காமெடி மசாஜ்!
பாலக்காட்டு மாதவன்
பேய்ப்படங்களின் முற்றுகைக்கு நடுவே வந்திருக்கும் தாய்ப்படம் இது. பொறுப்பில்லாத கணவன் கதாபாத்திரத்தில் பொறுப்பாக நடித்து பூங்கொத்துகளை அள்ளுகிறார் விவேக். பேராசைப்படும் கணவனைத் திருத்துவதற்காகப் போராடும் கேரக்டரில் வாழ்ந்திருக்கிறார் சோனியா அகர்வால்.
மனைவியுடன் ஒரே அலுவலகத்தில் பணிபுரியும் விவேக், வாய்க்கொழுப்பின் காரணமாக வேலையை இழக்கிறார். மனைவியின் பணத்தில் சொந்தத் தொழில் தொடங்கப் போவதாக பணத்தை இழக்கிறார்.
விவேக்கிற்கும் சோனியா வுக்கும் சண்டை முற்றுகிறது. ஒருகட்டத்தில், முதியோர் இல்லத்தில் இருக்கும் பணக்கார ஷீலா பாட்டியை தத்து எடுக்கிறார். பாட்டியின் வங்கி வட்டி வருமானத்தில் வாழ்க்கை ஓடுகிறது. இந்நிலையில் அவருக்கு ஒரு பிரச்னை வருகிறது. இதையெல்லாம் சீனுக்கு சீன் சிரிப்பு தடவி சொல்லியிருக்கிறார்கள்.
விவேக்கின் வித்தியாசமான கெட்-அப்புடன் நடிப்பிலும் சால்ட் அண்ட் பெப்பர் மட்டுமல்லாமல் ஸ்வீட்டும் இருக்கிறது. அழுதுவடியும் முகமும், அழகு ஒழுகும் இடுப்புமாக வலம் வருகிறார் சோனியா அகர்வால். பாரதிராஜா வாய்ஸில் விவேக் பேசும் வசனத்துக்கு விசிலும் கைதட்டலும் கைகோர்க்கின்றன.
சிங்கிள் மீனிங், டபுள் மீனிங் என்று களைகட்டும் காமெடிக்கதையின் க்ளைமாக்ஸ் காட்சியில், ரசிகர்களின் கண்களில் ஈரத்தைத் தூவுகிறார் விவேக்.சந்திரமோகன் அழகான குடும்பக் கதையை எழுதி இயக்கியிருக்கிறார். உப்புமா கிண்டுவது உள்ளிட்ட காமெடிக்காட்சிகளுக்கு கட் கொடுப்பது நல்லது. பாலக்காட்டு மாதவன் - காமெடி மசாஜ்
|