காம காட்டாறு!



ஜெயம்ரவியும் சூரியும் எதிரும் புதிருமான வில்லேஜ் பேச்சுலர்கள். இரு குடும்பத்துக்கும் பரம்பரை அரசியல் தகராறு. சூரியின் முறைப்பெண்ணான அஞ்சலியை உஷார் செய்ய, தற்காலிகமாக விரோதத்தை தள்ளி வைக்கிறார் ரவி.  பதிலுக்கு ஜெயம்ரவியின் முறைப்பெண்ணான திரிஷாவை பிக்கப் செய்து பழிவாங்க சூரி முடிவெடுக்கிறார். ஆனால்- திரிஷாவுக்கு ஏற்கனவே நிச்சயம் ஆகிவிட்டது. திரிஷாவின் திருமணத்தில் ஏற்படும் ட்விஸ்ட் ரவி, சூரி, அஞ்சலி ஆகியோரின் வாழ்க்கையையே புரட்டிப் போடுகிறது.
டாஸ்மாக் கடையை அகற்ற வன்முறையை கையில் எடுக்கும் டாபிக்கலான காட்சியில் அறிமுகமாகிறார் ஜெயம் ரவி. தற்போதைய தமிழக சூழலுக்கு மிகவும் பொருத்தமான காட்சி என்பதால் தியேட்டரில் அப்ளாஸ் அள்ளுகிறது. சீரியஸான படங்களில் நடித்து சிடுமூஞ்சி என்று பெயர் வாங்கிவிட்டவருக்கு, இளமையான வேடம். அடித்து ஆடியிருக்கிறார். சூரி, சொல்லவே தேவையில்லை. வடிவேலு இல்லாத வறட்சியை முடிந்தவரை போக்குகிறார். ஒவ்வொரு முறையும் எப்படியும் இவர் ஜெயம் ரவியிடம் தோற்கத்தான் போகிறார் என்பது முதலிலேயே தெரிந்துவிடுவதால், ‘அப்புறம்?’ என்று ஆகிவிடுகிறது. சுவாரஸ்யமான கேரக்டர் ‘நான் கடவுள்’ ராஜேந்திரனுக்குத்தான். கம்பீரமான ஒரு போலீஸ் அதிகாரியாக அறிமுகமாகி ஜெயம் ரவியின் குடும்பப் பிரச்சினையால் பிச்சையெடுக்கும் அளவுக்கு போகும் கேரக்டர் ஸ்கெட்ச் வன்முறையான கிண்டல்.

திரிஷா வழக்கம்போல க்ளாமர் + நடிப்பு என்று அவரது வழக்கமான ரூட். ஆச்சரியம் அஞ்சலிதான். சேலையில் பசேலேன குடும்ப குத்துவிளக்காக காட்சியளிப்பவர், பாடல் காட்சிகளில் பளீரென்று சிகப்பு விளக்காக ஹைடெக் கவர்ச்சி காட்டியிருக்கிறார்.
தமனின் இசையில் பாடல்கள் முழுக்க ஆந்திரா மெஸ் வாசம். ‘பல்பு வாங்கிட்டேன் மச்சான்’ பாடலுக்கு தியேட்டரில் இளசுகளிடம் அத்தனை ஆரவாரம். வசனங்கள் எல்லாம் அநியாயம். டபுள் மீனிங்கே கிடையாது. டைரக்ட் மீனிங்தான். அஞ்சலி, ரவிக்கு ‘நீச்சல்’ கற்றுக் கொடுக்கிறார். உள்நீச்சலும் சேர்த்து. பதிலுக்கு ரவி, அஞ்சலிக்கு சைக்கிள் கற்றுக் கொடுக்கிறார். இந்த காட்சிகளில் உச்சரிக்கப்படும் வசனங்களின்போது குடும்பத்தோடு தியேட்டருக்கு வந்தவர்கள், ‘தாவணிக்கனவுகள்’ பாக்யராஜ் ஆகிறார்கள். அதிலும் விவேக் என்ட்ரி ஆனபிறகு வசனங்களில் காமம் காட்டாறாகக் கரைபுரண்டு ஓடுகிறது. லாஜிக் இல்லாத இந்த படத்தில் சுராஜின் மேஜிக் பக்காவாக ஒர்க்கவுட் ஆகியிருக்கிறது. விடலைகள் கொண்டாடுகிறார்கள். இரண்டரை மணி நேர காமெடி என்டர்டெயின்மென்டுக்கு உத்தரவாதம்.