இது என்ன மாயம்
எந்த மாதிரியும் இல்லாத புது மாதிரி கதை. அதைச் சொல்ல வேண்டிய விதத்தில் சொல்லி அசத்தியிருக்கிறார்கள். வேலையில்லாத பட்டதாரி என்பதுதான் விக்ரம்பிரபுவின் தகுதி. கைச் செலவுக்காக நண்பர்களுடன் சேர்ந்து நாடகம் நடத்துகிறார். ஆனால் நாடகக் குழுவைத் தவிர வேறு யாரும் நாடக அரங்கத்துக்கு வராத காரணத்தால் அந்தத் தொழிலுக்கு குட்பை சொல்கிறார். அந்தச் சமயத்தில் ஒரு பையன் ஒரு பெண்ணிடம் தன் காதலைச் சொல்ல தடுமாறுகிறதைப் பார்க்கும் விக்ரம் அண்ட் கோ அந்தப் பையனின் காதலுக்கு செயற்கையான சூழலை ஏற்படுத்தி காதலை வாழ வைக்கிறார்கள். முதல் ஆபரேஷன் சக்ஸஸான பிறகு வாய்ப்புகள் குவிகிறது. அந்த வரிசையில் அடுத்து வந்து நிற்கிறார் நவ்தீப். ஆனால் அந்த அசைன்மென்ட்டை அரைகுறை மனதோடுதான் ஒப்புக் கொள்கிறார் விக்ரம் பிரபு. காரணம், நவ்தீப் காதலிக்கும் அதே பெண்தான் விக்ரம் பிரபுவுக்கும் காதலி. தவறான புரிதலாலும் நண்பர்களாலும் காதலைச் சொல்ல முடியாமல் பிரிகிறார் விக்ரம் பிரபு. முன்னாள் காதலியை தொழில் தர்மத்தின்படி விக்ரம் பிரபு விட்டுக் கொடுத்தாரா, இல்லையா என்பது க்ளைமாக்ஸ்.
 விக்ரம் பிரபு கல்லூரி மாணவன் என்பதைதான் ஜீரணிக்க முடியவில்லை. மற்றபடி காதல் காட்சிகளில் நிறையவே ஸ்கோர் பண்ணுகிறார். காதலைச் சொல்லத் தவிக்கும் காட்சிகளில் தாத்தா சிவாஜிக்கு புகழ் சேர்க்கிறார். படத்தின் மெயின் அட்ராக்ஷன் கீர்த்தி சுரேஷ்தான். குழந்தையாகவும் இல்லாமல், குமரியாகவும் இல்லாமல் அவர் பண்ணும் ஒவ்வொரு அசைவும் அத்தனை அழகு. அதுவும் கன்னக்குழி சிரிப்புக்கு எத்தனை முறை வேண்டுமானாலும் டிக்கெட் எடுக்கலாம். வில்லன் போல் வந்து நல்ல பேர் வாங்கும் நவ்தீப்பின் ரீ-என்ட்ரி சுபம். நண்பர்களாக வரும் பாலாஜிக்கள், அஜய், ஜீவா கதையை நகர்த்த பெரும் போராட்டம் நடத்துகிறார்கள். நாசர் இல்லாமல் விஜய் படம் ஏது? அவரும் நாலு காட்சிக்கு வந்து போகிறார். ‘இருக்கிறாய்’ பாடலில் தன் இருப்பை அழுத்தமாக உறுதிப்படுத்துகிறார் ஜி.வி.பிரகாஷ். பின்னணி இசையும் மனதை மயக்குகிறது. நீரவ்ஷாவின் ஒளிப்பதிவில் கீர்த்தியும் அழகுதான், சார்லியும் அழகுதான். நுங்கும் நுரையுமாக காதலை வழிய வழிய சொல்லியிருக்கிறார் இயக்குனர் விஜய்.
|