பளாருக்கு எண்ட் கார்ட் போட்ட பத்மா!



தமிழ் சினிமாவில் நடிகைகளை இயக்குனர்கள் கன்னத்தில் அறைவதுதான் ஆணாதிக்க சர்வாதிகாரத்தின் அப்பட்டமான வெளிப்பாடு. சினிமா தவிர மற்ற துறைகளில் இது உண்டுதான். ஆனால் அங்கெல்லாம் அவை குற்றமாக கருதப்படும். சினிமாவில் மட்டும் ‘ேமாதிரக்கைக் குட்டு’ என அதற்கு கவுரவம் ஏற்றப்படும். இந்த ‘பளார்’ கலாச்சாரத்தை துவக்கி வைத்தவர் பிரபலமான மண்வாசனை இயக்குனர் என்பார்கள். பள்ளி மாணவர்களை ஆசிரியர்களே அடிக்கக் கூடாது என்கிற சட்டம் இருக்கிறபோது இந்த சினிமா பளார்கள் மட்டும்  விதிவிலக்காக இருக்கின்றன.

“நான் அந்த நடிகை பத்து டேக் வரைக்கும் போனதால் கன்னத்தில் பளார் என அறைந்தேன்” என்று இயக்குனர்கள் சக இயக்குனர்களுடன் பகிர்ந்து கொள்வது ஆணவத்தின் உச்சம். பல இயக்குனர்கள் சம்பந்தப்பட்ட நடிகைகளை வைத்துக் கொண்டே பொது மேடையில் இதனை சொல்லியிருக்கிறார்கள். இதனால் அந்த நடிைகயின் மனம் எந்த அளவிற்கு வேதனைப்படும் என்பதைப் பற்றி அவர்கள் கருத்தில் கொள்வதில்லை. இதுவாவது பரவாயில்லை; சில நடிகைகளே “அந்த இயக்குனரிடம் அடிவாங்கி நடிப்பு கற்றிருக்கிறேன்” என்று பெருமையாகச் சொல்வார்கள். மண்வாசனை இயக்குனரின் இயக்கத்தி–்ல் ஒரு நடிகை நடித்தால் படம் முடிவதற்குள் எத்தனை முறை அடி வாங்கினார் என்று கணக்கு போட்டுச் சொல்வார்கள்.

இந்த பளாருக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அதனை தன்மானத்துக்கு விடப்பட்ட சவாலாக எடுத்துக்கொண்டு சம்பந்தப்பட்ட இயக்குனருக்கு தண்டனை பெற்றுத் தந்தவர் பத்மபிரியா. தமிழ்ப் பெண்ணாக இருந்தாலும் மலையாள சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர்.  துணிச்சலான கேரக்டர்களைத் தேர்வு செய்து நடிப்பவர். சாமி இயக்கிய ‘மிருகம்’ படத்தில் எய்ட்ஸ் நோயாளியின் மனைவியாக துணிச்சலாக நடித்தார். அந்தப் படத்திற்காக தென்னை மரம் ஏறும் காட்சியில்கூட டூப் போடாமல் ஏறி நடித்தார்.
அந்தப் படத்தின் கிளைமாக்ஸ் காட்சி எடுக்கப்படும்–்போது உணர்ச்சிகளைக் ெகாட்டி கண்ணீர்விட்டு கதறி அழ வேண்டும். பத்மபிரியாவும் தன் திறமை அனைத்தையும் பயன்படுத்தி நடித்தார். ஆனால் என்ன காரணத்தாேலா இயக்குனர் சாமிக்கு திருப்தியில்லை. ஒரு கட்டத்தில் கோபத்தில் பத்மபிரியா கன்னத்தில் அறைந்து விட்டார். அறைவாங்கிய பத்மபிரியா அதற்குப் பிறகு கேரவனில் உட்கார்ந்து கொண்டு அழவில்லை. நடிகைதானே, அடி வாங்கித்தான் ஆகணும் என்று கலங்கவில்லை. அடிவாங்கிய பிறகும் அன்றைய காட்சியை நடித்துக் கொடுத்து விட்டுத் திரும்பி விட்டார்.

வந்தவர் நேராக நடிகர் சங்கத்திலும், தயாரிப்பாளர் சங்கத்திலும் தனக்கு இழைக்கப்பட்ட அநீதியை எடுத்துச் சொல்லி நீதி கேட்டார். தயாரிப்பாளர் சங்கம் சாமியை அழைத்து விசாரித்தது. அதன் பிறகு அவர் ஒரு வருடத்துக்கு எந்த படமும் இயக்கக் கூடாது; அவருக்கு எந்த தயாரிப்பாளரும் வாய்ப்பு கொடுக்கக் கூடாது என்று உத்தரவிட்டது. எத்தனையோ நடிகைகள் இயக்குனர்களிடம் அடிவாங்கி மனதுக்குள் புழுங்கி, அவமானத்தால் குறுகி இயக்குனர்களின் ஆணாதிக்க சர்வாதிகாரத்திற்கு அடிபணிந்து சென்ற காலத்தில் தனக்காக நீதி கேட்டு இயக்குனருக்கு தண்டனையும் பெற்றுத் தந்த பத்மபிரியா ஒரு நிஜ ஹீரோயின்தான்.
-மீரான்