லாரன்சுக்கு எப்போ கல்யாணம்?




‘காஞ்சனா-2’ படத்தின் வரலாற்று வெற்றிக்குப் பிறகு அடுத்த பாய்ச்சலை ஆரம்பித்திருக்கிறார் ராகவா லாரன்ஸ். வேந்தர் மூவிஸ் மதனுடன் இணைந்து ஒரே பந்தில் டபுள் சிக்ஸர் என்பது மாதிரி இரண்டு படம் தயாரித்து நடிக்கிறார். பொதுவாகவே தன் அடுத்த படம் குறித்த அறிவிப்பை அடக்கித்தான் வாசிப்பார். ஏனோ இம்முறை இந்தப் படங்களுக்கான ஃபர்ஸ்ட் லுக்கை பரபரப்பாக வெளியிட்டுவிட்டார். வெள்ளை வேட்டி, வெள்ளை ஜிப்பா, கழுத்தில் ருத்ராட்சம், நெற்றியில் திருநீறு என்று பக்திப்பழமாக தியாகராஜ பாகவதர் லுக்கில் இருந்தவரிடம் பவ்யமாக பேச்சு கொடுத்தோம். “திரும்பவும் பேயா?” “பேய்களுக்கு இப்போதைக்கு லீவு. ஏர்போர்ட்லே, ஷூட்டிங் ஸ்பாட்லே, ஷாப்பிங் மாலுலேன்னு எங்கே போனாலும் காஞ்சனாவோட அடுத்த பார்ட் எப்போ சார்னு ரசிகர்கள் கேட்கிறாங்க. அவங்க ஆர்வம் புரியுது. ஆனா, நான் கொஞ்சம் தயார் ஆகணும். அதுக்கு டைம் கொடுங்கன்னு மக்களிடம் தாழ்மையோடு கேட்டுக்கறேன்.”

“மொட்ட சிவா, கெட்டசிவா - டபுள் ஆக்‌ஷனை எதிர்பார்க்கலாமா?” “ரொம்ப பில்டப் கொடுக்காதீங்க சார். சிங்கிள் ஆக்‌ஷன்தான். எவ்வளவு நல்லவனா இருந்தாலும் அவனுக்குள்ளே ஒரு கெட்டவன் ஒளிஞ்சிக்கிட்டுதான் இருப்பான். அப்படிப்பட்ட அப்பாடக்கர் நல்லவனான மொட்டை சிவா எப்படி சூழ்நிலை காரணமா கெட்ட சிவா ஆகிறான் என்பதுதான் கதை. நம்மோட வழக்கமான க்ளாமர் ஐடியாவான பிளாக் அண்ட் ஒயிட் காம்பினேஷன் தியரிப்படி இதுலே காஜல் அகர்வால் எனக்கு ஜோடியா நடிக்கறாங்க. எப்பவும் மாதிரி பக்கா மாஸ். அதே நேரம் ஸ்ட்ராங் மெசேஜ்னு என்னோட பலமான ஃபார்முலாபடிதான் இந்தப் படமும் இருக்கும்.” “இன்னொரு டைட்டில் ‘நாகா’. அது எப்படி?” “‘முனி’ எப்படி டிரெண்ட் செட்டரா அமைஞ்சுதோ, அதுமாதிரி ‘நாகா’வும் அமையும். படத்தோட ஒன்லைன் தீம் என்னன்னா ‘பாம்பை தீண்டினா பழிவாங்கும்’ என்பது. ஏகப்பட்ட புதுமைகளை நீங்க ‘நாகா’வில் எதிர்பார்க்கலாம்”

“உங்களைப் பத்தி கிசுகிசுவே வர்றதில்லை. நீங்களா ஏதாவது கெளப்பி விடவேண்டியதுதானே?” “ஏன் சார் ஏன்? எல்லாம் நல்லாதானே போயிக்கிட்டிருக்கு. பக்திப்பழம் மாதிரி இருக்குற என்னைப் பத்தி கிசுகிசு எழுதணும்னு யாருக்காவது தோணுமா? நமக்கு பார்ட்டி கல்ச்சர் சுத்தமா ஆகாது. யாராவது கூப்பிட்டாங்கன்னா கூட ஆளை விடுங்க தலைவான்னு மறுத்துடுவேன். குடும்பம், ஆசிரமம், ஆன்மிகம்னு சூப்பர் ஸ்டார் பாணி வாழ்க்கை. இதுலே எங்கேருந்து உங்களுக்கு கிசுகிசுவுக்கு ஐடியா கிடைக்கப் போவுது?” “உங்க தம்பி எல்வினை ஹீரோ ஆக்கப் போறீங்களாமே?” “அவருக்கு சினிமாவில் நல்ல ஆர்வம். என்கரேஜ் பண்றதோட என் வேலை முடிஞ்சது. நடிப்பு, சண்டை, நடனம்னு சகலத்தையும் அவரா கத்துக்கிட்டு வந்து, ‘நான் ரெடி’ன்னு நிக்கிறாரு. நல்ல கதை கிடைச்சா, உடனே ஸ்டார்ட் பண்ணிடலாம்.” “சத்தமில்லாம நிறைய சமூகசேவை செய்யறீங்க. சக நடிகர்கள் உதவுகிறார்களா?” “நான் கேக்குறப்போ இல்லைன்னு யாருமே சொல்லுறதில்லை. இதுவரை நூற்றி அறுபது குழந்தைகளுக்கு ஓப்பன் ஹார்ட் சர்ஜரி செய்ய எங்க டிரஸ்ட் உதவி யிருக்கு. அறுபது பேருக்கு கண் ஆபரேஷன் பண்ணியிருக்கோம். இப்போ பண்ணிக்கிட்டிருக்க படங்களில் இருந்து கிடைக்கிற சம்பளத்திலிருந்து ஒரு கோடி ரூபாய் பணத்தை ஏழைக் குழந்தைகளின் படிப்புக்காக ஒதுக்கீடு செய்திருக்கேன். ஐ.ஏ.எஸ். அதிகாரி இறையன்புவின் வழிகாட்டுதல்படி இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்தப் போறேன்.”

“அதெல்லாம் இருக்கட்டும். இப்படியே எவ்வளவு நாள் சார் பேச்சுலராவே இருக்கப் போறீங்க? எப்போ கல்யாணம்?” “அட தேவுடா. ராகவேந்திரர் அருளால் கல்யாணம், குழந்தை குட்டின்னு பக்கா இல்லறவாழ்வில் சந்தோஷமா வாழ்ந்துக்கிட்டிருக்கேன் சார். மனைவி பெயர் லதா. எங்க அன்புக்கு சாட்சியா பிறந்த பொண்ணு ராகவி. பையன் பிறந்திருந்தா ராகவேந்திரான்னு பெயர் வைக்க திட்டமிட்டிருந்தோம். என் மகள் ப்ளஸ் ஒன் படிக்கிறாங்கன்னு சொன்னா நம்புவீங்களா? சின்ன வயசுலேயே கல்யாணம் ஆயிடிச்சி சார். என்னோட முதல் ரசிகர்களே என்னோட மனைவியும், மகளும்தான். அவங்ககிட்டே முழுப்படத்தையும் விலாவரியா டிஸ்கஸ் பண்ணிட்டுதான் ஃபைனல் ஸ்க்ரிப்ட்டே ரெடி பண்ணுவேன்.”
- சுரேஷ் ராஜா