அம்மாவை தத்தெடுத்த விவேக்!காமெடியன்கள் கதாநாயகன்களாக நடிக்கும் சீசன் இது. வடிவேலு, சந்தானம் வரிசையில் விவேக் மீண்டும் கதாநாயகனாக நடிக்கும் படம் ‘  பாலக்காட்டு மாதவன்’. ஆடியோ ரிலீஸ் முடிந்த கையோடு டி.டி.எஸ் மிக்ஸில் இருந்த இயக்குனர் சந்திரமோஹனிடம் பேசினோம்.

‘‘இது எந்தளவுக்கு பக்கா காமெடிப் படமோ அதேயளவுக்கு கமர்ஷியல் படம். விவேக் ஸ்கிரீன்ல அரை மணி  நேரம் வந்தாலே காமெடி அள்ளும்.  இதில் அவர்தான் ஹீரோ என்பதால் நான்-ஸ்டாப் காமெடி வழங்கியிருக்கிறார். மனைவியை விட அதிகம் சம்பாதிக்க வேண்டும் என்று நினைக்கும்  விவேக், அதற்காக எடுக்கும் முயற்சிதான் படம். சோனியா அகர்வாலுக்கு இல்லத்தரசி கேரக்டர்.

அதே சமயம் அவருக்கான கிளாமர் லுக்கும் இருக்கும். அவருடைய இன்வால்வ்மென்ட்டைப் பற்றிச் சொல்ல வேண்டும். ஒரு சீனில் அவருடைய  இடுப்பை விவேக் கிள்ள வேண்டும். அந்த சீனை மாற்றி அமைத்துக் கொள்ளலாம் என்று விவேக் சார் சொல்லியும் சோனியா, இதுவும் நடிப்புதான்  என்று அந்தக் காட்சியில் நடித்தார்.

‘செம்மீன்’ ஷீலா முரட்டு அம்மாவாக வர்றார். வழக்கமாக குழந்தைகளைத்தான் தத்து எடுப்பார்கள். இதில் அம்மாவை தத்து  எடுத்திருப்பார் விவேக்.  காந்த் தேவா இசையில் முதன் முறையாக விவேக் எழுதி அனிருத் பாடியிருக்கும் ‘உச்சியிலே உச்சியிலே...’ பாடல்  பெரிய ஹிட். மலையாளத்தில் சில  படங்கள் இயக்கியிருந்தாலும் தமிழில் இதுதான் முதல் படம். ஆதரவு ப்ளீஸ்!’’ என்கிறார் சந்திரமோஹன்.

-எஸ்