பட்டிமன்றம் நடத்துமளவுக்கு மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அந்தக் காலத்தில் ‘முரட்டுக்காளை’ படத்தில் ஜெயசங்கருக்கு அமைந்தது போல அட்டகாசமான செகண்ட் இன்னிங்ஸ்!”
“சரி. படத்தைப் பற்றி மக்கள் என்ன பேசிக் கொள்கிறார்கள்?!”
“ப்ளாக் பஸ்டர் ஹிட் என்று கொண்டாடுகிறார்கள் மன்னா!”
“மகிழ்ச்சி! மகிழ்ச்சி! திரையரங்குகள் ஆரவாரமாக இருந்தால்தான் சினிமா ஆரோக்கியமானதாக இருக்கிறது என்று பொருள். நல்ல படத்தை எடுத்து மக்களைச் சிந்திக்கவும், மகிழ்ச்சிக்கு உள்ளாக்கவும் செய்த ‘தனி ஒருவன்’ திரைப்படக் குழுவினருக்கு நம் அரசவையைக் கூட்டி ஒரு பாராட்டுத் தீர்மானம் வாசிக்க ஏற்பாடு செய்துவிடுங்கள் அமைச்சரே!”