பெட்டிக்குள் வைரங்கள்..?



Vannathirai magazine, Vannathirai weekly magazine, Tamil Magazine Vannathirai, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine

           இரும்பு வியாபாரம் செய்தால்கூட விற்பனையாகாத பொருளை கிடைக்கும் விலைக்கு விற்று மாற்று வியாபாரத்தை தொடங்கி விடலாம். அழுகும் பொருள் என்றால் கூட அதை வைத்து மின்சாரத்தை தயாரித்து விடலாம். ஆனால், ஒரு சினிமா வியாபாரம் ஆகாவிட்டால் அதை வைத்து எதுவுமே செய்ய முடியாது. அதில் போட்ட பணம் கடலில் கரைத்த சந்தனத்திற்கு சமம்.

சினிமா தொடங்கிய காலத்திலிருந்து பாதியில் நிறுத்தப்பட்ட படங்களை கணக்கிட்டால், தலையே சுற்றி விடும். உதாரணத்துக்கு கடந்த சில வருடங்களில் தணிக்கை செய்யப்பட்டு வெளிவராத படங்கள் மட்டுமே சுமாராக 500 இருக்கும் என்னும் புள்ளி விபரம், இந்த விபரீதத்தை உணர்த்த போதுமானது. 

ஒரு குறிப்பிட்ட பணத்தை ஒதுக்கி அதற்குள் படம் எடுத்துவிடலாம் என்று நம்பி இறங்கும் புதிய தயாரிப்பாளர்கள், அந்த பணத்தில் முடிக்க முடியாமல்... புலி வாலை பிடித்த கதையாக போட்ட பணத்தை எடுக்க வேண்டும் என்பதற்காக மேலும் மேலும் கடன் வாங்கி... வீடு வாசல் அத்தனை¬யும் விற்று... அப்படியும் முடியாமல் போய்...

இப்போது வெளிவராமல் கிடக்கும் பெரும்பாலான படங்களுக்கான பிளாஷ்பேக் இதுதான்.

‘‘தீர்க்ககூடிய பைனான்ஸ் பிரச்சினையாக இருந்தால், தீர்த்து வைத்து வெளியிடலாம். ஆனால், வெறும் ஈகோ பிரச்னையால் வெளிவராமல் இருக்கும் படங்களும் உண்டு. உதாரணமாக ஒரு கோடி செலவில் எடுக்கப்பட்ட படம், வெறும் பத்து லட்சம் பைனான்ஸ் பிரச்னைக்காக முடங்கிக் கிடக்கும். கொடுத்தவர், வாங்கியவர் இணக்கமாகி வெளியிட்டால் படத்தின் வசூலில் பத்து லட்சத்தை கொடுத்து விட்டு மீதியை தயாரிப்பாளர் எடுத்துக் கொள்ளலாம் என்ற நிலையில் ஈகோவால் அந்தப் படம் வெளிவராமல் இருக்கும்.

இதுபோன்ற சிக்கல்களை தீர்த்து வைக்க முடியும். என்னைக் கேட்டால், ‘சினிமாவை தொழிலாக நம்பி யாரும் படம் எடுக்க வராதீர்கள். உங்கள் குடும்ப தேவை, தொழில் தேவை போக உபரியாக பணம் இருந்தால் மட்டும் படம் எடுங்கள். கிடைத்தால் லாபம். இல்லாவிட்டால் புத்தி கொள்முதல்’ என்று நினைத்து போய்கொண்டே இருக்கலாம்...’’ என்கிறார் 100க்கும் மேற்பட்ட சிறு படங்களை தயாரித்து இயக்கிய இராம.நாராணயன்.

சிறு படங்களை விநியோகஸ்தர்கள் வாங்க முன்வருவதில்லை. முன்னோட்ட காட்சிக்குகூட மீடியேட்டர்கள் வருவதில்லை. அதனால்தான் படங்கள் வெளிவராமல் குவிந்து கிடக்கிறது என்ற குற்றச்சாட்டு உண்டு. இதை மறுக்கிறார் கலைப்புலி ஜி.சேகரன்.

‘‘விநியோகஸ்தர்கள் யாரும் கலைச் சேவை செய்ய வரவில்லை. பத்து ரூபாய் முதல் போட்டு பதினோரு ரூபாய் எடுக்கத்தான் பார்ப்பார்கள். அவற்றுக்கு உத்திரவாதம் இல்லாத படங்களை எப்படி வாங்கி திரையிட முடியும்? குருட்டு நம்பிக்கையில் அப்படி வாங்கி போஸ்டர் காசுகூட திரும்ப வராமல் ஒரே படத்தில் நடுரோட்டுக்கு வந்த விநியோகஸ்தர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.

