அப்புக்குட்டி கூட ஆணழகன்தான்!



ஒளிப்பதிவாளர் ராம்ஜி சொல்கிறார்...

ராம்ஜி. தமிழ் சினிமாவின் மேஜிக்மேன். ‘வாலி’,  ‘பருத்திவீரன்’ ‘ஆயிரத்தில் ஒருவன்’ என இவர் கேமரா பிடித்த படங்களெல்லாம், தேசிய அளவில் தமிழ் சினிமாவின் பெருமையை தொழில்நுட்ப ரீதியாக பறைசாற்றிய படங்கள்.ஜெயம் ராஜாவுடன் ‘தனி ஒருவன்’ படத்துக்காக வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார். டி.ஐ. பணிகளில் பிஸியாக இருந்தவரைப் பிடித்தோம்.
‘தனி ஒருவன்’ டைட்டிலே கலக்கலாக இருக்கிறதே?

‘இரண்டாம் உலகம்’ முடிந்த கையோடு கமிட் ஆன படம். ஜெயம் ராஜாவுடன் எப்போதோ இணைந்திருக்க வேண்டும். கடைசியாக, ‘வேலாயுதம்’ படத்தின்போதும் என்னை அழைத்திருந்தார். ஆனால் ஏற்கனவே இருந்த கமிட்மென்டுகளால் அப்போது சேர முடியலை.ஒருநாள் திடீரென்று இந்தப் படத்தின் கதையை சொன்னார். கதை மிகவும் பிடித்திருந்தது. வித்தியாசமான நிறைய விஷயங்களை இதற்காக யோசித்து வைத்திருக்கிறார். இந்தப் படத்துக்காக மூன்று வருடம், ராஜா தன்னை அர்ப்பணித்திருக்கிறார்.

ரீமேக்கில் சிகரம் தொட்ட அவர், முதன்முறையாக இப்போதுதான் நேரடி கதையோடு களமிறங்குகிறார். அந்த வகையில ‘தனி ஒருவன்’ என்கிற டைட்டிலே ராஜாவுக்குத்தான் பொருந்தும். போலீஸ் அதிகாரி பற்றிய கதை. கலர்ஃபுல்லாக இருக்கும். திரையில் பார்க்கும் விழிகள் வியப்பால் விரியும் என்பதற்கு நான் கேரண்டி.
இந்தப் படத்தை பிலிமில் எடுத்தீர்களாமே?

இந்தியாவில் அனேகமாக பிலிமில் படமான கடைசி படம் இதுவாகத்தான் இருக்கும். ஏன் பிலிமில் எடுத்தோம்னா, ரகளையான நிறைய சேஸிங் காட்சிகள். அதற்கு பிலிம்தான் சரியா வரும்னு தோணுச்சி.‘வாலி’யில் அறிமுகமாகி பதினேழு வருடங்கள் ஆயிடிச்சி. ரொம்ப குறைவாதான் படங்கள் ஒப்புக் கொள்ளுறீங்க?

ஆண்டுகளை ஒப்பிட்டால் எண்ணிக்கை ரொம்ப குறைவு என்பது உண்மைதான். அதற்கு காரணம் என்னுடைய படங்கள்தான்.

பீரியட் பிலிம் மாதிரி, ஒளிப்பதிவுக்கு ஸ்கோப் இருக்குற படங்களா ஒப்புக்கறேன். ஒவ்வொரு படத்துக்கும் குறைஞ்சது ரெண்டு, மூணு வருஷம் வேலை பார்க்க வேண்டியிருக்கு. ஒரு படம் முடிஞ்சாதான் அடுத்த படம் கமிட் ஆகணும்னு ஒரு பாலிஸி. இனிமேல், வருஷத்துக்கு இரண்டுன்னு வேலை பார்க்கலாமான்னு யோசிக்கறேன்.

