15 மொழிகளில் பாடிய பாட்டரசி!



சிஷ்ட்ல ராமமூர்த்தி ஜானகி என்கிற எஸ்.ஜானகி ஆந்திர மாநிலம் ரேபலியில் 1938 ஆம் ஆண்டு பிறந்தார். மூன்று வயதிலேயே பாடும் திறன் இவருக்கு வாய்த்தது. குழந்தைப்பருவத்திலேயே வானொலியில் பாட்டுக் கேட்பதில் ஆர்வமாக இருந்தார்.

1956ஆம் ஆண்டில் அகில இந்திய வானொலி நடத்திய இசைப்போட்டியில் இரண்டாம் பரிசு பெற்றார். அந்தப்பரிசு தந்த உற்சாகம், சினிமாவில் பாடவேண்டும் என்கிற லட்சியத்தை உருவாக்கியது. பைடிஸ் சாமி என்கிற நாதஸ்வர வித்வானிடம் இசை கற்றுக்கொண்டார்.

1957ஆம் ஆண்டு, ஏவி.எம்மில் பெண் குரலுக்கான தேர்வு நடந்தது. அதில் கலந்துகொண்டு, லதாமங்கேஷ்கரின் பாடலைப் பாடிக்காட்டினார். தேர்வுக்குழுவில் இருந்த இசையமைப்பாளர்கள் ஆர்.சுதர்சனம் மற்றும் கோவர்த்தனம் இருவருக்கும் ஜானகியின் குரல் பிடித்துவிட்டது. மாதச் சம்பள அடிப்படையில் பாடுவதற்கு ஏவி.எம்மில் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

ஜானகி பாடிய முதல் படம் ‘விதியின் விளையாடல்’. அந்தப்படம் தமிழில் வெளியாகவில்லை, தெலுங்கில் மட்டும் திரை கண்டது. அதில் இரண்டு பாடல்களை சலபதிராவ் இசையில் பாடியிருந்தார்.  இவரது குரலைத்தாங்கி வந்த முதல் தமிழ்ப்படம் ‘மகதலநாடு மேரி’. ஆர்.பார்த்தசாரதியின் இசையில் பி.பி.நிவாஸ் கூட்டணியில் ‘கண்ணுக்கு நேரே மின்னிடும் தாரை…’ என்ற பாடலைப் படினார். முதல் பாடலைப்பாடிய அந்த வருடத்தில் ஆறு மொழிகளில் நூறு பாடல்களைப்பாடி சாதனை படைத்தார் ஜானகி.

இளையராஜா இசையில் ‘ருசி கண்ட பூனை’ படத்தில், குழந்தைக்குரலில் ஜானகி பாடிய ‘கண்ணா நீ எங்கே…’ பாடல் பெரியவர்களுக்கும் பிடித்தது; சிறுவர்களையும் இழுத்தது. ‘மவுனப்போராட்டம்’ என்ற  படத்துக்கு இசையமைத்தார். அதுவே முதலும் முடிவுமாக அமைந்துவிட்டது.

கு. மா. பாலசுப்ரமணியம் வரிகளில் எஸ்.எம் சுப்பையா நாயுடு இசையமைப்பில், காருகுறிச்சி அருணாசலத்தின்  நாகஸ்வரம் இசைக்காற்றைத் தூவிவிட,  ‘உன் இசை என்ற  இன்ப வெள்ளத்திலே நீந்துவதற்கு  ஓடோடி வந்த  என்னை ஏமாத்தாதே சாந்தா!’’ என்று ஜெமினிகணேசன் கெஞ்ச, ‘சிங்கார வேலனே தேவா…’ என்று கொஞ்சும் குரலில் ‘கொஞ்சும் சலங்கை’ படத்தில் பாடிய தேவாமிர்தப் பாடல்தான்  ஜானகியின் பாட்டு வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட பொக்கிஷம்.

1977ல் இளையராஜா இசையில் ‘16 வயதினிலே’ படத்தில் பாடிய ‘செந்தூரப்பூவே… செந்தூரப்பூவே…’ பாடலுக்காக தேசிய விருது பெற்றார் ஜானகி. இதுவரை நான்கு தேசிய விருதுகளைப்பெற்றுள்ளார். இவரது குரலுக்குக் கிடைத்திருக்கும் மாநில அரசு விருதுகள் 31. தமிழக அரசு ‘கலைமாமணி’ விருது கொடுத்து பெருமைப்படுத்தியிருக்கிறது. மைசூர் பல்கலைக்கழகம் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்திருக்கிறது.