‘ஒரு தலைராகம்’, ‘அன்னக்கிளி’, ‘சேது’ மாதிரி அத்தி பூத்தாற் போல ஒரு சில படங்கள் விதி விலக்காக அமைந்து விடுகிறது.

அந்தப் படம் மாதிரி நம் படமும் ஆகும் என்ற நம்பிக்கையில்தான் நிறைய தயாரிப்பாளர்கள் மஞ்சள் பையில் பணத்தை போட்டுக் கொண்டு சென்னைக்கு வருகிறார்கள். ஏதோ ஒரு படத்தை எடுத்து வைத்துக் கொண்டு விநியோகஸ்தர்கள் வாங்கவில்லை, மதிக்கவில்லை என்றால் நாங்கள் என்ன செய்ய முடியும்?’’ என்கிறார் விநியோகஸ்தர்கள் சங்க செயலாளர் கலைப்புலி ஜி.சேகரன்.

படங்களின் தேக்கத்திற்கு மூன்றாவதாக வைக்கப்படும் குற்றச்சாட்டு, திரையரங்குகள் கிடைப்பதில்லை என்பது. திரைய ரங்க உரிமையாளர்கள் பெரிய நட்சத்திரங்களின் படங்களை திரையிடுவதில் மட்டுமே அக்கறை காட்டுகிறார்கள். காலை காட்சியாககூட சிறு படங்களை திரையிடுவதில்லை... என்பது அந்த குற்றச்சாட்டின் சாராம்சம். ‘‘இது அபத்தமான குற்றச்சாட்டு...’’ என்று சொல்லும் அபிராமி ராமநாதன், சில விவரங்களை முன் வைத்தார்.

 ‘‘சென்னை நகரில் 120 தியேட்டர்கள் இருக்கின்றன. கடந்த பொங்கலுக்கு ‘வேட்டை’, ‘நண்பன்’ என்ற இரு பெரிய படங்கள் 50 தியேட்டரில் வெளியானது. மீதமுள்ள 70 தியேட்டர்களில் வெளியானது சிறிய படங்கள்தான். சரி இந்தப் பெரிய படங்கள் பத்து வாரம் ஓடுவதாக வைத்துக் கொள்வோம். மீதமுள்ள வாரத்துக்கு நாங்கள் என்ன செய்வது? சிறிய படத்தைதானே திரையிட்டாக வேண்டும்? ஒரு இயக்குநர் படம் எடுக்காமல் சில காலம் இருக்கலாம். ஒரு தயாரிப்பாளர் சில வருடங்கள் படம் தயாரிக்காமல் இருக்கலாம். ஆனால், ஒரு தியேட்டர்காரன் ஒரு நாள் கூட தியேட்டரை மூடி வைக்க முடியாது. தியேட்டர்காரர்களை வாழ வைப்பதே சின்னப் படங்கள்தான்.

எங்களுக்கும் வாடகை, கரண்ட் பில், மெயின்டனன்ஸ் என்று ஆயிரம் பிரச்னைகள் இருக்கின்றன. வெளி  யீட்டுக்கு முன்பே படத்தை பற்றிய அபிப்ராயத்தை உருவாக்கும் வகையில் புர மோஷன் திட்டத்தில் தக்க மாறுதல்களை செய்து கொண் டால் இந்த பிரச்சினையை தவிர்க்க முடியும்...’’ என்கிறார்.

சினிமா என்பது ரசிகனுக்கு ஒரு பொழுதுபோக்கு சாதனம். ஆனால், ஒரு தயாரிப்பாளருக்கோ அது சில லட்சங்கள் அல்லது சில கோடி மதிப்புள்ள சொத்து. அதுவே ஒரு படைப்பாளனுக்கு, அது எதிர்காலம். எனவே முடங்கிக் கிடக்கும் படங்களை மீட்டுக் கொண்டு வர தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், தியேட்டர் அதிபர்கள், நடிகர் சங்கம், பைனான்சியர்கள், இணைந்து நல்லதொரு திட்டத்தை தீட்டினால் மட்டுமே இந்தப் பிரச்னைக்கு விடிவு கிடைக்கும்.
- மீரான்