தமிழ், மலையாளம், இந்தின்னு வேற வேற மொழிகளில் வேலை பார்க்கறீங்க. என்ன வித்தியாசம்?மலையாளப் படங்களில் அவார்டை குறி வெச்சி அடிக்கலாம். நம்மை நிரூபிக்க ஸ்பேஸ் கிடைக்கும். இந்தி முழுக்க முழுக்க பிசினஸ். கமர்ஷியல் கண்ணோட்டத்தில்தான் ஆங்கிள் வைக்கணும். இந்த இரண்டுமே சந்திக்கிற புள்ளிதான் தமிழ் சினிமா. படங்களை எப்படி தேர்வு பண்ணுறீங்க?

ஒரே ஒரு இன்ச்சாவது என்னை அடுத்தகட்டத்துக்கு அழைத்துச் செல்லும் என்கிற நம்பிக்கை இருக்கிற பிராஜக்ட்டா பார்த்துதான் கமிட் ஆகுறேன். என்னோட வெல்விஷர்களில் ஒருத்தர் சிவக்குமார். ‘பேர் எடுத்தது போதும், பணம் சம்பாதிக்கிற வழியையும் பாரு’ன்னு ஆலோசனை சொல்லியிருக்கிறார். பணமும் முக்கியம்தான். அதைப்பத்தியும் இனிமே யோசிக்கணும்.

உங்கள் கேமரா கண்கள் யாரை அழகி என்று ஒப்புக் கொள்ளும்?
திரிஷா, நயன்தாரா, பிரியாமணி, அனுஷ்கா, ஜோதிகா, அஞ்சலி என நிறைய அழகிகளோடு வேலை பார்த்திருக்கேன்.

ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விதத்தில் ஆழகுதான். இவர் 100 சதவீதம் அழகு, இவர் கொஞ்சம் சுமார்னுலாம் வகை பிரித்து சொல்ல முடியாது. இன்னொரு விஷயம் - அழகு என்பது அவரவர் பார்வையைப் பொறுத்து மாறுபடுது இல்லையா? சிலருக்கு சிகப்புன்னா அழகு, சிலருக்கு கருப்புன்னா அழகு, சிலருக்கு ஒல்லி, சிலருக்கு கொஞ்சம் புஷ்டியா இருக்கணும். என்னுடைய பார்வையில் அப்புக்குட்டி கூட ஆணழகன்தான்.

நீங்கள் வேலை செய்ய வேண்டும் என்று விரும்பும் இயக்குனர்கள்?
மணிரத்னம், ஷங்கர், அனுராக் காஷ்யப், பிரபுசாலமோன். இது மட்டும் எனக்கு பத்தாது. இப்ப புதுசா வந்திருக்கும் கார்த்திக் சுப்புராஜ், ‘காக்கா முட்டை’ மணிகண்டன் போன்ற புதிய தலைமுறையினரோடும் வேலை செய்யணும்னு ஆசை.

சமீபத்தில் உங்களை ‘அட’ போட வைத்த படம்?
ரவிவர்மனோட இந்தி படம் ‘பர்பி’, மணிகண்டனோட ‘காக்கா முட்டை’, முக்கியமா நம்ம குரு பி.சி.ராம் சாரோட ‘ஓகே கண்மணி’. மனுஷன் இறங்கி அடிச்சிருக்காரு. எட்டு வீடு இல்லை, பதினாறு வீடு இறங்கி அடிச்சிருக்காரு. ‘நானும் யூத்துதாம்பா’ன்னு கெத்து காட்டியிருக்காரு.

கேமராமேன், சினிமாட்டோகிராபர், டைரக்டர் ஆஃப் போட்டோகிராபி ஆகிய இந்த மூன்று அடையாளங்களில் எந்த அடையாளத்தில் உங்களை அழைக்கணும்?
டைரக்டர் ஆஃப் போட்டோகிராபி. ஏன்னா, இயக்குனரின் கதைக்கு நான் போட்டோகிராபராக இருக்கத்தான் விருப்பம்.

டைரக்‌ஷன் ஐடியா?கண்டிப்பாக இருக்கு. நல்ல கதையைத் தேடிக்கிட்டிருக்கேன். இருந்தா கொடுங்க. எல்லா வேலையையும் தொடங்கியாச்சு.

-எஸ்