இளையராஜா இசையில் ‘தேவர் மகன்’ படத்தில் கமல்ஹாசனுடன் இணைந்து பாடிய ‘இஞ்சி இடுப்பழகா…’ பாடல் மிகப்பெரிய வெற்றி பெற்றதுடன், ஜானகிக்கு தேசிய விருதுப் பரிசையும் அள்ளித் தந்தது. இளையராஜாவின் எல்லா மொழிப்படங்களிலும் ஜானகிக்கு பாடல் வாய்ப்பு இருக்கும். அவரது இசையில் அதிக பாடல்கள் பாடிய பின்னணிப்பாடகி என்ற பெருமையும் ஜானகிக்கு உண்டு.

கே.வி.மகாதேவன் இசையில் ‘சங்கராபரணம்’ படத்தில்  எஸ்.பி.பியுடன் இணைந்து பாடிய ‘ராகம் தானம் பல்லவி…’, ‘புதிய வார்ப்புகள்’ படத்தில் ‘வான் மேகங்களே…’, ‘படிக்காதவன்’ படத்தில் ‘ஜோடிக்கிளி எங்கே…’, ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ‘காதலன்’ படத்தில் ‘எர்ரானி குர்ரானி…’, ‘முதல் மரியாதை’யில் ‘ராசாவே உன்ன நம்பி…’, ‘வைதேகி காத்திருந்தாள்’ படத்தில் வாழாவெட்டி இளம்பெண்களின் குரலாக ஒலித்த ‘அழகு மலராட…’, ‘மறுபக்கம்’ படத்தில் ‘ஆச அதிகம் வச்சு…’, ‘சலங்கை ஒலி’யில் ‘இது மெளனமான நேரம்…’,

‘காக்கிச்சட்டை’யில் ‘கண்மணியே பேசு…’, ‘வானிலே தேனிலா…’, ‘நினைவெல்லாம் நித்யா’வில் ‘ரோஜாவைத் தாலாட்டும் தென்றல்…’, தத்தகார மெட்டமைப்புக்கு உதாரணமாகத் திகழும் ‘வறுமையின் நிறம் சிவப்பு’ பட ‘சிப்பியிருக்குது முத்தும் இருக்குது…’, ‘எஜமான்’ படத்தில் ‘ஒருநாளும் உனை மறவாத…’, ‘ராஜ பார்வை’யில் ‘அந்திமழை பொழிகிறது…’,  ‘ஜானி’ படத்தில் ‘காற்றில் எந்தன் கீதம்...’, நெஞ்சத்தைக் கிள்ளாதே’ படத்தில்  ‘பருவமே புதிய பாடல்...’, விமர்சனத்துக்குள்ளான ‘சகலகலா வல்லவன்’ படத்து ‘நேத்து ராத்திரி எம்மா…’ என ஜானகியின் வெற்றிப்பாடல்களின் வரிசை நீளமானது.

2013ஆம் ஆண்டில் இந்திய அரசின் உயர்ந்த அங்கீகாரமான ‘பத்மபூஷண்’ விருது இவருக்கு வழங்கப்பட்டது. ‘தென்னிந்தியப் பாடகர்களை மத்திய அரசு புறக்கணிக்கிறது. எங்களுக்கானஅங்கீகாரம்  தாமதமாகவே கிடைக்கிறது. எனவே இந்த விருதை நான் வாங்கப் போவதில்லை’ என்று அறிவித்த தன்மானத்துக்கு உரியவர் ஜானகி.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, பெங்காலி, கொங்கணி, துளு, ஒரியா, செளராஷ்ட்ரா, படுகா, சமஸ்கிருதம், ஆங்கிலம், ஜப்பான், ஜெர்மன் ஆகிய மொழிகளில் 30 ஆயிரம் பாடல்களுக்கும் மேல் பாடியுள்ள ஜானகி, ஒரு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் திரைப்பாடல்களின் பக்கம் திரும்பியிருக்கிறார். ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தில் இவரும் தனுஷும் பாடிய  ‘அம்மா அம்மா …’ பாடல் உருக்கத்தின் உச்சமாக இருந்து மெச்ச வைத்தது.
‘நைட்டிங்கேல் ஆஃப் சவுத் இண்டியா’ என்று புகழப்படும் ஜானகியின் பாட்டுச்சாலைப் பயணம் தொடர்கிறது.

அடுத்த இதழில்
இசையமைப்பாளர்
எஸ்.வி.வெங்கட்ராமன்