தலையெழுத்தை மாற்றினார் தல!



‘தல போல வருமா?’ கோடம்பாக்கம், ரெண்டு வாரமாக  இந்த  பாட்டைத் தான் பாடிக்கொண்டே இருக்கிறது. தமிழ், இந்திய சினிமாக்களில் மட்டுமல்ல, உலக சினிமாக்களிலேயே இப்படியொரு நிகழ்ச்சி நடந்திருக்குமா என்று தெரியவில்லை.

வளர்ந்துவரும் நடிகரான ‘அழகர்சாமி குதிரை’ அப்புக்குட்டிக்கு பிரத்யேகமான போட்டோ ஷூட். போட்டோகிராபர் அஜித்குமார். நெகிழ்ந்து போயிருக்கிறார் அப்புக்குட்டி, மன்னிக்கவும், சிவபாலன். யெஸ், இனிமேல் இயற்பெயரான சிவபாலன் என்கிற பெயரிலே நடியுங்கள் என்று ஆலோசனை கொடுத்திருக்கிறாராம் அஜித்.

“திருச்செந்தூர் பக்கத்துலே நாதன்கிணறுதான் சொந்த ஊர். அங்கிருந்து வர்றப்போ வெறும் நம்பிக்கையை மட்டும்தான் மஞ்சப்பையிலே போட்டுக்கிட்டு இந்த ஊருக்கு வந்தேன்.பதினைஞ்சு வருஷம். சென்னை என்னை பொரட்டிப் போட்டுடிச்சி. கேட்டரிங் வேலை பார்த்துக்கிட்டே சினிமா வாய்ப்புகளுக்கு முயற்சி பண்ணிக்கிட்டிருந்தேன். ‘வெண்ணிலா கபடிக்குழு’ கிடைச்சது என்னோட அதிர்ஷ்டம்.

‘வீரம்’ படத்தில் நடிக்கிறப்போ அஜித் சாரோடு பழகற வாய்ப்பு கிடைச்சுது. ‘நல்லா நடிக்கறீங்க. ஆனா எல்லா படத்துலேயும் இதே கெட்டப்தானா?’ன்னு அக்கறையா கேட்டாரு.‘ஆமாம் சார். கெட்டப்பை மாத்த நினைச்சாகூட முடியலை. சில படங்களோட கன்டினியூட்டி குறுக்கே நிக்குது’ன்னு சொன்னேன்.‘அதைப்பத்தி கவலைப்படாதீங்க. உங்களை வேற வேற கெட்டப்புலே நானே போட்டோ ஷூட் பண்ணித்தர்றேன்’னு சொன்னாரு.

அதுக்கப்புறம் நான் இந்த சம்பவத்தையே மறந்துட்டேன். அஜித்சாரும் மறந்துட்டிருப்பாருன்னுதான் நெனைச்சிக்கிட்டிருந்தேன்.சமீபத்தில் திடீருன்னு கூப்பிட்டு அனுப்பிச்சாரு. ‘நாளைக்கு போட்டோஷூட், வந்துடுங்க’ன்னு சொன்னாரு.ஸ்டுடியோவுக்கு போய் பார்த்தா அவரோட பர்சனல் மேக்கப்மேன், ஹேர் டிரஸ்ஸர், காஸ்ட்யூமர்னு பெரிய டீமே எனக்காகக் காத்திருந்தது. என்னாலே நம்பவே முடியலை.

தான் ஒரு மாஸ் ஹீரோங்கிறதை மறந்துட்டு, போட்டோகிராபரா பம்பரமா சுழண்டாரு. விதவிதமா எடுத்தாரு. அந்த போட்டோவையெல்லாம் பார்த்தா, அது நான்தானான்னு எனக்கே சந்தேகமா இருக்கு.பதினைஞ்சி வருஷத்துக்கு முன்னாடி இப்படி ஓர் ஆல்பம் என் கையிலே இருந்திருந்தா, நானும் நிறைய கெட்டப்பில் வித்தியாசமான வேடங்களில் இந்நேரம் ஃபார்ம் ஆகியிருப்பேன்.

இப்போ மட்டும் என்ன கெட்டுப் போச்சி. அஜித் சார் எடுத்துக் கொடுத்திருக்கிற இந்த போட்டோஸ், என்னை வேற லெவலுக்கு நிச்சயமா கொண்டு போயிடும். சாரோட இப்போ ‘சிறுத்தை’ சிவா இயக்குற படத்துலே நடிக்கறேன். இந்த போட்டோக்களில் இருக்கிற ஒரு கெட்டப்பில்தான் அந்தப் படத்துலே வருவேன்” மடமடவென்று சொல்லி முடித்து நன்றியுணர்வில் மவுனமானார் அப்புக்குட்டி, மன்னிக்கவும், சிவபாலன்.

- ராஜா