சிற்றுண்டியல்ல, தலைவாழை விருந்து!
பாபநாசம்
மானப் பிரச்னை. அதன் காரணமாக வீட்டுக்குள்ளேயே அந்நியன் ஒருவன் கொலையாகிறான். மனைவி உடந்தையாக இருக்க, மகள் செய்த கொலை அது. கொல்லப்பட்டவன், மக்கள்தொகை வரிசையில் ஒரு வெறும் புள்ளி அல்ல, போலீஸ் ஐ.ஜி.யின் மகன் என்கிற பெரும்புள்ளி. அந்த கொலைப் பழியை மறைக்க, வீட்டுத் தோட்டத்திலேயே குழிதோண்டிப் புதைக்கிறார்கள். குடும்பத்தலைவன் கமல் எடுக்கும் மறைப்பு முயற்சியும், போலீஸ் பிடியில் குடும்பமே சிக்கித் தவிக்கும் அவலமும்தான் கதை.
கேபிள் டி.வி. இணைப்புத் தொழில் செய்யும் கமல், டி.வி.யில் பலான காட்சியைப் பார்த்துவிட்டால், அலுவலகத்தை வசூல் பையனிடம் ஒப்படைத்துவிட்டு, மனைவியைப் பதம் பார்க்கச் செல்கிற இளமைத் துடிப்பு உள்ளவர். சினிமா விரும்பியான அவருக்கு, சில சினிமாக் காட்சிகள்தான் கொலை மறைப்பு வேலைகளுக்கு திரை எதிரில் நின்று உதவுகின்றன.
பதற்றத்தை வெளிக்காட்டாமல், குடும்பத்தை நெறிப்படுத்தும் கமல் சம்பந்தப்பட்ட காட்சிகள் குடும்பத் தலைவர்களின் கண்ணீருக்குக் குறிவைப்பவை. குறி தப்பவில்லை.கொலை நடந்த தேதியில் தனது குடும்பம் ஊரிலேயே இல்லை என்று நிரூபிக்க, கமல் நடத்தும் ஜோடிப்பு நடவடிக்கைகள் சுவைபடக் காட்டப்படுகின்றன.
காவலரின் காலணியால் மிதிபட்டு, அடிவாங்கும் காட்சி, ‘கதையின் போக்கில் காம்ப்ரமைஸ் செய்யமாட்டார் கமல்’ என்பதற்கான சாட்சி.விவசாயிகளின் நண்பன் மண்புழு என்று சொல்லி, சமூக அக்கறையை போகிற போக்கில் ஜெயமோகன் வசன உதவி யுடன் வெளிப்படுத்துவதில் கம்பீரமாக உயர்ந்து நிற்கிறார் கமல்.
ஐ.ஜி. மற்றும் அவரது கணவர் முன்பாக, ‘எனக்கு என் குடும்பம்தான் பெருசு. நான் ரொம்ப சின்னவன்’ என்று தொடங்கி நீளும் வசனத்தை அழுகை, இயலாமை, வெகுளித்தனம் என்று கலந்து கட்டிப் பேசி, கண் இருப்பவர்களை எல்லாம் கண்ணீர் சிந்த வைக்கிறார் கமல்.பாசமுள்ள குடும்பத் தலைவியாக பளிச்சிடுகிறார் கவுதமி. கணவர் கமலுடன் காட்டும் ரொமான்ஸ் முகபாவம், கொலை கண்டு காட்டும் பெருஞ்சோகம், போலீஸைக் கண்டபோதெல்லாம் வெளிப்படுத்தும் அச்சகீதம் என அசத்துகிறார்.
மூத்த மகளாக வரும் நிவேதா தாமஸ், துடுக்கு - நடிப்பு இரண்டையும் கைவசம் வைத்திருக்கிறார். அவரது பெரும்பாலான வசனம் கண்களாலேயே பேசப்படுகிறது. ‘கொன்னுடுவேன்னு மிரட்டுனாங்கப்பா! அதான் சொல்லிட்டேன்’ என்று அப்பாவித்தனமாகப் பேசும் இளைய மகள் எஸ்தர் அனில் உருக வைக்கிறார்.
ஐ.ஜி.யாக வரும் ஆஷா ஷரத், கவனிக்கத்தக்க கதாபாத்திரம். கண்முன் நடக்கும் போலீஸ் விசாரணையை அவர் மேற்பார்வை இடுவதில், பார்வை மட்டுமே பல்வேறு அர்த்தங்களைச் சொல்கின்றன. அதிகாரத்தையும் இயலாமையையும் பிடித்துக்கொண்டு அவர் நடத்தும் பாசப்போராட்டம் மனதைத் தொடுகிறது. அவரது கணவராக வரும் ஆனந்த் மகாதேவன் வெகு இயல்பு.
கெட்ட போலீஸ் கலாபவன் மணி, நல்ல போலீஸ் இளவரசு, டீக்கடை எம்.எஸ்.பாஸ்கர், வசூல் பையன் ‘பசங்க’ ராம் உள்ளிட்ட அத்தனை கேரக்டர்களும் ‘இது படமல்ல பாடம்’ என்பதை உணர்ந்தும் உணர்த்தியும் உலா வருகிறார்கள்.சார்லி, வையாபுரி, நெல்லை சிவா, கவி பெரியதம்பி, டெல்லி கணேஷ், சாந்தி வில்லியம்ஸ் ஆகியோரும் பாவம் நாசமாக பாடுபட்டிருக்கிறார்கள்.
கதைக்கு காரணகர்த்தாவான ஐ.ஜி. மகன் கேரக்டரில் வரும் ரோஷன், தனிக்கதாநாயகனாக இடம் பிடிக்க வாய்ப்பிருக்கிறது.கதையோட்டத்துக்கு தடைவந்து விடக்கூடாது என்பதற்காக இரண்டு பாடல்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளன. அதில், நெல்லைத் தமிழில் புரட்டி எடுத்த வார்த்தைகளால் நா.முத்துக்குமார் எழுதிய ‘ஏலே கோட்டிக்காரா.....’ குடும்பக் குதூகலம்.
வெட்டுக்குத்து, ரத்தப் பீய்ச்சல் என எதுவும் இல்லாவிட்டாலும் திகில் படத்துக்கான உணர்வைக் கொட்டியிருக்கிறார் இசையமைப்பாளர் ஜிப்ரான்.சுஜித் வாசுதேவ் ஒளிப்பதிவில் காவல் நிலையம், டீக்கடை, கமல் வீடு, வீட்டுச் சுடுகாடு அத்தனையும் மனசுக்குள்ளேயே டேரா போட்டு நிற்கின்றன.
எளிமையான வசனத்தால் இதயம் தொடுகிறார் ஜெயமோகன். ‘ஏலே! ஏட்டி! ஆக்கங்கெட்ட’ என்று வார்த்தைகளைப் பொறுக்கி எடுத்துக் கோர்த்திருப்பது செயற்கையாக இருக்கிறது.
‘இது சிற்றுண்டியல்ல, விருந்து’ என்பதைப் புரியவைக்கிறார் எடிட்டர் அயூப் கான்.கதைக்களத்தை கண்முன் காட்டி, கண்கட்டி வித்தை செய்கிறார் கலை இயக்குநர் ரெம்போன் பால்ராஜ்.குடும்பம் கொண்டாடும் கதை, குழப்பமில்லாத திரைக்கதை அமைத்து நியாயத் தீர்ப்பு சொல்லியிருக்கும் இயக்குநர் ஜீத்து ஜோசப், நேரடித் தமிழிலும் நிறைய படங்கள் இயக்க வேண்டும்.
-நெல்பா
|